சுசீந்திரம் அருள்மிகு ஸ்ரீ தாணுமாலய சுவாமி கோவில் மார்கழி பெருந்திருவிழா கொடியேற்றத்துடன் துவங்கியது..!
கன்னியாகுமரி மாவட்டம் சுசீந்திரம் அருகே ஊரில் அமைந்துள்ள தாணுமாலயன் கோயில் தமிழகத்தில் புகழ் பெற்ற தலமாகும் . இரண்டாயிரம் ஆண்டுகளுக்கு மேல் பழமை வாய்ந்த இந்த ஆலயத்தில் சிவன், விஷ்ணு, பிரம்மா ஆகிய முப்பெருங்கடவுள்களும் ஒன்றின் மேல் ஒன்றாக அமைந்துள்ளது இதன் சிறப்பு ஆகும். சைவமும், வைணவமும் இணைந்து காணப்படும் இடம் சுசீந்திரம். ‘சுசீ’ என்றால் ‘தூய்மை’ என்று பொருள். இந்திரன் இங்கு தூய்மை பெற்றதால் சுசியம், இந்திரனும் இணைந்து சுசீந்திரம் என அழைக்கப்படலாயிற்று. திருமணமான புதுமணத்தம்பதிகள் இங்கு வந்து வழிபடுவது கன்னியாகுமரி மாவட்டத்தில் வழக்கம்.
இக்கோவிலில் மார்கழி பெருந்திருவிழா வெகுவிமரிசையாக கொண்டாடப்படுவது வழக்கம். அதேபோல, இந்த ஆண்டுக்கான திருவிழா நேற்று காலை கொடியேற்றத்துடன் தொடங்கியது. அதிகாலை 4 மணிக்கு கணபதி ஹோமமும், சுவாமிக்கு சிறப்பு பூஜைகளும் நடந்தது. காலை 8.45 மணி அளவில் கொடிபட்டத்தை மேளதாளம் முழங்க ஊர்வலமாக 4 ரதவீதிகள் வழியே கொண்டு சென்று மீண்டும் கோவிலுக்குள் கொண்டு வந்தனர். சரியாக 9.30 மணியளவில் மேளதாளத்துடன் கொடிபட்டத்தை தெற்குமண் மடம் திலீபன் நம்பூதிரி கொடிமரத்தில் ஏற்றி வைத்தார். பின்னர் கொடிபீடத்திற்கு சிறப்பு பூஜைகளும், அபிஷேகங்களும், அலங்கார தீபாராதனைகளும் நடந்தன. இதனை வட்டப்பள்ளி மடம் ஸ்தானிகர் சர்மா செய்தார். பின்னர் தேர்களுக்கு கால்கோள் விழா நடந்தது. இந்த திருவிழாவில், தினமும் வாகன பவனி, சப்பர ஊர்வலம், சமய சொற்பொழிவு, இன்னிசை கச்சேரி நடைபெறுகிறது.
பின்னர் வரும் 9-ந் தேதி காலை 7.45 மணிக்கு மேல் தேரோட்டம் நடக்கிறது. இதில் சுவாமி தேர், அம்மன் தேர், பிள்ளையார் தேர் ஆகிய தேர்கள் உலா வருகின்றன. அன்று நள்ளிரவு 12 மணிக்கு சப்தாவர்ண நிகழ்ச்சியும், மறுநாள் அதிகாலை 4 மணிக்கு ஆருத்ரா தரிசனமும் நடக்கிறது. இதற்கான ஏற்பாடுகளை குமரி மாவட்ட திருக்கோவில் நிர்வாகமும், அறங்காவலர் குழுவினரும், பக்தர்களும், ஊர் பொதுமக்களும் இணைந்து செய்து வருகின்றனர். இந்த நிகழ்ச்சியில் குமரி மாவட்ட கோவில்களின் இணை ஆணையர் அன்புமணி, அறங்காவலர் குழுவினர் மற்றும் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்து கொண்டனர்.
Leave your comments here...