ரயில்வே வேலை தொடர்பான நில மோசடி வழக்கு – அமலாக்கத் துறை விசாரணைக்கு ஆஜரானா லாலு பிரசாத் யாதவ்..!
ரயில்வே துறையில் பணி வழங்க நிலத்தை லஞ்சமாக பெற்ற வழக்கில் முன்னாள் ரயில்வே அமைச்சரும், பிஹார் முன்னாள் முதல்வரும், ராஷ்ட்ரீய ஜனதா தளத் தலைவருமான லாலு பிரசாத் யாதவ் அமலாக்கத் துறை விசாரணைக்கு இன்று ஆஜரானார்.
2004 முதல் 2009 வரை ஐக்கிய முற்போக்கு கூட்டணி ஆட்சியில் ரயில்வே அமைச்சராக லாலு பிரசாத் யாதவ் இருந்தார். அப்போது, குருப் டி பிரிவுக்கு தற்காலிக பணியாளர்கள் தேர்வு செய்யப்பட்டனர். அவர்கள் லஞ்சமாக நிலங்களைக் கொடுத்ததை அடுத்து நிரந்தரப் பணியாளர்களாக ஆக்கப்பட்டனர். லாலு பிரசாத் யாதவின் மனைவி ராப்ரி தேவி, மிசா பாரதி உள்ளிட்டோரின் பெயர்களில் நிலங்கள் குறைந்த விலைக்கு விற்கப்பட்டு பத்திரப் பதிவு நடைபெற்றுள்ளது. இந்த ஊழலில், லாலு பிரசாத் யாதவ், ராப்ரி தேவி, மிசா பாரதி, தேஜஸ்வி யாதவ், அப்போதைய ரயில்வே பொது மேலாளர் உள்பட மொத்தம் 17 பேர் மீது அமலாக்கத்துறை குற்றம் சாட்டியுள்ளது. கடந்த 2022, மே 18 ஆம் தேதி இது தொடர்பாக பதியப்பட்ட முதல் தகவல் அறிக்கையின் மீது விசாரணை நடத்தப்பட்டு, கடந்த 2023, அக்டோபர் மாதம் குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டது.
இந்நிலையில் இன்று பாட்னாவில் உள்ள அமலாக்கத் துறை அலுவலகத்துக்கு மகள் மிசா பாரதியுடன் லாலு பிரசாத் யாதவ் வந்தார். அப்போது கட்சியின் இரண்டாம் கட்டத் தலைவர்கள் சிலரும், ஏராளமான தொண்டர்களும் அங்கு குவிந்திருந்தனர்.
அப்போது செய்தியாளர்களிடம் பேசிய மிசா பாரதி, அமலாக்கத் துறை விசாரணைக்கு நாங்கள் வருவது புதிதல்ல. அவர்களோடு(பாஜக) செல்லாதவர்களுக்கெல்லாம் இந்த அழைப்பாணை வழங்கப்பட்டு வருகிறது. விசாரணை அமைப்புகள் எப்போதெல்லாம் அழைக்கிறார்களோ அப்போதெல்லாம் நாங்கள் ஒத்துழைப்பு அளித்து வருகிறோம். அவர்கள் கேட்கும் கேள்விகளுக்கு பதில் அளித்து வருகிறோம். அனைத்தும் மக்கள் முன்பாகவே நடந்து கொண்டிருக்கிறது. மக்கள் அனைத்தையும் பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்கள் எனத் தெரிவித்தார்.
Leave your comments here...