நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசே முக்கிய காரணம் – ஆர்.என்.ரவி
சுதந்திர போராட்ட வீரர் நேதாஜி சுபாஷ் சந்திர போசின் 127-வது பிறந்த நாள் விழா இன்று நாடு முழுவதும் கொண்டாடப்பட்டது. சென்னையில் நேதாஜி படத்துக்கு மலர் தூவி மரியாதை செலுத்தப்பட்டது.சென்னை அண்ணா பல்கலைக்கழகத்தில் நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்தநாள் விழா நடந்தது.
இதில் தமிழக கவர்னர் ஆர்.என்.ரவி கலந்து கொண்டார். விழாவில் அவர் பேசியதாவது:-ஆங்கிலேயர்களிடம் நாம் சுதந்திரம் பெறுவதற்கு காந்தியின் போராட்டம் பலன் அளிக்கவில்லை. நாம் சுதந்திரம் பெற்றதற்கு நேதாஜி சுபாஷ் சந்திர போசே முக்கிய காரணம்.நேதாஜியின் இந்திய தேசிய படை ஆங்கிலேய ராணுவத்துக்கு சிம்ம சொப்பனமாக விளங்கியது. நேதாஜியே நமது நாட்டின் தேசத்தந்தை.
வேலு நாச்சியார், வ.உ.சி. போன்றவர்களைப் போல நேதாஜியின் தியாகமும் போற்றப்பட வேண்டும். இந்திய தேசிய காங்கிரசின் போராட்டத்தால் வெளியேறவில்லை என பிரிட்டன் பிரதமர் அட்லி கூறியிருந்தார்.இஸ்லாமிய தலைவர்களின் எண்ணப்படி 1947-ம் ஆண்டு நாடு இரண்டாக பிரிந்தது.இவ்வாறு அவர் பேசினார்.
நேதாஜி பிறந்தநாளையொட்டி கவர்னர் ஆர்.என்.ரவி தனது எக்ஸ் தள பதிவில் கூறியிருப்பதாவது:-“பராக்கிரம தினத்தில், இந்திய தேசிய ராணுவத்திற்கு தலைசிறந்த தலைமையை வழங்கி, ஆங்கிலேயரை எதிர்த்துப் போரிட்டு, அவர்களின் வலிமைக்கு சவால் விடுத்த மாபெரும் தொலைநோக்கு புரட்சியாளர் நேதாஜி சுபாஷ் சந்திரபோசுக்கு நன்றியுள்ள தேசம் மரியாதை செலுத்துகிறது.
Leave your comments here...