போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் – 90 சதவீத பேருந்துகள் வழக்கம்போல ஓடின..!

தமிழகம்

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் – 90 சதவீத பேருந்துகள் வழக்கம்போல ஓடின..!

போக்குவரத்து தொழிற்சங்கங்கள் ஸ்டிரைக் – 90 சதவீத பேருந்துகள் வழக்கம்போல ஓடின..!

காலிப்பணியிடங்களை நிரப்ப வேண்டும், புதிய ஓய்வூதிய திட்டத்தை கைவிட வேண்டும் என்பவை உள்பட 6 அம்ச கோரிக்கைகளை வலியுறுத்தி அரசு போக்குவரத்து கழக தொழிற்சங்கங்கள் கடந்த சில மாதங்களாக கோரிக்கை விடுத்து வந்தன.

இதையடுத்து அரசு தரப்பிலும், போக்குவரத்து தொழிற்சங்கங்கள் தரப்பிலும் பல கட்டங்களாக பேச்சுவார்த்தை நடந்தது. நிதி சுமை காரணமாக பொங்கலுக்கு பிறகு கோரிக்கைகளை நிறைவேற்றுவதாக அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.

ஆனால் தொழிற்சங்க பிரதிநிதிகள் அதை ஏற்க மறுத்தனர்.குறிப்பாக ஓய்வூதியதாரர்களுக்கு நிலுவையில் உள்ள அகவிலைப்படி உயர்வு, ஓய்வு பெறும் தொழிலாளர்களுக்கு பணப்பலன்கள் ஆகிய முக்கியமான பிரச்சினைகள் நீண்டகாலமாக நிலுவையில் இருப்பதால் அதனை மட்டுமாவது நிறைவேற்ற வேண்டும் என்று தொழிற்சங்கத்தினர் வேண்டுகோள் விடுத்தனர்.

இது தொடர்பாக நேற்று நடந்த முத்தரப்பு பேச்சுவார்த்தை தோல்வியில் முடிந்தது. அரசுக்கும், போக்குவரத்து தொழிற்சங்கத்தினருக்கும் இடையே எந்த உடன்பாடும் ஏற்படாததால் இன்று (9-ந்தேதி) முதல் வேலைநிறுத்த போராட்டம் நடத்தப்படும் என்று தொழிற்சங்கங்கள் அறிவித்தன. அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு., ஏ.ஐ.டி.யு.சி. உள்ளிட்ட 15 தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதாக தெரிவித்தன.

அதன்படி நேற்று இரவு முதலே போராட்டத்தில் அண்ணா தொழிற்சங்கம், சி.ஐ.டி.யு, ஏ.ஐ.டி.யு.சி., எச்.எம்.எஸ்., பி.எம்.எஸ்., பாட்டாளி தொழிற்சங்கங்கள் உள்ளிட்ட சில சங்கங்கள் இணைந்து போராட்டத்தில் குதித்தன. ஆளும் கட்சிக்கு ஆதரவான தொ.மு.ச., ஐ.என்.டி.யு.சி., விடுதலை சிறுத்தை, ம.தி.மு.க. உள்ளிட்ட தொழிற்சங்கங்கள் வேலைநிறுத்தத்தில் பங்கேற்கவில்லை.

அ.தி.மு.க. மற்றும் கம்யூனிஸ்டு கட்சிகளை சார்ந்த தொழிற்சங்க தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபட்டனர்.பொங்கல் பண்டிகை காலத்தில் போக்குவரத்து தொழிலாளர்கள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடுவதால் பொதுமக்களின் வெளியூர் பயணம் எவ்விதத்திலும் பாதிக்கப்படாமல் இருக்க அரசு முன் எச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது.

பொங்கல் சிறப்பு பஸ்கள் 12-ந்தேதி முதல் இயக்கப்படுகிறது. முன் பதிவு செய்த பயணிகள் சொந்த ஊர்களுக்கு செல்வதில் எவ்வித சிரமமும் இல்லாமல் பயணத்தை தொடர அரசு பஸ்களை முழுமையாக இயக்க தேவையான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டன.

மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படாத வகையில் முழு அளவில் பஸ்களை இயக்க நேற்று இரவு முதல் நடவடிக்கை எடுக்கப்பட்டது. 8 போக்குவரத்து கழகங்களிலும் உள்ள பஸ்களை முழு அளவில் இயக்க அனைத்து ஊழியர்களையும் பணிக்கு வருமாறு அழைப்பு விடுக்கப்பட்டது.விடுப்பில் இருந்தவர்கள் வேலைக்கு வராவிட்டால் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டது.

அதனை தொடர்ந்து தமிழகம் முழுவதும் இன்று அரசு பஸ்கள் முழுமையாக இயக்க போக்குவரத்து கழக அதிகாரிகள் அனைத்து முன் ஏற்பாடுகளையும் செய்தனர்.அதன்படி இன்று அதிகாலை 5 மணி முதல் அரசு பஸ்கள் டெப்போக்களில் இருந்து ஒவ்வொன்றாக புறப்பட்டன. தமிழகம் முழுவதும் பெரும்பாலான பஸ்கள் எந்தவித இடையூறும் இல்லாமல் வழக்கம் போல சேவையை தொடங்கின.

அனைத்து பணிமனைகளுக்கும் இன்று அதிகாலையிலேயே டிரைவர்கள், கண்டக்டர்கள் வந்தனர். அவர்கள் பஸ்களை வெளியே எடுக்கும்போது பல்வேறு இடங்களில் தொழிற்சங்கத்தினர் எதிர்ப்பு தெரிவித்து முழக்கமிட்டனர்.அங்கு பாதுகாப்புக்கு போடப்பட்டிருந்த போலீசார் அவர்களை அப்புறப்படுத்தினார்கள். பிறகு பஸ்கள் பணிமனையில் இருந்து பஸ் நிலையங்களுக்கு சென்றன. காலை 8 மணி நிலவரப்படி தமிழகம் முழுவதும் சுமார் 95 சதவீத பஸ்கள் இயக்கப்பட்டன.

தமிழகத்தில் காலை 10 மணி நிலவரப்படி இயக்க வேண்டிய 16,144 பஸ்களில் 15,322 பஸ்கள் இயக்கப்பட்டன. அரசு விரைவு பஸ்கள் (எஸ்.இ.டி.சி) 100 சதவீதம் இயக்கப்பட்டது. சென்னையில் 95 சதவீத பஸ்கள் இயங்கின.போலீஸ் பாதுகாப்புடன் பஸ்கள் வெளியே வந்தன. நகர பஸ்கள், வெளியூர் செல்லக்கூடிய பஸ்கள் பெரும்பாலானவை இயக்கப்பட்டதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பாதிக்கப்படவில்லை.

சென்னை, கோவை, மதுரை, சேலம், திருச்சி, திருநெல்வேலி, விழுப்புரம், தஞ்சாவூர், கும்பகோணம், புதுச்சேரி, திருப்பூர், ஓசூர், தர்மபுரி, நாகர்கோவில், கன்னியாகுமரி உள்ளிட்ட பல்வேறு நகரங்களில் பஸ் போக்குவரத்து சீராக நடைபெற்றது.சென்னையில் மாநகர போக்குவரத்து கழகம் சார்பில் தினமும் 3233 பஸ்கள் இயக்கப்படும். இன்று காலை 7 மணி நிலவரப்படி 3092 பஸ்கள் இயக்கப்பட்டதாக மேலாண்மை இயக்குனர் ஆல்பி ஜான் வர்கீஸ் தெரிவித்தார்.சென்னையில் உள்ள 32 டெப்போக்களில் இருந்தும் வழக்கமான அளவு பஸ்கள் இயக்கப்பட்டன. இதனால் பொதுமக்கள் எப்பொழுதும் போல் பயணம் செய்தனர். மகளிர் இலவச பயணத்தை தொடர்ந்தனர்.ஒரு சில டெப்போக்களில் போராட்டக்காரர்கள் கூட்டமாக நின்று கோஷங்களை எழுப்பி எதிர்ப்பு தெரிவித்தனர்.

பூந்தமல்லியில் 80 சதவீத பஸ்கள் இன்று இயக்கப்பட்டன. திருவள்ளூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு மாவட்டங்களில் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் பஸ்கள் இயக்கப்பட்டன.பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தத்தால் பொதுமக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் தற்காலிக டிரைவர், கண்டக்டர்கள் பணிக்கு அழைக்கப்பட்டனர். ஏற்கனவே ஒப்பந்த அடிப்படையில் வேலை செய்தவர்களை மீண்டும் பணிக்கு வரவழைத்தனர்.

இது தவிர ஐ.ஆர்.டி.யில் பயிற்சி பெறுகின்ற டிரைவர்களும் நேற்றிரவு அழைக்கப்பட்டு பணி வழங்கப்பட்டுள்ளது. தொழிலாளர்களின் போராட்டத்தை சமாளிக்க அனைத்து போக்குவரத்து கழகங்களிலும் தற்காலிகமான டிரைவர், கண்டக்டர்கள் நியமிக்கப்பட்டு பணியில் அமர்த்தப்பட்டுள்ளனர்.

இதனால் பொங்கல் சிறப்பு பஸ்கள் உள்ளிட்ட வழக்கமான பஸ் போக்குவரத்தில் எவ்வித பாதிப்பும் ஏற்படாது. வழக்கமான அளவு பஸ்கள் இயக்கப்படுவதால் பஸ் ஊழியர்களின் வேலைநிறுத்தம் பிசுபிசுத்தது.

Leave your comments here...