தலைமை தேர்தல் ஆணையர், தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா நிறைவேற்றம்..!!
பெரும்பாலான எதிர்க்கட்சி எம்.பி.கள் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ள நிலையில், தலைமை தேர்தல் ஆணையர் மற்றும் தேர்தல் ஆணையர்கள் நியமன மசோதா 2023 வியாழக்கிழமை மக்களவையில் நிறைவேறியது. முன்னதாக, இம்மாதத்தின் துவக்கத்தில் மாநிலங்களவையில் இந்த மசோதா நிறைவேற்றப்பட்டிருந்தது குறிப்பிடத்தக்கது.
இந்தியத் தேர்தல் ஆணையரை பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய குழுவே நியமிக்க வேண்டும் என்ற உச்ச நீதிமன்றத்தின் உத்தரவினை இந்த புதிய மசோதா கேள்விக்குட்படுத்துகிறது. முன்னதாக, தலைமைத் தேர்தல் ஆணையர் மற்றும் பிற தேர்தல் ஆணையர்களை, பிரதமர், மக்களவை எதிர்க்கட்சித் தலைவர், உச்ச நீதிமன்றத் தலைமை நீதிபதி ஆகியோர் அடங்கிய மூவர் குழு தேர்வு செய்ய வேண்டும் என்று நீதிபதி கே.எம்.ஜோசப் தலைமையிலான ஐந்து நீதிபதிகள் அடங்கிய உச்ச நீதிமன்ற அரசியல் சாசன அமர்வு கடந்த மார்ச் மாதம் தீர்ப்பளித்தது.
மேலும், நாடாளுமன்றத்தில் சட்டம் இயற்றும் வரை இந்த விதிமுறை தொடரும் என்றும் ஒருமனதாக தீர்ப்பில் தெரிவிக்கப்பட்டிருந்தது. தேர்தல் ஆணையர்களின் சுதந்திரத்தை உறுதி செய்யும் உச்ச நீதிமன்றம் இந்த உத்தரவை பிறப்பித்திருந்தது.
இந்நிலையில், தேர்தல் ஆணையரைத் தேர்வு செய்யும் நடைமுறையில் இருந்து உச்ச நீதிமன்றத்தினை விலக்கி வைக்கும் வகையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதிக்கு மாற்றாக கேபினெட் அமைச்சர் ஒருவர் தேர்வுக் குழுவில் இடம்பெறுவதற்கு ஏற்ப மத்திய அரசு இந்த மசோதாவை உருவாக்கியுள்ளது.
மக்களவையில் இந்த மசோதா மீது வியாழக்கிழமை நடந்த விவாதத்தின்போது பேசிய சட்டத் துறை அமைச்சர், “தேர்தல் ஆணையர்களின் பணி நிலைமைகள் பற்றிய 1991 சட்டம் ஒரு அரைகுறை முயற்சியாகும். முந்தைய சட்டம் கணக்கில் எடுக்கத் தவறிய அனைத்து விஷயங்களையும் இப்புதிய மசோதா உள்ளடக்கியுள்ளது” என்று தெரிவித்தார். பின்னர் குரல் வாக்கெடுப்பு மூலம் இம்மசோதா நிறைவேற்றப்பட்டது.
இந்தப் புதிய மசோதவின்படி, முன்னாள், தற்போதைய தலைமைத் தேர்தல் அதிகாரி, பிற தேர்தல் அதிகாரிகள் அவர்கள் பணியில் இருக்கும்போது கூறிய வார்த்தைகள், நடந்து கொண்ட செயல்களுக்காக அவர்கள் மீது கிரிமினல் சிவில் வழக்கோ நீதிமன்றங்களில் தொடர முடியாது.
இந்த மசோதா மீது மாநிலங்களவையில் நடந்த விவாதத்தில் காங்கிரஸ் எம்.பி. ரன்தீப் சுர்ஜ்வாலா பேசும்போது, “மோடி அரசு இந்திய ஜனநாயகத்தின் மீது தாக்குதல் நடத்துகிறது. இந்திய ஜனநாயகம் மற்றும் தேர்தல் ஆணையத்தின் தன்னாட்சி, அச்சமின்மை மற்றும் நேர்மை போன்றவை புல்டோசரால் அழிக்கப்படுகின்றது” என்று குற்றம்சாட்டியிருந்தது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...