ஊழல் செய்து சொத்து குவிப்பு – போப் பிரான்சிஸின் முன்னாள் ஆலோசகருக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை.!
இத்தாலியின் ரோம் நகரில் உள்ள வாடிகன் சிட்டி, கத்தோலிக்க திருச்சபையின் தலைவரான போப் ஆண்டவரால் நிர்வகிக்கப்படும் நகரம் ஆகும். போப் ஆண்டவரின் கீழ் பல்வேறு நிர்வாக கட்டமைப்புகள் உள்ளன. இதில் போப் ஆண்டவருக்கு அடுத்த இடத்தில் பல்வேறு கார்டினல்கள் பணியில் இருக்கின்றனர்.
அவர்களில் ஒருவர் கார்டினல் ஏஞ்சலோ பெக்கியூ (வயது 75). வாடிகன் நகரின் மூத்த அதிகாரியான இவர், தற்போதைய போப் ஆண்டவரான போப் பிரான்சிஸின் ஆலோசகராக பணியாற்றியவர். ஒரு காலத்தில் போப் ஆண்டவர் பதவிக்கான போட்டியாளராக கருதப்பட்டவர்.
இந்நிலையில் ஏஞ்சலோ பெக்கியூ தனது அதிகாரத்தை பயன்படுத்தி பல்வேறு நிதி முறைகேடுகளை செய்ததாகவும், ஊழல் செய்து சொத்து குவித்ததாகவும் குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பாக வாடிகன் சிட்டி நீதிமன்றத்தில் வழக்கு விசாரணை நடைபெற்றது.
கத்தோலிக்க திருச்சபைக்கு பெரும் நஷ்டத்தை ஏற்படுத்திய லண்டன் சொத்து ஒப்பந்தத்தை மையமாக வைத்து இந்த விசாரணை நடைபெற்றது. இரண்டரை ஆண்டுகள் நீடித்த விசாரணை நிறைவடைந்த நிலையில், நேற்று முன்தினம் (சனிக்கிழமை) தீர்ப்பு வழங்கப்பட்டது.
அப்போது, ஏஞ்சலோ பெக்கியூவுக்கு ஐந்தரை ஆண்டுகள் சிறைத்தண்டனை விதிக்கப்பட்டது. நிதி மோசடி குற்றங்களுக்காக தண்டனை பெற்ற முதல் கார்டினல் இவர் என்பது குறிப்பிடத்தக்கது. ஏஞ்சலோ பெக்கியூ அப்பாவி என்றும், தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்ய உள்ளதாகவும் அவரது வழக்கறிஞர் தெரிவித்தார்.
Leave your comments here...