வள்ளுவன் சொன்ன கவரிமா கவரிமான் ஆனது எப்படி…?

கட்டுரைகள்

வள்ளுவன் சொன்ன கவரிமா கவரிமான் ஆனது எப்படி…?

வள்ளுவன் சொன்ன கவரிமா கவரிமான் ஆனது எப்படி…?

கவரிமான் என்பது மான் இனம் அல்ல, அதன் உண்மையான பெயர் கவரிமா. அதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல. இமயமலையில் வாழும் மாடு வகையை சார்ந்தது, அதுவும் எருமை மாடு வகையைச் சார்ந்ததாகும். இதையே நமது மக்கள் கவரிமான் என்று குழப்பிக் கொள்கிறார்கள்.

கவரிமான் எங்கு வசிக்கிறது..?
முடி விழுந்தால் தற்கொலை செய்து கொள்ளுமா..? எப்படித் தற்கொலை செய்து கொள்ளும்?
“மயிர்நீப்பின் வாழாக் கவரிமா அன்னார் உயிர்நீப்பர் மானம் வரின்.” என்கிறார் திருவள்ளுவர் (969ஆம் குறளில் ) கவரிமான் மயிர் உதிர்ந்தால் தற்கொலை செய்து கொள்ளும். அதே போல மானம் மிக்கவர்கள், தம் பெருமைக்கு இழுக்கு ஏற்பட்டால் தற்கொலை செய்து கொள்வார்கள் என்பது பொதுவாக இந்தக் குறளுக்குக் கூறப்படும் விளக்கம்.

ஆனால் இப்படி ஒரு மான் இருப்பது பற்றி அறிவியல் புத்தகங்களில் இல்லையே ? குழப்பமாக இருக்கிறது அல்லவா? அந்தக் குறளைக் கவனமாகப் பாருங்கள். அதில் சொல்லப்பட்டு இருப்பது “கவரி மான் அல்ல..” கவரி மா…! ஆம். கவரி மா என்று ஒரு விலங்கு இருக்கிறது.  அதைத்தான் நம் மக்கள் கவரி மான் என்று குழப்பி விட்டனர்.

கவரிமான் என்பது மான் இனம் அல்ல அது எருமை வகை சார்ந்தது

புறநானூற்றில் இது பற்றிய குறிப்பு இருக்கிறது..
“நரந்தை நறும்புல் மேய்ந்த கவரி
தண் நிழல் பிணி யோடு வதியும்
வட திசை யதுவே வான் தோய் இமயம்”
இமயமலைப் பகுதியில் , கவரிமா என்ற விலங்கு, நரந்தை எனும் புல்லை உண்டு , தன் துணையுடன் மகிழ்ச்சியாக வாழும்  என்பது இதன் பொருள். அதாவது கவரிமா என்பது தமிழ் நாட்டு விலங்கு அல்ல. இமயமலையில் வாழும் விலங்கு என்பது முதல் வியப்பு.
கவரிமா என்பது மான் வகையைச் சார்ந்தது அல்ல. மாடு வகையைச் சார்ந்தது என்பது அடுத்த வியப்பு. வள்ளுவர் சொன்னது இதைத்தான் .

இந்தக் கவரிமா குறித்து பதிற்றுப் பத்து போன்றவற்றில் குறிப்புகள் உள்ளன…!
முடி சடை போல தொங்கக் கூடிய விலங்குதான் கவரிமா. இந்த முடியை வெட்டி எடுத்து செயற்கை முடி உருவாக்குவது வழக்கம். கவரி என்பதில் இருந்துதான் சவரி முடி என்ற இன்றைய சொல் உருவானது. மா என்பது விலங்குகளுக்கு உரிய பொதுவான சொல்.

இந்தக் குறளுக்குப் பொருள் என்ன.?
பனிப் பகுதியில் வாழும்  கவரிமாவுக்கு , அதன் முடி கடுங்குளிரில் இருந்து பாதுகாப்பு அளிக்கிறது. அதன் முடி நோயினால் உதிர்ந்தாலோ, மனிதர்களால் வெட்டப்பட்டாலோ, குளிரினால் இறந்து விடும். அதே போல சில மனிதர்கள். அவர்கள் பெருமைக்கு இழுக்கு நேர்ந்து விட்டால், அவர்கள் வாழ்வது அரியதாகி விடும். எனவே, குறள் சொல்வதில் தவறு இல்லை. பெரும்பாலான உரைகளும் தவறு இல்லை. ஆனால் கவரிமா வைக் கவரிமான் எனப் புரிந்து கொள்வது தான் தவறு.!

Leave your comments here...