சபரிமலை படிபூஜை – 2038-ம் ஆண்டு வரை முன்பதிவு நிறைவடைந்து.!
சபரிமலை ஐயப்பன் கோவிலில் சுவாமி ஐயப்பனின் சன்னிதானத்திற்கு அடுத்த படியாக பக்தர்களால் உயர்வானதாக போற்றப்படுவது பதினெட்டாம் படி. புனிதமான படிகளாக கருதப்படும் பதினெட்டாம் படி ஐம்பொன்னால் ஆன தகடுகள் பதிக்கப்பட்டு, பாதுகாக்கப்பட்டு வருகிறது.
இந்த ஐம்பொன்களும் மனிதர்களின் ஐம்புலன்களையும் குறிப்பதாகும். மாலை அணிந்து, இருமுடி கட்டி, 41 நாட்கள் விரதம் இருந்து வரும் பக்தர்கள் மட்டுமே பதினெட்டாம் படி ஏறுவதற்கு அனுமதிக்கப்படுவார்கள்.
பதினெட்டு படிகளிலும் 18 தேவதைகள் வசிப்பதாக ஐதீகம். ஐயப்பன் கோவிலை சுற்றி உள்ள பொன்னம்பலமேடு, கெளதமலை, நாகமலை, சுந்தரமலை, கரிமலை, மதங்கமலை, மயிலாடும்மலை, ஸ்ரீபாதமலை, தேவர்மலை, நிலக்கல்மலை, தலப்பரமலை, சித்தம்பலமலை, கால்கிமலை, புதுசேர்யமலை, கலகேட்டிமலை, இஞ்சிப்பாறைமலை, நீலிமலை, சபரிமலை போன்ற 18 மலைகளிலும் 18 தேவதைகள் வசிப்பதாக ஐதீகம்.
இந்த 18 தேவதைகளையும் திருப்பதிப்படுத்துவதற்காக மாதந்தோறும் சபரிமலை ஐயப்பன் கோவில் நடை திறக்கப்படும் போது படிபூஜை செய்யப்படுவது வழக்கம்.
சபரிமலையில் உஷ பூஜை, உச்சபூஜை, நித்ய பூஜை, சகஸ்ரகலச பூஜை, படி பூஜை, உதயாஸ்தமன பூஜை உள்பட பூஜைகளும், புஷ்பாபிஷேகம், களபாபிஷேகம், கலசாபிஷேகம் உள்பட ஏராளமான அபிஷேக ஆராதனைகள் நடத்தப்படுகின்றன.
இதில் படிபூஜைக்கு அதிகபட்சமாக ரூ.1 லட்சத்து 37 ஆயிரத்து 900 கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. இதற்கு அடுத்தபடியாக உதயாஸ்தமன பூஜை கட்டணமாக ரூ.61 ஆயிரத்து 800 நிர்ணயிக்கப்பட்டுள்ளது.இவ்வாறு அதிக கட்டணத்தில் நடத்தப்படும் படி பூஜைக்கு வருகிற 2038-ம் ஆண்டு வரை முன்பதிவு நிறைவடைந்து உள்ளது.
இதேபோல் உதயாஸ்தமன பூஜைக்கு 2029-ம் ஆண்டு வரை முன்பதிவு முடிந்துள்ளது. இந்த இரு பூஜைகளும் நீண்ட நேரம் நடத்தப்படும் என்பதால் அய்யப்ப பக்தர்களின் சிரமத்தை தவிர்க்க, சீசன் காலங்களில் நடத்த விலக்கு அளிக்கப்பட்டு உள்ளது. அதாவது மாத பூஜை நாட்கள் மற்றும் விசேஷ நாட்களில் இந்த இரு பூஜைகளும் நடத்தப்படும்
படி பூஜையையொட்டி 18 படிகளையும் கழுவி சுத்தம் செய்து, பட்டு விரித்து, பூக்களால் அலங்காரம் செய்து, 18 படிகளிலும் குத்துவிளக்கு ஏற்றி தந்திரி தலைமையில் படி பூஜை நடத்தப்படும். உதயாஸ்தமன பூஜையையொட்டி காலையில் நடை திறப்பு முதல் இரவு நடை அடைப்பு வரை 18 வகையான சிறப்பு பூஜைகள் நடத்தப்படும்.
அதன்படி ஒவ்வொரு முறையும் நடை திறந்து உதயாஸ்தமன பூஜை நடைபெறுவதால் பக்தர்கள் அந்த நேரத்தில் காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படும். இதை கருத்தில் கொண்டு இந்த 2 பூஜைகளும் மாத பூஜை நாட்களில் நடத்த திருவிதாங்கூர் தேவஸ்தானம் முடிவு செய்துள்ளது.
Leave your comments here...