மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு டிரோன்கள் – மத்திய அரசின் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல்..!
பிரதமர் மோடி தலைமையில் நேற்று(நவ. 28) நடைபெற்ற மத்திய அமைச்சரவைக் கூட்டத்தில், 15 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு டிரோன்கள் வழங்கும் மத்திய அரசின் திட்டத்துக்கு மத்திய அமைச்சரவை ஒப்புதல் அளித்துள்ளது.
இது குறித்து மத்திய தகவல் மற்றும் ஒளிபரப்புத்துறை அமைச்சர் அனுராக் தாக்குர் செய்தியாளர்களிடம் கூறியதாவது, “வேளாண் பணிகளுக்காக விவசாயிகளுக்கு டிரோன்களை வாடகைக்கு விடும் நோக்கில், இத்திட்டத்தின் மூலம், 15 ஆயிரம் தேர்வு செய்யப்பட்ட மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு, 2024-25ல் தொடங்கி 2025-26 வரையிலான காலகட்டத்தில் டிரோன்கள் வழங்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது” என்று தெரிவித்தார்.
இந்த திட்டத்திற்காக ரூ.1,261 கோடி ஒதுக்கப்பட உள்ளதாகவும், 2024-25 நிதியாண்டில் இந்த திட்டம் செயல்படுத்தப்படும் என்றும் அதிகாரப்பூர்வ அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
மேலும், இத்திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட முன்னெடுப்புகளால், 15 ஆயிரம் மகளிர் சுய உதவிக் குழுக்களுக்கு நிலைத்த வணிகத்தையும், வாழ்வாதாரத்திற்கான ஆதரவும் வழங்கப்படும் எனவும், அவர்கள் ஆண்டுக்கு குறைந்தபட்சம் ரூ.1 லட்சம், கூடுதல் வருமானம் ஈட்டவும் முடியும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Leave your comments here...