மாலத்தீவில் இந்திய ராணுவம் வெளியேற வேண்டும்… புதிய அதிபர் முகமது மூயிஸ் அறிவிப்பு – பின்னணியில் சீனா..?
மாலத்தீவுகளிலிருந்து இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் என அந்நாட்டின் புதிய அதிபர் முகமது மூயிஸ் அறிவித்தார்.
அண்மையில் நடந்து முடிந்த மாலத்தீவு தேர்தலில் நடப்பு அதிபரான இப்ராஹிம் முகமது சோலிக்கும், எதிர்க்கட்சியின் முகமது முய்சுவுக்கும் கடும் போட்டி நிலவியது. இப்ராஹிம் முகமது சோலி இந்திய ஆதரவாளர் எனில், முகமது முய்சு சீனாவின் ஆதரவாளர்! தேர்தல் பிரச்சாரத்தின் போதே, ’மாலத்தீவிலிருந்து இந்திய ராணுவத்தை வெளியேற்ற வேண்டும்’ என்று முகமது முய்சு பிரச்சாரம் செய்தார்.
இந்தியப் பெருங்கடல் தீவுக்கூட்டமான மாலத்தீவில் ஆதிக்கம் செலுத்துவதில் இந்தியா – சீனா இடையே போட்டி நிலவியது. இதுவரை இந்தியா கையே அங்கே ஓங்கி வந்தது. அதிக கடன்களை அள்ளித்தந்து இந்தியாவின் அண்டை நாடுகள் ஒவ்வொன்றாக வளைத்து வரும் சீனா, இலங்கையை தொடர்ந்து மாலத்தீவிலும் கண் வைத்தது.
சீனாவுக்கு இடம் கொடாது, இப்ராஹிம் முகமது சோலி ஆட்சி காலத்தில் மாலத்தீவுக்கு சுமார் 16,000 கோடி ரூபாய் வரையிலான உதவிகளை இந்தியா வாரி வழங்கியது. சீனாவும் மாலத்தீவின் உள்கட்டமைப்புக்கான கடனுதவி மற்றும் வளர்ச்சி திட்டங்களில் போட்டியிட்டு பங்கேற்றது.
கடந்த செப்டம்பரில் நடந்த அதிபர் தேர்தலில் எதிர்க்கட்சியான மக்கள் தேசிய காங்கிரசின் முகமது மூயிஸ் 50 சதவீதத்துக்கு அதிகமான ஓட்டுகள் பெற்று கடந்த மாதம் அதிபராக தேர்வு பெற்றார்.
நேற்று (18 ம் தேதி) அரசியலமைப்பு சட்டப்படி நாட்டின் 8-வது அதிபராக அந்நாட்டு தலைமை நீதிபதி முன்னிலையில் பதவியேற்றார்.முகமது மூயிஸ் சீன ஆதரவு நிலைப்பாடு உள்ளவர். ‘நாட்டின் இறையாண்மையை பாதுகாக்க வேண்டி இனி எந்த நாட்டு ராணுவத்திற்கும் இடம் கிடையாது என அறிவித்தார்.
Privileged to call on President H.E. Dr. Mohamed Muizzu.
Conveyed greetings from Hon’ble PM @NarendraModi and reiterated India’s commitment to further strengthen the substantive bilateral cooperation and robust people-to-people ties. pic.twitter.com/nFa95QD9ES— Kiren Rijiju (@KirenRijiju) November 18, 2023
இந்த பதவியேற்பு விழாவில் இந்தியா சார்பில் மத்திய அமைச்சர் கிரண் ரிஜிஜூ கலந்து கொண்டார். இந்தச் சந்திப்பின் போது தான், மாலத்தீவில் உள்ள இந்திய வீரர்களைத் திரும்பப் பெறுமாறு முகமது முய்ஸு அதிகாரப்பூர்வமாகக் கேட்டுக் கொண்டதாக அந்நாட்டு அதிபர் அலுவலகம் செய்தி வெளியிட்டுள்ளது. இதையடுத்து மாலத்தீவில் முகாமிட்டிருந்த இந்திய ராணுவம் வெளியேற வேண்டும் எனவும் அறிவித்தார்.
மேலும், மாலத்தீவில் காலியாகும் இந்திய ராணுவத்தின் இடத்தில் சீனா உட்பட வேறெந்த ராணுவமும் அமர்த்தப்படாது என முகமது முய்சு தற்போது உறுதி தெரிவித்திருக்கிறார். ஆனால் அங்கே ஏற்கனவே சீனா தனது ஆக்கிரமிப்பை தொடங்கிவிட்டது. புதிய அதிபரை வசீகரிக்கும் வகையிலான கடனுதவி மற்றும் கட்டமைப்பு திட்டங்களை அமல்படுத்த காத்திருக்கிறது.
இவை அனைத்தும் இந்தியாவுக்கு பின்னடைவாக அமையக்கூடும். மாலத்தீவில் இந்திய ராணுவத்தின் துருப்புகள் சேவையாற்றுவதன் மூலம் அந்த நாட்டின் பாதுகாப்பு மட்டுமன்றி, பிராந்தியத்தில் இந்தியாவுக்கான பாதுகாப்பையும் உறுதி செய்ய முடிந்தது. இனி சீனாவின் ஆதிக்கம் அங்கே அதிகரிப்பது இந்தியாவுக்கு புதிய குடைச்சலாக மாறக்கூடும்.
Leave your comments here...