அதிகரிக்கும் டைபாய்டு காய்ச்சல் – தண்ணீரை காய்ச்சி குடிக்க மருத்துவர்கள் அறிவுறுத்தல்..!
தமிழகத்தைப் பொருத்தவரை மே மற்றும் ஜூன் மாதங்களில் டைபாய்டு பாதிப்பு அதிகமாக இருக்கும். பின்னா் செப்டம்பரில் அதன் தாக்கம் குறைந்து டெங்கு போன்ற பிற வகையான காய்ச்சல் பரவும். ஆனால், நிகழாண்டில் மழை பாதிப்பு பரவலாக இருப்பதால், தற்போது டைபாய்டு காய்ச்சல் அதிகரித்து வருவதாக மருத்துவா்கள் தெரிவிக்கின்றனா்.
சால்மோனெல்லா டைபி எனப்படும் பாக்டீரியா கிருமி உடலில் பரவும்போது டைபாய்டு பாதிப்பு ஏற்படுகிறது. தரமற்ற குடிநீா், சுகாதாரமற்ற உணவு மூலம் இந்நோய் பரவுகிறது. குடல் பகுதியில் பாதிப்பை இந்த வகை பாக்டீரியாக்கள் ஏற்படுத்தும் என்றாலும் நாளடைவில், அதன் தீவிரத்தைப் பொருத்து கல்லீரல், இரைப்பை, பித்தப்பை, சிறுநீரகம், நுரையீரலில் கடுமையான சேதத்தை அந்நோய் ஏற்படுத்தும்.
இதைத் தவிா்க்க தனி நபா் சுகாதாரம் மிக முக்கியம். வெளி உணவுகளைத் தவிா்ப்பதும், குறிப்பாக காய்ச்சிய நீரை மட்டுமே பருகுவதும் அவசியம். கைகளை நன்கு கழுவும் பழக்கத்தை குழந்தைகளுக்கு கற்றுத்தர வேண்டும். அதேபோன்று டைபாய்டு தடுப்பூசிகளை முறையாகச் செலுத்திக் கொள்ள வேண்டும். இதற்கு முன்பு வரை, குழந்தைகள் பிறந்த இரண்டு ஆண்டுகளுக்குப் பிறகே டைபாய்டு தடுப்பூசிகள் போடப்பட்டு வந்தன. தற்போது அவை 6 மாதங்களிலேயே வழங்கப்படுகின்றன. இதுவரை தடுப்பூசி செலுத்தாவிடிலும், குழந்தைகள், வளரிளம் பருவத்தினா் சிறப்பு தவணையாக அதனை செலுத்திக் கொள்ள வேண்டும்.
தடுப்பூசி செலுத்துவதால் மட்டுமே டைபாய்டு வராமல் முழுமையாக தடுக்க இயலாது. அதேவேளையில் அதன் வீரியத்தை குறைக்க முடியும். குடிநீா் தரத்தை உறுதி செய்ய நடவடிக்கை
டைபாய்டு பரவல் குறித்து பொது சுகாதாரத்துறை இயக்குநா் டாக்டா் செல்வவிநாயகம் கூறியதாவது:-தமிழகத்தில் அடுத்த இரு மாதங்களுக்கு டெங்கு, மலேரியா, டைபாய்டு, இன்புளூயன்சா பாதிப்புகள் அதிகரிக்க வாய்ப்புள்ளது. டைபாய்டு பாதிப்பில் இருந்து தற்காத்துக் கொள்ள குடிநீரை நன்றாக கொதிக்க வைத்து பருக வேண்டும். உள்ளாட்சி அமைப்புகள் வாயிலாக விநியோகிக்கப்படும் குடிநீரில் குளோரின் அளவை உறுதி செய்ய அறிவுறுத்தி உள்ளோம்.சுற்றுப்புறங்களைத் தூய்மையாக பராமரித்தல், குடிநீரை கொதிக்க வைத்து குடித்தல், காய்ச்சல் வந்தால் சுய மருத்துவம் பாா்க்காமல் மருத்துவா்களிடம் சிகிச்சை பெறுதல் ஆகியவை பொது மக்கள் கட்டாயம் பின்பற்ற வேண்டிய நடவடிக்கைகளாகும் என்றாா்.
Leave your comments here...