கோலாகலமாக நடைபெற்ற ராஜராஜ சோழனின் 1,038 ஆம் ஆண்டு சதய விழா..!

தமிழகம்

கோலாகலமாக நடைபெற்ற ராஜராஜ சோழனின் 1,038 ஆம் ஆண்டு சதய விழா..!

கோலாகலமாக நடைபெற்ற ராஜராஜ சோழனின் 1,038 ஆம் ஆண்டு சதய விழா..!

ராஜராஜ சோழனின் 1038-வது சதய விழா தஞ்சை பெரிய கோயிலில் இன்று கோலாகலமாக நடைபெற்றது.

உலக புகழ் பெற்ற தஞ்சாவூர் பெரியகோயிலை கட்டிய மாமன்னன் ராஜராஜசோழன், முடி சூட்டிய நாளை அவன் பிறந்த நட்சத்திரமான ஐப்பசி சதய நாளன்று, ஒவ்வொரு ஆண்டும் சதய விழாவாக கொண்டாடப்படுவது வழக்கம். அதன்படி இந்தாண்டு ராஜராஜ சோழனின் 1038 வது சதய விழா நேற்று, (24 ஆம் தேதி), காலை மங்கல இசையுடன் துவங்கியது.

தொடர்ந்து திருமுறை பாடல்கள், கருத்தரங்கம், 1038 பரதநாட்டிய கலைஞர்கள் பங்கேற்ற நடன நிகழ்ச்சி உள்ளிட்டவை நடைபெற்றன. தொடர்ந்து சதய விழாவான இன்று (25ம் தேதி) ராஜராஜ சோழன் மீட்டெடுத்த பன்னிரு திருமுறைகளுக்கு சிறப்பு தீபாரதனை காண்பிக்கப்பட்டு, ஓதுவார்கள் பன்னிரு திருமுறைப் பாடல்களை பாடி ஊர்வலமாக, யானை மீது எடுத்துச் சென்றனர்.

இதற்கிடையில் பெரிய கோயில் வெளியே உள்ள ராஜராஜசோழன் சிலைக்கு அரசு சார்பில், மாவட்ட ஆட்சியர் தீபக் ஜேக்கப் மாலை அணிவித்தார். இதில்,சதய விழா குழு தலைவர் செல்வம், தருமபுர ஆதீனம் ஸ்ரீலஸ்ரீ மாசிலாமணி ஞானசம்பந்த பரமாச்சாரிய சுவாமிகள், அரண்மனை தேவஸ்தான பரம்பரை அறங்காவலர் பாபாஜி ராஜா போன்ஸ்லே மற்றும் பல்வேறு அதிகாரிகள் கலந்து கொண்டனர். தொடர்ந்து ராஜராஜ சோழன் சிலைக்கு பல்வேறு அமைப்பினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.

இதனை தொடர்ந்து யானை மீது திருமுறை நூல் வைக்கப்பட்டு மங்கள வாத்தியங்கள் முழங்க, திருமுறை வீதி உலா பெரிய கோவிலில் இருந்து புறப்பட்டு நகரின் 4 ராஜவீதிகளில் வலம் வந்தது. அடியார்கள், ஓதுவார்கள் திருமுறை பாராயணம் பாடியப்படி திருவீதி உலா வந்தனர். அப்போது பழங்கால கொம்பு உள்ளிட்ட பல்வேறு அரிய இசைக்கருவிகள் இசைக்கப்பட்டன.

இதில் பெரியகோவில் உருவம் பொறித்த பிரமாண்ட மாதிரி அரங்கம் வாகனத்தில் வைக்கப்பட்டு வீதி உலாவில் பின்தொடர்ந்து வந்தது.தொடர்ந்து பெரிய கோவிலில் பெருவுடையாருக்கு பால், மஞ்சள், தயிர், தேன், எலுமிச்சை சாறு, இளநீர், சந்தனம் உள்ளிட்ட 48 வகையான பொருட்களால் பேரபிஷேகம் செய்யப்பட்டது.தருமபுரம் ஆதீனம் தலைமையில் நடந்த இந்த பேரபிஷேகத்தில் ஆயிரக்கணக்கான பக்தர்கள் கலந்துகொண்டு தரிசனம் செய்தனர்.மதியம் பெருவுடையார், பெரியநாயகி அம்மனுக்கு பெருந்தீப வழிபாடு நடைபெற்றது.

இதையடுத்து மங்கள இசை, நடனம், தேவார இன்னிசை நிகழ்ச்சிகள் நடந்தன.சதய விழாவையொட்டி இன்று உள்ளூர் விடுமுறை விடப்பட்டது. தஞ்சை மாவட்டம் மட்டுமின்றி பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த லட்சக்கணக்கான பக்தர்கள், சுற்றுலா பயணிகள் சதய விழாவில் கலந்து கொண்டனர். இதனால் மாநகர் விழாக்கோலம் பூண்டது. பாதுகாப்பு பணியில் ஏராளமான போலீசார் ஈடுபட்டுள்ளனர்.

Leave your comments here...