ஆர்எஸ்எஸ் மக்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்வதை விரும்புவதில்லை – விஜயதசமி விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேச்சு..!
மகாராஷ்டிர மாநிலம் நாக்பூரில் ஆர்எஸ்எஸ் சார்பில் ஆண்டுதோறும் விஜயதசமி விழா நடத்தப்படுகிறது. அவ்வகையில் இன்று பிரமாண்ட அணிவகுப்புடன் விஜயதசமி விழா நடைபெற்றது.
விழாவில் பாடகர்-இசையமைப்பாளர் சங்கர் மகாதேவன் தலைமை விருந்தினராக கலந்து கொண்டார். ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், மத்திய அமைச்சர் நிதின் கட்காரி, மகாராஷ்டிர துணை முதல்வர் தேவேந்திர பட்னாவிஸ் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.
ஆர்எஸ்எஸ் நிறுவனர் கேபி ஹெட்கேவார் சிலைக்கு ஆர்எஸ்எஸ் தலைவர் மோகன் பகவத், சங்கர் மகாதேவன் ஆகியோர் மலர் தூவி மரியாதை செலுத்தினர்.
#WATCH | RSS holds annual Vijaydashmi Utsav in Nagpur, Maharashtra. pic.twitter.com/oDci1JUSnI
— ANI (@ANI) October 24, 2023
இந்த விழாவில் ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன் பகவத் பேசியதாவது:-அசுரத்தன்மைக்கு எதிராக மனிதகுலத்தின் பரிபூரண வெற்றியை, ஒவ்வொரு வருடமும் விஜயதசமியாக நாம் கொண்டாடுகிறோம்.
பல நூற்றாண்டுகள் சந்தித்த இடர்பாடுகளை வெற்றிகரமாக முறியடித்து, நமது நாடு தற்போது பொருளாதார மற்றும் ஆன்மீக முன்னேற்ற பாதையில் சென்றுகொண்டிருக்கிறது.பாரதத்தின் அடையாளத்தையும் இந்து சமுதாயத்தின் பெருமைகளையும் பேண வேண்டும் என்ற எண்ணம் இயற்கையானது. இன்றைய உலகின் சம காலத் தேவைகளைப் பூர்த்தி செய்ய, பாரதம் தனது சொந்த அடையாளங்களை அடிப்படையாகக் கொண்டு, காலத்திற்குப் பொருத்தமான, புதுப்பொலிவுடன் எழுந்து நிற்க வேண்டும் என்பதே உலக நாடுகளின் எதிர்பார்ப்பாகவும் உள்ளது.
மதங்கள், சம்பிரதாயங்களில் வெறி, ஆணவம், வெறுப்பு ஆகியவற்றை உலகம் எதிர்கொள்கிறது. சுயநலத்தால் உருவாகிய மோதல் மற்றும் தன்னை நிலைநிறுத்தும் தன்மை காரணமாக ஏற்பட்டுள்ள உக்ரைன் மற்றும் காசா போர்களுக்கு எந்த தீர்வும் காணக் கிடைக்கவில்லை. இயற்கைக்கு முரணான வாழ்க்கை முறை, சுயநலம், அளவற்ற நுகர்வு போன்றவற்றால் புதிய உடல், மன நோய்கள் உருவாகின்றன. ஒழுங்கீனங்களும் குற்றங்களும் அதிகரித்து வருகின்றன. அதீத சுயநல காரணங்களால் குடும்பங்கள் உடைகின்றன.
அளவிற்கு மீறி இயற்கையை சுரண்டுதல், மாசுபடுத்தல், புவி வெப்பமடைதல், பருவநிலை மாற்றங்கள் மற்றும் அதன் விளைவாக ஏற்படும் இயற்கை பேரழிவுகள் அதிகரித்து வருகின்றன. பயங்கரவாதம், சுரண்டல் மற்றும் சர்வாதிகாரம் ஆகியவையும் அதிகரித்து வருகின்றன. உலகம் தனது இந்தப் பிரச்சனைகளை எதிர்கொள்ள திறனற்றதாக இருக்கிறது என்பது தெளிவாகிவிட்டது. எனவே, பாரதம் தனது கலாச்சாரம், சனாதனம் (அழிவற்றதன்மை) மற்றும் நற்பண்புகளின் அடிப்படையில், தனது செயல்கள் மூலம் உண்மையான மகிழ்ச்சி மற்றும் அமைதிக்கான புதிய பாதையை உலகுக்குக் காண்பிக்க வேண்டும் என்று எதிர்பார்ப்பு அதிகரித்து வருகிறது.
பாரதத்தின் வடக்கு எல்லைப்பகுதியின் மீது பல ஆண்டுகளாகவே சீனா கண் வைத்திருக்கிறது. எனவே, இந்த பகுதி சிறப்பு புவியியல், மூலோபாய மற்றும் புவிசார் அரசியல் முக்கியத்துவம் வாய்ந்தது. அதை மனதில் வைத்து, விசேஷமான கண்ணோட்டத்தில் இந்த பகுதி குறித்து சிந்திக்க வேண்டும். இன்றைய காலக்கட்டத்தில், சமூகத்தில் கலகம் ஏற்படுத்த முயற்சி நடப்பதை இயல்பாகவே பலர் கவலையோடு பார்க்கின்றனர். இதைப்பற்றி கருத்து பரிமாறிக்கொள்ள அடிக்கடி சந்திக்கின்றனர். தங்களை இந்துக்கள் என்று கூறிக்கொள்பவர்களும் சந்திக்கின்றனர், தங்கள் வழிபாட்டு முறையினால் தங்களை இஸ்லாமியர்கள் மற்றும் கிறிஸ்தவர்கள் என்று கூறிக்கொள்பவர்களும் சந்திக்கின்றனர்.
அனைவருமே சச்சரவு முரண்பாடுகளை தவிர்த்து நல்லிணக்கம், பாதுகாப்பு மற்றும் அமைதியை விரும்புகிறார்கள்.பிரச்சனைகள் உண்மையானவை, ஆனால் அவை ஒரு சாதி அல்லது வர்க்கத்திற்கு மட்டும் அல்ல. அவற்றைத் தீர்ப்பதற்கான முயற்சிகளுடன், நெருக்கம் மற்றும் ஒற்றுமையின் மனநிலையும் உருவாக்கப்பட வேண்டும். பாதிக்கப்பட்ட மனப்பான்மை, ஒருவரையொருவர் அவநம்பிக்கையுடன் பார்ப்பது அல்லது அரசியல் ஆதிக்கத்தின் தந்திரங்களில் இருந்து விலகிச் செல்ல வேண்டும்.
நமது மனங்களை திடமாக வைத்துக்கொண்டு நம்மிடையே பேச்சுவார்த்தைகள் அதிகரிக்கவும், நம்மிடையே புரிந்துணர்வு அதிகரிக்கவும், நம்முடைய பரஸ்பர வழிபாடு, நம்பிக்கைகள் மீது மதிப்பு ஏற்படவும், நம்மிடையே ஒற்றுமை உணர்வு அதிகரிக்கவும் செய்ய வேண்டும்.எந்தவொரு சூழலிலும், எவ்வளவு தூண்டுதல்கள் இருந்தாலும், சட்டம் ஒழுங்கு கடைபிடிக்கப்பட்டு, குடிமக்களின் கடமைகளை பின்பற்றி, அரசியல் சாசனத்தின்படி நடக்கவேண்டியது அவசியமாகும். சுதந்திர நாட்டில் இவை தேச பக்தியின் வெளிப்பாடாக பார்க்கப்படுகிறது. ஊடகங்கள் மூலம் சமுதாயத்தில் உண்மை மற்றும் ஒற்றுமை குறித்து பிரச்சாரம் செய்ய வழிவகை செய்ய வேண்டும்.
வன்முறை மற்றும் அடிதடி பிரச்சனைகளை தீர்க்க, பலம் வாய்ந்த ஒன்றுபட்ட சமுதாயம், சட்டம் ஒழுங்கை நிலைநாட்ட ஏதுவாக ஆட்சியாளர்களுக்கு உறுதுணையாக இருக்கவேண்டும். வரக்கூடிய 2024-ன் தொடக்கத்தில் லோக்சபா தேர்தல் வருகிறது. தேர்தல் காலங்களில் மக்களின், சமுதாயங்களின் உணர்வுகளை தூண்டிவிட்டு ஓட்டு அரசியல் செய்வதை நாம் விரும்புவதில்லை. சமுதாயத்தை துண்டாடக்கூடிய இந்த விஷயங்களில் இருந்து நாம் விலகியிருக்க வேண்டும். ஓட்டளிப்பது ஒவ்வொரு குடிமகனின் கடமை, அதை நாம் அவசியம் செய்ய வேண்டும். நாட்டின் ஒற்றுமை, ஒருமைப்பாடு, இறையாண்மை மற்றும் முன்னேற்றம் குறித்து சிந்தித்து நாம் வாக்களிக்க வேண்டும்.இவ்வாறு அவர் பேசினார்.
Leave your comments here...