மனிதர்களை வின்வெளிக்கு அனுப்பும் ககன்யான் திட்டம் – புகைப்படத்தை வெளியிட்ட இஸ்ரோ..!
வரும் 2024 டிசம்பரில் விண்வெளிக்கு மனிதர்களை அழைத்துச் செல்லும் ககன்யான் விண்கலத்தின் புகைப்படத்தை இந்திய விண்வெளி ஆராய்ச்சி நிறுவனம் (இஸ்ரோ) வெளியிட்டுள்ளது. இந்தப் பணிக்கான ஆளில்லா விண்கலப் பரிசோதனையை விரைவில் தொடங்கவுள்ளதாகவும் இஸ்ரோ கூறியுள்ளது.
ரஷ்யா, அமெரிக்கா, சீனா ஆகிய3 நாடுகள் மட்டுமே விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பியுள்ளன. இந்த சாதனையை எட்ட இந்தியா தீவிர முயற்சி மேற்கொண்டுள்ளது.
இதன்படி கடந்த 2007-ல் ரூ.10,000 கோடி பட்ஜெட்டில் விண்வெளிக்கு மனிதர்களை அனுப்பும் திட்டம் தொடங்கப்பட்டது. கடந்த 2014-ல்இந்த திட்டத்துக்கு ககன்யான் என பெயரிடப்பட்டு ஆராய்ச்சிகள் தீவிரப்படுத்தப்பட்டன.
பூமியிலிருந்து சுமார் 400 கி.மீ. தூர சுற்றுவட்டப் பாதைக்கு விண்கலம் மூலம் 2-3 விண்வெளி வீரர்களை அனுப்பி, அங்கு 1 முதல் 3 நாள் ஆய்வுப் பணிக்குப் பிறகுஅவர்களை பத்திரமாக மீண்டும் பூமிக்கு அழைத்து வருவது, அதாவது குறிப்பிட்ட இந்திய கடல்பகுதியில் இறங்கச் செய்வதுதான் ககன்யான் திட்டத்தின் நோக்க மாகும். வரும் 2024-ம் டிசம்பரில் இத்திட்டத்தை நிறைவேற்ற இலக்குநிர்ணயிக்கப்பட்டுள்ளது.
Mission Gaganyaan:
ISRO to commence unmanned flight tests for the Gaganyaan mission.Preparations for the Flight Test Vehicle Abort Mission-1 (TV-D1), which demonstrates the performance of the Crew Escape System, are underway.https://t.co/HSY0qfVDEH @indiannavy #Gaganyaan pic.twitter.com/XszSDEqs7w
— ISRO (@isro) October 7, 2023
இந்நிலையில் ககன்யான் விண்கலத்தின் புகைப்படங்களை நேற்று இஸ்ரோ வெளியிட்டது. இதுகுறித்து இஸ்ரோ தனது எக்ஸ் சமூக வலைதளப் பதிவில் கூறுகையில், “ககன்யான் திட்டத்தின் ஆளில்லா விண்கலப் பரிசோதனையை இஸ்ரோ தொடங்க உள்ளது. அவசர காலத்தில் ஏவு வாகனத்தில் இருந்து விண்வெளி வீரர்களின் வாகனம் தன்னை விடுவித்துக் கொள்ளும் (க்ரூ எஸ்கேப் சிஸ்டம்) திட்டத்தின் செயல்திறனை இந்த பரிசோதனை வெளிப்படுத்தும். இதற்கான ஏற்பாடுகள் நடந்து வருகின்றன.
இந்தப் பரிசோதனையின் வெற்றி, எஞ்சிய ஆளில்லா விண்கலப் பரிசோதனைகளுக்கு களம்அமைக்கும். இது இந்திய விண்வெளி வீரர்களின் ககன்யான் திட்டப் பயணத்துக்கு வழிவகுக்கும்” என்று கூறப்பட்டுள்ளது.
கட்டமைப்பை தயாரிக்கும் கேசிபி நிறுவனம்: சென்னையைச் சேர்ந்த கேசிபி நிறுவனத்தின் ஹெவி இன்ஜினியரிங் பிரிவு ககன்யான் திட்டத்துக்கு தேவையான உயர் தொழில்நுட்பம் கொண்ட “இன்டகிரேடட் ஏர் ட்ராப் டெஸ்ட்-க்ரூ மாடல்” என்னும் கட்டமைப்பை தயாரித்து இஸ்ரோவிடம் ஒப்படைத்துள்ளது. கேசிபி குழுமத் தலைவரும், நிர்வாக இயக்குநருமான இந்திரா தத், இந்த கட்டமைப்பை இஸ்ரோவின் மனித விண்வெளி விமான மைய செயல் இயக்குநர் ஆர்.ஹட்டன் வசம் வழங்கியதாக இந்நிறுவனம் தெரிவித்துள்ளது.
ககன்யானின் முன்னோட்ட தொழில்நுட்பத் தயார்நிலையை பரிசோதிப்பதற்கும், அதன் திறனை நிரூபிப்பதற்கும் இந்த கட்டமைப்பு மிக முக்கியமானதாகும். சுமார் 3.1 மீ அகலம், 2.6 மீ. உயரம் கொண்ட அலுமினியம், 15சிடிவி6 உருக்கு ஆகியவற்றுடன் 100-க்கும் மேற்பட்ட பாகங்களால் ஏர்ட்ராப் உருவாக்கப்பட்டுள்ளதாக கேசிபி தெரிவித்துள்ளது.
Leave your comments here...