நாட்டு வெடி தயாரிப்பின்போது தீ விபத்து – பலி எண்ணிக்கை 7 ஆக அதிகரிப்பு..!
அரியலூர் மாவட்டம் திருமானூர் அருகே நாட்டு வெடி தயாரிப்பு கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் 7 பேர் சடலமாக மீட்கப்பட்டுள்ளனர். 5 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டம் திருமானூர் அடுத்த வெ.விரகாலூர் கிராமத்தில் திருமழபாடி கிராமத்தை சேர்ந்த ராஜேந்திரன் என்பவருக்கு சொந்தமான நாட்டு வெடி தயாரிப்பு கடை கடந்த 10 ஆண்டுகளாக இயங்கி வருகிறது. இங்கு தீபாவளியையொட்டி நாட்டு வெடிகள் தயாரிப்பு பணிகள் தீவிரமாக நடைபெற்று வந்துள்ளது. இந்த கடையில் அப்பகுதியை சேர்ந்த 30-க்கும் மேற்பட்டோர் வெடி தயாரிப்பு பணியில் ஈடுபட்டு வந்துள்ளனர்.
இந்நிலையில், இன்று காலை 9 மணியளவில் இந்த வெடி தயாரிப்பு கடையில் உராய்வு காரணமாக தீ விபத்து ஏற்பட்டுள்ளது. சுமார் ஒரு மணி நேரத்துக்கும் மேலாக தொடர்ந்து வெடிகள் வெடித்த நிலையில், 10 பேர் அங்கிருந்து தப்பித்து வெளியேறியதாக தெரிகிறது. விபத்தில் பலத்த காயமடைந்த 3 பேரை அப்பகுதி மக்கள் மீட்டு ஆம்புலன்ஸ் மூலம் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்துள்ளனர். தீ பரவல் காரணமாக விபத்து நடத்த பகுதியில் மீட்பு பணியில் தாமதம் ஏற்பட்ட நிலையில், விபத்து நடத்தப் பகுதியில் உயிரிழந்த 4 பேரின் உடல்கள் மீட்கப்பட்டுள்ளன.
எப்போதும் 10 மணிக்கு தான் வேலை ஆட்கள் வந்ததற்கான வருகை பதிவேடு கணக்கெடுக்கப்படும். 9 மணிக்குள்ளாக விபத்து ஏற்பட்டதால், வேலைக்கு வந்தவர்கள் யார், யார் என இதுவரை தெரியவில்லை. இதனால் படுகாயமடைந்தவர்கள் எண்ணிக்கை அதிகரிக்கக் கூடும் என தெரிகிறது. தொடர்ந்து கடைகளில் இருந்த வெடி பொருட்கள் வெடித்து வருவதால், அப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிக்கிறது.
இந்த வெடி விபத்தில் சுமார் ரூ.50 லட்சத்துக்கும் மேலான அளவில் வெடி பெருட்கள் தீயில் கருகி சேதமடைந்துள்ளன. சம்பவ இடத்தில் ஆட்சியர் ஜா.ஆனி மேரி ஸ்வர்ணா பார்வையிட்டு ஆய்வு மேற்கொண்டார். இதே வெடி தயாரிப்பு கடையில் கடந்தாண்டு சிறிய அளவில் வெடி விபத்து ஏற்பட்டத்தில் சுமார் ரூ.50 ஆயிரம் மதிப்பில் வெடிகள் சேதமடைந்தன என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...