மகளிர் இட ஒதுக்கீட்டு மசோதா… வள்ளலார் இருந்திருந்தால் பாராட்டி இருப்பார் – வள்ளலார் பிறந்தநாள் விழாவில் பிரதமர் பேச்சு..!
வள்ளலாரின் 200-வது பிறந்தநாளையொட்டி சென்னை கிண்டியில் உள்ள கவர்னர் மாளிகையில் அவரது சிலை அமைக்கப்பட்டு உள்ளது. அவரது பிறந்தநாள் விழா இன்று கவர்னர் மாளிகையில் நடந்தது.
இதில் கவர்னர் ஆர்.என்.ரவி கலந்துகொண்டு வள்ளலார் சிலையை திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் மத்திய மந்திரி எல்.முருகன் உள்ளிட்ட ஏராளமானோர் பங்கேற்றனர். இவ்விழாவில் பிரதமர் மோடி காணொலி வாயிலாக பங்கேற்று பேசினார்.
அப்போது அவர் கூறியதாவது:-வள்ளலார் எடுத்த முயற்சிகள் புகழ்மிக்கவை. அதற்கு இணையாக நவீன கல்வி திட்டத்துக்கு அவர் அளித்த முக்கியத்துவமும் விளங்குகிறது. இளைஞர்கள் தமிழிலும், சமஸ்கிருதத்திலும், ஆங்கிலத்திலும் புலமை பெற வேண்டும் என்று அவர் விரும்பினார்.
திருவருட்பிரகாச வள்ளலாரின் 200வது பிறந்தநாளை முன்னிட்டு அனைவருக்கும் அன்பான நல்வாழ்த்துக்கள். அனைத்து உயிரினங்களுக்கும் இரக்கம் காட்டும் அவரது செய்தி ஒரு நிலையான உலகத்திற்கு முக்கியமானது. அவரது ஒளி நம் தேசம் பெருமை அடைய வழிகாட்டட்டும். – ஆளுநர் ரவி pic.twitter.com/FlWbH1XInN
— RAJ BHAVAN, TAMIL NADU (@rajbhavan_tn) October 5, 2023
கடந்த 9 ஆண்டுகளில் இந்தியாவின் கல்வி கட்டமைப்பு மாபெரும் வளர்ச்சி கண்டுள்ளது. மூன்று தசாப்தங்களுக்கு பிறகு இந்தியா தேசிய கல்வி கொள்கை பெற்று இருக்கிறது. இக்கொள்கை முழு கல்வித்துறையில் சிறந்த மாற்றம் அடைய வைக்கும்.இதில் புதுமை சிந்தனை, ஆராய்ச்சி, வளர்ச்சி ஆகிய வற்றுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது. பல்கலைக்கழகங்கள், மொழியியல் மற்றும் மருத்துவ கல்லூரிகளின் எண்ணிக்கை கடந்த 9 ஆண்டுகளில் சாதனை அளவாக அதிகரித்துள்ளது.
இப்போது இளைஞர்கள் தங்களது வட்டார மொழிகளிலேயே மருத்துவம், பொறியியல் படிக்க இயலும். இதன் மூலம் இளைஞர்களுக்கு பல வாய்ப்புகள் உருவாகி உள்ளன. வள்ளலார், காலத்திற்கும் முன்னதாகவே சிந்தித்தவர். சமூக சீர்த்திருத்தத்தை எடுத்துக் கொண்டால் கடவுளை பற்றிய வள்ளலாரின் பார்வை பல்வேறு மதங்கள், வகுப்புகள், நம்பிக்கைகள் ஆகியவற்றுக்கு அப்பாற்பட்டவை.
இவ்வுலகின் ஒவ்வொரு அணுவிலும் அவர் கடவுளின் அம்சத்தை கண்டார். தெய்வீக பிணைப்பை மனிதர்களை அங்கீகரிக்க வேண்டும் என்று அவர் வலியுறுத்தினார்.அவரது போதனைகள் அனைவருடனும், அனைவரின் வளர்ச்சிக்காகவும், அனைவரின் நம்பிக்கையுடனும், அனைவரின் முயற்சியுடன் கூடிய சமத்துவ சமுதாயத்தை வலியுறுத்துவதாகும்.
வள்ளலாருக்கு நான் மரியாதை செலுத்தும்போது இதற்கான எனது உறுதிப்பாடு மேலும் வலுவடைகிறது.அனைத்து பாராளுமன்ற, சட்டமன்ற அவைகளிலேயே மகளிருக்கு இட ஒதுக்கீடு வழங்குவதற்கான மகளிர் இட ஒதுக்கீட்டு சட்டத்தை இன்று வள்ளலார் உயிரோடு இருந்திருந்தால் பாராட்டி இருப்பார் என நான் நம்புகிறேன்.
வள்ளலாரின் வார்த்தைகள் வாசிக்கவும், புரிந்து கொள்ளவும் எளிமையானவை. இதனால் சிக்கலான ஆன்மீக ஞான கருத்துக்களை எளிய வார்த்தைகளில் வெளிப்படுத்த முடிகிறது. ஒரு பாரதம், உன்னத பாரதம் என்ற நமது ஒட்டுமொத்த சிந்தனைக்கு வலுசேர்க்க காலமும், இடமும் கடந்த நமது கலாசார பன்முகத்தன்மைக்கு பெரும் ஞானிகளின் போதனைகள் பெரிதும் உதவுகின்றன.அன்பு, இரக்கம், நீதி ஆகியவற்றை வலியுறுத்தும் வள்ளலாரின் போதனைகளை நாம் பரப்புவோம்.
அவரது இதயபூர்வமான சிந்தனைகள் தொடர்பாக நாம் கடினமாக உழைப்போம்.ஒருவரும் பட்டினியுடன் இல்லாதிருக்க வேண்டும் என்பதை உறுதி செய்வோம். ஒவ்வொரு குழந்தைக்கும் தரமான கல்வி வழங்குவோம். இந்த மாமனிதரின் 200-வது பிறந்த தின ஆண்டு விழா கொண்டாட்டத்தின்போது அவருக்கு நான் எனது மரியாதையை மீண்டும் செலுத்துகிறேன்.இவ்வாறு பிரதமர் மோடி பேசினார்.
Leave your comments here...