திருமலையில் மின்சார பேருந்தை திருடி சென்ற மர்ம நபர்கள் – சார்ஜ் தீர்ந்ததும் நிறுத்தி விட்டு ஓட்டம்..!
திருமலையில் பக்தர்களின் வசதிக்காக உபயோகப்படுத்தப்பட்டு வரும் மின்சார பேருந்தை மர்ம நபர்கள் நேற்று அதிகாலை திருடி சென்று விட்டனர். சார்ஜ் தீர்ந்து போனதால் அதனை காளஹஸ்தி அருகே சாலையில் விட்டு சென்றது கண்டுபிடிக்கப்பட்டது.
திருப்பதி ஏழுமலையான் கோயில் பிரம்மோற்சவ விழா வெகு விமரிசையாக நடைபெற்று வருகிறது. நாளையுடன் வருடாந்திர பிரம்மோற்சவம் நிறைவடைய உள்ளது. இந்த விழாவினை காணநாடு முழுவதிலும் இருந்து லட்சக்கணக்கான பக்தர்கள் திருமலைக்கு வந்து செல்வதால், அவர்களுக்கு தேவையான பலத்த பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டுள்ளன. கூடுதலாக 3,700 போலீஸார், 1,200 தேவஸ்தான கண்காணிப்பு பாதுகாவலர்கள், ஊர்காவல் படையினர், ஆக்டோபஸ் சிறப்பு ஆயுதப்படையினர் என திருப்பதி முதல் திருமலை வரை 24 மணி நேரமும் போலீஸார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருவதாக திருப்பதி எஸ்பி பரமேஸ்வர் ரெட்டி தெரிவித்துள்ளார்.
6-ம் நாள் பிரம்மோற்சவம் சனிக்கிழமை நடந்தது. மேலும், புரட்டாசி முதல் நாள் என்பதால் பாதுகாப்பு சற்று அதிகமாகவே இருந்தது. யானை வாகனத்தில் மலையப்பரின் வீதியுலா நடந்து முடிந்தது. இதனால், திருமலையில் பக்தர்களின் வசதிக்காக சுற்றி வரும் இலவச ‘தர்ம ரதம்’ மின்சார பேருந்துகள் சார்ஜ் போட அதற்கான ஸ்டேஷனில் நிறுத்தி வைக்கப்பட்டன. இதில் அனைத்து பேருந்துகளுக்கும் சார்ஜ் போட்டுவிட்டு பேருந்து ஓட்டுநர்கள் களைப்பாக ஆங்காங்கே உறங்கி கொண்டிருந்தனர்.
அந்த சமயம் பார்த்து மர்ம நபர்கள் ஒரு மின்சார பேருந்தை ஓட்டிச் சென்றனர். திருமலையில் உள்ள வாகன சோதனை மையத்தை அந்த பேருந்து நேற்று அதிகாலை 3.53க்கு தாண்டி சென்றது கண்காணிப்பு கேமராவில் பதிவானது. ஆனால், ஏதோ பராமரிப்பு பணிக்காக திருப்பதி பனிமனைக்கு கொண்டு செல்லப்படுவதாக அங்கிருந்தவர்கள் நினைத்து விட்டனர். அதன் பின்னர் ஓட்டு நர்கள் பேருந்தை காணாததால் திருமலை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தனர்.
ஜிபிஎஸ் லொகேஷன் சிஸ்டம் மூலம் காளஹஸ்தி அடுத்துள்ள நாயுடுபேட்டை எனும் இடத்தில் திருடப்பட்ட பேருந்து இருப்பதை போலீஸார் கண்டுபிடித்தனர். சார்ஜ் தீர்ந்து போனதால், பேருந்தை நிறுத்திவிட்டு மர்ம நபர்கள் தப்பி சென்றது தெரியவந்தது. அலட்சியமாக செயல்பட்ட அதிகாரி மற்றும் 2 ஊழியர்கள் சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.
Leave your comments here...