ஊழல் புகார் -ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது..!

அரசியல்

ஊழல் புகார் -ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது..!

ஊழல் புகார் -ஆந்திர மாநில முன்னாள் முதலமைச்சர் சந்திரபாபு நாயுடு கைது..!

கடந்த 2014-17ம் ஆண்டு வரையிலான சந்திரபாபு நாயுடுவின் ஆட்சிக் காலத்தில், திறன் மேம்பாட்டு கழகத்தில் ரூ.317 கோடி ஊழல் நடந்ததாக கடந்த நாலரை ஆண்டுகளுக்கு முன் தொடரப்பட்ட வழக்கில், இன்று (செப்.9) அதிகாலை நந்தியாலாவில் முன்னாள் ஆந்திர முதல்வரும், தெலுங்கு தேசம் கட்சித்தலைவரும், தற்போதைய ஆந்திர எதிர்க்கட்சித் தலைவருமான சந்திரபாபு நாயுடுவை சிஐடி போலீஸார் கைது செய்தனர்.

தெலுங்கு தேசம் கட்சித்தலைவர் சந்திரபாபு நாயுடு கர்னூல் அருகே உள்ள நந்தியாலா மாவட்டத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு வருகிறார். ஆளும் கட்சியினரின் மக்களுக்கு எதிரான ஆட்சி குறித்து அவர் ஊர், ஊராக பேருந்து யாத்திரை மேற்கொண்டு பொதுக்கூட்டங்கள் நடத்தி வருகிறார்.

இந்நிலையில், நந்தியாலா ஆர்.கே திருமண மண்டபம் அருகே அவர் நேற்று இரவு பஸ்ஸை நிறுத்தி அதிலேயே உறங்கச் சென்றார். அவருடன் வந்த தெலுங்கு தேசம் கட்சியைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர்கள், எம்.பி, எம்.எல்.ஏக்கள், கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் ஆகியோர் அந்த திருமண மண்டபத்தின் அருகே இரவு முழுவதும் இருந்தனர். அப்போது டிஐஜி ரகுராம ரெட்டி மற்றும் நந்தியாலா எஸ்பி. ரகுவீரா ரெட்டி தலைமையில் அதிகாலை சுமார் 1 மணியளவில் 6 பஸ்களில் திடீரென அப்பகுதிக்கு வந்த 600க்கும் மேற்பட்ட போலீஸார், அங்கிருந்த தெலுங்கு தேசம் கட்சியினரை அங்கிருந்து செல்ல வேண்டும் என உத்தரவிட்டனர்.

இதனால், கட்சியினருக்கும், போலீஸாருக்கும் இடையே கடும் வாக்குவாதம் ஏற்பட்டது. இதில், பலரை போலீஸார் கைது செய்தனர். சிலரின் வாகனங்களை கிரேன் உதவியோடு அப்புறப்படுத்தினர். அதன் பின்னர் சந்திரபாபு நாயுடு இருந்த பஸ்ஸில் கதவை திறக்க வேண்டுமென வலியுறுத்தி தட்டினர். ஆனால், சந்திரபாபு நாயுடு திறக்க வில்லை. இதனால் அப்பகுதியில் நள்ளிரவு முதல் அதிகாலை வரை பெரும் பரபரப்பு ஏற்பட்டது. அதன் பிறகு இன்று அதிகாலை 5.30 மணிக்கு சந்திரபாபு நாயுடு பஸ் கதவை திறந்து விசாரித்தார். அவருடன் போலீஸார் சுமார் 1 மணி நேரம் பேச்சுவார்த்தை நடத்தினர்.

தாங்கள் ஆட்சியில் இருந்தபோது, திறன் மேம்பாட்டு கழகத்தில் அமைச்சரவையின் ஒப்புதல் இல்லாமல் சில நிறுவனங்களுக்கு ஒப்புதல் வழங்கி, அதன் மூலம் 10 சதவீதம் லஞ்சம் பெற்ற வழக்கில் ரு. 371 கோடி ஊழல் நடந்துள்ளது. அவ்வழக்கில் உங்களை 37-வது குற்றவாளியாக சேர்க்கப்பட்டுள்ளீர்கள். ஆதலால், உங்களை கைது செய்கிறோம் எனக் கூறினர். இதற்கு எஃப ஐ ஆர் உள்ளதா ? ஆதாரங்கள் உள்ளதா ? என சந்திரபாபு நாயுடு கேட்டார். ஆனால், அவையெல்லாம் உங்களைக் கைது செய்து அமராவதிக்கு அழைத்துச் செல்லும் போது, வாட்ஸ் ஆப்பில் அனுப்புகிறோம் என போலீஸார் பதிலளித்து, சந்திரபாபு நாயுடுவை கைது செய்தனர். அதன் பின்னர், அவருக்கு மருத்துவப் பரிசோதனைகள் நடத்தப்பட்டது. பின்னர் சந்திரபாபு நாயுடுவை அவரது கார் மூலமாகவே நந்தியாலம் பகுதியில் இருந்து அமராவதிக்கு பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்றனர்.

ஆந்திராவில் ஸ்தம்பித்த பேருந்து சேவை: சந்திரபாபு நாயுடு கைது தொடர்ந்து, ஆந்திர மாநிலம் முழுவதும் ஆங்காங்கே தெலுங்கு தேசம் கட்சியினர் அதிகாலை முதலே அவரவர் வீடுகளிலேயே கைது செய்து செய்யப்பட்டனர். அதனையும் மீறி வெளியே வந்து போராட்டம் நடத்தியவர்கள் ஏராளமானோரை போலீஸார் கைது செய்தனர். ஆயினும் பேருந்துகள் ஏதும் இயக்கப்பட வில்லை. பணிமனைகளிலேயே அரசுப் பேருந்துகள் நிறுத்தி வைக்கப்பட்டது. ஆந்திரா – தமிழகம், ஆந்திரா-கர்நாடகா, ஆந்திரா-தெலங்கானா மாநில எல்லைகளிலேயே பஸ்கள் நிறுத்தப்பட்டன.

இதனால் பயணிகள் மிகவும் பாதிக்கப்பட்டனர். ஆந்திர மாநிலம் முழுவதும் பேருந்துப் போக்குவரத்து ஸ்தம்பித்தது. திருப்பதி-திருமலை இடையே மட்டும் பேருந்துகள் இயக்கப்பட்டன. பேருந்துகள் மாநிலம் முழுவதும் இயக்கப்படாததால், ரயில்களில் கூட்டம் அலைமோதியது. ஆந்திர மாநிலம் முழுவதும் சாலை மறியல்கள், தர்னாக்கள், போராட்டங்கள் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன,

யாராலும் தடுத்து நிறுத்த முடியாது – சந்திரபாபு
இதனிடையே சந்திரபாபு நாயுடு தனது ட்விட்டர் பக்கத்தில், “கடந்த 45 ஆண்டுகளாக, நான் தன்னலமின்றி தெலுங்கு மக்களுக்கு சேவை செய்து வருகிறேன். தெலுங்கு மக்களின் நலன்களைப் பாதுகாப்பதற்காக என் உயிரைத் தியாகம் செய்யத் தயாராக இருக்கிறேன். தெலுங்கு மக்களுக்கும், எனது #ஆந்திரப்பிரதேசத்திற்கும், எனது தாய்நாட்டிற்கும் சேவை செய்வதை உலகில் உள்ள எந்த சக்தியாலும் தடுக்க முடியாது” என பதிவிட்டுள்ளார்.

கைது தொடர்பாக செய்தியாளர்களிடம் பேசிய அவர், “போலீசார் பொதுமக்களை அச்சத்தில் ஆழ்த்த முயற்சிக்கின்றனர். என்னை ஏன் கைது செய்கிறீர்கள், கைது செய்வதற்கான ஆதாரங்கள் எங்கே என்று அவர்களிடம் கேட்டேன். ஆனால் அவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களிடம் அதிகாரம் உள்ளது, உங்களை கைது செய்கிறோம் என்றார்கள். மிகவும் வேதனையாக உள்ளது. இன்று ஆந்திர போலீசார் ஜனநாயகத்தை பட்டப்பகலில் படுகொலை செய்துள்ளனர்.பொது மக்களுக்கு என அடிப்படை உரிமைகள் உள்ளன. என்னை ஏன் கைது செய்கிறார்கள் என்பதை அறிந்துகொள்ள எனக்கு உரிமை உள்ளது.

அதேபோல், என்னை கைது செய்வதற்கான காரணத்தை சொல்ல வேண்டிய பொறுப்பு போலீசாருக்கு உள்ளது. என்னை கைது செய்வதற்காக நள்ளிரவில் அவர்கள் வந்தனர். நான்கரை ஆண்டுகளாக பொதுப் பிரச்னைகளுக்காகப் போராடி வருகிறேன். என்னைக் கைது செய்து சிறையில் அடைக்கிறார்கள். நேர்மை, நீதி வெல்லும். அவர்கள் என்ன செய்தாலும் நான் மக்கள் சார்பாக முன்னோக்கி செல்வேன்” என்று தெரிவித்தார்.

Leave your comments here...