அருங்காட்சியகமாக மாறும் 67 ஆண்டு கால அப்சரா அணு உலை..!

இந்தியா

அருங்காட்சியகமாக மாறும் 67 ஆண்டு கால அப்சரா அணு உலை..!

அருங்காட்சியகமாக மாறும் 67 ஆண்டு கால அப்சரா அணு உலை..!

மகாராஷ்டிர மாநிலம் மும்பை புறநகர் பகுதியான டிராம்பேவில் பாபா அணு ஆராய்ச்சி மையம் (பார்க்) உள்ளது. நாட்டின் முன்னோடி அணு ஆராய்ச்சி நிறுவனமான இது, 1954-ல் தொடங்கப்பட்டது.

இதில் அப்சரா அணு உலை 1956, ஆகஸ்ட் 4-ம் தேதி, அதாவது 67 ஆண்டுகளுக்கு முன்செயல்பாட்டுக்கு வந்தது. இந்தியாமட்டுமின்றி ஆசியாவின் முதல் அணு உலை இதுவாகும். 50 ஆண்டுகளுக்கும் மேலாக ஆராய்ச்சியாளர்களுக்கு அர்ப்பணிப்புடன் சேவையாற்றிய அப்சரா அணு உலை புனரமைப்பு பணிகளுக்காக கடந்த 2009-ல் மூடப்பட்டது. பிறகு மேம்படுத்தப்பட்ட அணு உலை, அப்சரா–யு என்ற பெயரில் 2018 செப்டம்பரில் செயல்படத் தொடங்கியது.

அணு இயற்பியல், மருத்துவப் பயன்பாடு, பொருள் அறிவியல், கதிர்வீச்சு பாதுகாப்பு உள்ளிட்ட துறைகளில் அடிப்படை ஆராய்ச்சிக்காக விஞ்ஞானிகள் இதைப் பயன்படுத்தி வந்தனர். அப்சரா-யுஅணு உலையின் செயல்பாடு சிலஆண்டுகளுக்குப் பிறகு நிறுத்தப்பட்டது. இந்நிலையில் இதனைஅருங்காட்சியகமாக மாற்றுவது குறித்து திட்டமிடப்பட்டு வருகிறது.

இதுகுறித்து பாபா அணு ஆராய்சி மையத்தின் இயக்குநரும் தலைவருமான ஏ.கே.மொகந்தி கூறியதாவது: அப்சராவை ஒரு அருங்காட்சியகமாக மாற்றுவதற்கான திட்டத்தை நாங்கள் வகுத்து வருகிறோம். இது இந்தியாவின் அணுசக்தி திட்ட வரலாற்றை பொதுமக்களுக்கு வழங்கும். இந்திய அணுசக்தி திட்டத்தின் தந்தை என அழைக்கப்படும் ஹோமி பாபா, அணு உலையில் அமரும் இடம். பழைய பயிற்சி பள்ளி உள்ளிட்ட இடங்கள் பார்வையாளர்களுக்கு காண்பிக்கப்படும்.

இத்திட்டம் குறித்து நேரு அறிவியல் மைய அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்த உள்ளோம்.இந்திய அணு ஆயுத திட்டங்களுக்கு இதயத் துடிப்பாக விளங்கும் பாபா அணு ஆராய்ச்சிமையம் உயர் பாதுகாப்பு மண்டலத்தில் உள்ளது. எனவே இதன்பாதுகாப்பை சமரசம் செய்துகொள்ளாமல் பொதுமக்களை அனுமதிப்பது சவாலான பணியாக இருக்கும். பொதுமக்களை தெற்கு வாயில் வழியாக அனுமதிக்கலாம் என்பது தற்போதைய திட்டமாகும். அருங்காட்சியக திட்டம் நடைமுறைக்கு வர இன்னும் ஓராண்டு ஆகலாம். இவ்வாறு ஏ.கே.மொகந்தி கூறினார்.

Leave your comments here...