பூமித்தாயை பாதுகாப்பதும், பராமரிப்பதும் நமது அடிப்படை கடமை – பிரதமர் மோடி பேச்சு
ஜி.20 நாடுகள் அமைப்புக்கு இந்த ஆண்டு இந்தியா தலைமை தாங்குகிறது. ஜி.20 உச்சி மாநாடு வருகிற செப் டம்பர் மாதம் டெல்லியில் நடக்கிறது. இதையடுத்து நாடு முழுவதும் பல்வேறு நகரங்களில் ஜி.20 கூட்டங்கள் நடந்து வருகிறது. இதில் வெளி நாட்டு பிரதிநிதிகள் பங்கேற்று வருகிறார்கள். ஜி.20 நாடுகளின் சுற்றுச் சூழல் மற்றும் பருவநிலை குறித்த அமைச்சர்கள் மாநாடு சென்னை அருகே மாமல்லபுரத்தில் இன்று நடந்தது.
இதில் பிரதமர் மோடி, காணொலி வாயிலாக பங்கேற்று பேசினார். அப்போது அவர் தமிழில் வணக்கம் என்று கூறி தனது உரையை தொடங்கினார்.
அவர் பேசியதாவது:- வரலாறு மற்றும் கலாச்சாரம் நிறைந்த சென்னைக்கு உங்களை வரவேற்கிறேன். யுனெஸ்கோ உலக பாரம்பரிய சின்னமான மாமல்லபுரத்தை பார்க்க உங்களுக்கு நேரம் கிடைக்கும் என்று நம்புகிறேன். எழுச்சியூட்டும் சிறந்த அழகுடன் இருக்கும் கல் சிற்பங்கள் உள்ளன. இது ஒரு கட்டாயம் பார்க்க வேண்டிய இடமாகும். தண்ணீரை மேலே இழுத்து மேகம் மழையாக திரும்ப கொடுக்கவில்லை என்றால் பெருங்கடல்கள் கூட சுருங்கி விடும் என்று திருவள்ளுவர் கூறுகிறார்.
இந்தியாவில் இயற்கையும், அதன் வழிகளும் வழக்கமான கற்றல் ஆதாரங்களாக உள்ளன. நதிகளோ, தண்ணீரை குடிப்பதில்லை. மரங்களும் தங்கள் பழங்களை உண்பதில்லை. மேகங்களும் அவற்றின் நீரால் உற்பத்தி செய்யப்படும் தானியங்களை உண்பதில்லை. அவைகளை இயற்கை நமக்கு வழங்குகிறது.
அதுபோல நாமும் இயற்கைக்கு வழங்க வேண்டும். பூமித்தாயை பாதுகாப்பதும், பராமரிப்பதும் நமது அடிப்படை கடமை. இந்த கடமை பலரால் மீக நீண்ட காலமாக புறக்கணிக்கப்பட்டதால் இன்று அது கால நிலை நடவடிக்கை என்ற வடிவத்தை எடுத்துள்ளது. பருவ நிலை மாற்றம், சுற்றுச்சூழல் பிரச்சினைகளால் தெற்குலக நாடுகள் பெரிதும் பாதிக்கப்பட்டு உள்ளன. பிளாஸ்டிக் மாசுவை முடிவுக்கு கொண்டுவர ஜி.20 நாடுகள் ஆக்கப்பூர்வ நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும். சர்வதேச அளவில் சட்டப்பூர்வ கட்டமைப்பை ஏற்படுத்த வேண்டும். புதுப்பிக்கத்தக்க ஆற்றல் திறன் அடிப்படையில் உலகின் முதல் 5 நாடுகளில் இந்தியாவும் ஒன்றாகும்.
2030-ம் ஆண்டு இலக்கை விட 9 ஆண்டுகள் முன்னதாகவே புதை வடிவமற்ற எரிபொருள் மூலங்களில் இருந்து இந்தியா நிறுவப்பட்ட மின்சாரத் திறனை பெற்றுள்ளது. பல்லுயிர் பாதுகாப்பு மற்றும் செறிவூட்டல் ஆகியவற்றில் நடவடிக்கை எடுப்பதில் இந்தியா தொடர்ந்து முன்னிலையில் உள்ளது. 2070-ம் ஆண்டுக்குள் நிகர பூஜ்ஜியத்தை அடைவதற்கான இலக்கையும் நிர்ணயித்து உள்ளோம். புராஜெக்ட் டைகர் திட்டம் விளைவாக இன்று உலகில் உள்ள 70 சதவீத புலிகள் இந்தியாவில்தான் காணப்படுகின்றன. புராஜெக்ட் லயன் மற்றும் புராஜெக்ட் டால்பின் திட்டத்திலும் இந்தியா செயல்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் பேசினார்.
Leave your comments here...