தேர்தல் வரை ஆளுநர் ரவி இருந்தால் திமுகவுக்கு வாக்குகள் அதிகரிக்கும் – முதல்வர் மு.க.ஸ்டாலின்
தெரிந்தோ, தெரியாமலோ ஆளுநர் ரவி நமக்கு பிரசாரம் செய்து வருகிறார். அவரை மாற்ற வேண்டும் என்று நான் சொல்லவில்லை. அவரே இருக்கட்டும். ஏனென்றால் தேர்தலில் நமக்கு வாக்கு அதிகரிக்கும். ஆளுநர் ரவி இருந்தால் திமுகவுக்கு ஓட்டுகள் அதிகரிக்கும் என முதல்வர் ஸ்டாலின் கூறியுள்ளார்.
நாடாளுமன்ற தேர்தல் அடுத்த ஆண்டு நடைபெற உள்ளது. இந்த தேர்தலில் தமிழகத்தில் உள்ள 39 தொகுதி மற்றும் புதுச்சேரி என மொத்தம் 40 தொகுதிகளில் வெற்றி பெறும் முனைப்பில் திமுக தேர்தல் பணியை தொடங்கி உள்ளது. இந்நிலையில் தான் இன்று திருச்சியில் 15 மாவட்டங்களை சேர்ந்த திமுக வாக்குச்சாவடி முகவர்கள் பயிற்சி பாசறைக் கூட்டம் முதலமைச்சர் ஸ்டாலின் தலைமையில் நடைபெற்று வருகிறது.
இந்த நிகழ்ச்சியில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பாஜக மீண்டும் ஆட்சிக்கு வந்தால் நாட்டை காப்பாற்ற முடியாது. திருச்சி, திமுகவின் தீரர்களின் கோட்டை. திருச்சிக்கும் திமுகவுக்கும் நெருங்கிய தொடர்பு உண்டு. திமுக துவங்கி 75வது ஆண்டில் அடியெடுத்து வைத்துள்ளோம். எந்த கொம்பனும் குறைசொல்ல முடியாத அளவுக்கு ஆட்சி நடத்தி வருகிறோம்.
நமக்கு தெரிந்தோ, தெரியாமலோ கவர்னர் நமக்காக பிரசாரம் செய்கிறார். ஆளுநரை மாற்ற வேண்டாம். அவரே தொடரட்டும். தேர்தல் வரை ஆளுநர் ரவி இருந்தால் திமுக.,வுக்கு ஓட்டுகள் அதிகரிக்கும். உங்களின் தகுதிவாய்ந்த கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும். ஒவ்வொரு நாளும் 10 வீடுகளுக்கு சென்று மக்களின் குறைகளை கேட்டறிய வேண்டும்.
தி.மு.க.,வின் 15 மாவட்டங்களில் இருந்து, 12,642 ஓட்டுச் சாவடி பொறுப்பாளர்கள் வந்துள்ளனர். நவீன தமிழகத்தை நாம் எடுத்த முயற்சிகள், திராவிட மாடல் ஆட்சி ஆகியவற்றை மனதில் வைத்து செயல்பட வேண்டும். தி.மு.க., தலைவராக இருந்த கருணாநிதியின் நுாற்றாண்டு விழாவையும் கொண்டாடி வருகிறோம். புதிதாக ஒரு கோடி உறுப்பினர் சேர்க்கப்பட்டுள்ளது.
இந்நிலையில், லோக்சபா தேர்தலை எதிர்க் கொள்ள இருக்கிறோம். தி.மு.க., ஆட்சியில் இருந்தாலும், இல்லாவிட்டாலும் மக்கள் பணி என்பதை அடிப்படையாக மனதில் கொண்டு கடமையாற்றி வருகிறோம். கொரோனா முதல் அலையின் போது, தி.மு.க., ஆட்சியில் இல்லை. அதில், தி.மு.க.,வினர் சிலரை இழந்த போதிலும், முழுவீச்சில் நிவாரணப்பணி செய்யப்பட்டது.
ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்கள் மீதுள்ள நம்பிக்கையில் தான், லோக்சபா தேர்தலில், ‘நாடும் நமது, நாற்பதும் நமது’ என்று முழங்கி இருக்கிறேன். வெற்றி பெறுவதற்கான வழிமுறைகளை பின்பற்றி, வெற்றி ஒன்றே உங்களின் இலக்காக கொண்டு செயல்பட வேண்டும். ஓட்டுச் சாவடி பொறுப்பாளர்கள் அனைவரும், திராவிட மாடல் ஆட்சியின் மக்கள் நலத்திட்டங்கள் என்ற புத்தகத்தை படித்து, அரசின் திட்டங்களை முழுமையாக தெரிந்து வைத்திருக்க வேண்டும்.
மக்களுக்கு தேவையானவற்றை கண்டறிந்து, அதனை நிறைவேற்றிக் கொடுங்கள்.கட்சியின் உயர்மட்ட மாவட்ட நிர்வாகிகள், அமைச்சர்கள் போன்றவர்கள் ஓட்டுச்சாவடி பொறுப்பாளர்களின் கோரிக்கைக்கு மிகுந்த முக்கியத்துவம் அளிக்க வேண்டும்.பொறுப்பாளர்கள் கொண்டு வரும் தகுதியான கோரிக்கைகள் கட்டாயம் நிறைவேற்றித் தரப்படும். எங்களுக்குள் குறைகள் இருக்கலாம்; ஆனால், ஆட்சியில் எவனாலும் குறைகள் கண்டுபிடிக்க முடியாது. மக்கள் நம் ஆட்சியின் மீது மிகுந்த நம்பிக்கை வைத்துள்ளனர். பிரதமர் எங்கு சென்றாலும், திமுக.,வை வாரிசு அரசியல் எனப் பேசுகிறார். ஆமாம் திமுக வாரிசு அரசியல் தான் செய்கிறது. ஆரியத்தை வீழ்த்த திராவிடர்களின் வாரிசுகள் போராடுகிறோம். இவ்வாறு அவர் பேசினார்.
Leave your comments here...