தமிழகம் தேச விரோதிகளின் புகலிடமாக மாறி இருக்கிறது… காவல்துறைக்கு சுதந்திரம் கிடையாது – அண்ணாமலை குற்றச்சாட்டு
தி.மு.க., அரசை கண்டித்து தமிழகம் முழுவதும் பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னையில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டார். திமுக தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்றாதது, மணல் மற்றும் கனிம வள கொள்ளை, டாஸ்மாக் கடைகளை மூட வேண்டும். கஞ்சா, கள்ளச்சாராயம் விற்பனையை ஒழிக்க வேண்டும் உள்ளிட்டவைகளை வலியுறுத்தி பாஜக சார்பில் ஆர்ப்பாட்டம் நடந்தது. சென்னை மேற்கு மாம்பலத்தில் நடந்த ஆர்ப்பாட்டத்தில் மூத்த தலைவர் எச்.ராஜா உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
சென்னை கிழக்கு மாவட்ட பாஜக சார்பில் சார்பில் சோழிங்கநல்லூர் அடுத்த காரப்பாக்கத்தில் ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாநில தலைவர் அண்ணாமலை கலந்து கொண்டு பேசினார்.
மக்கள் நலனிற்கு எதிராகவும், தமிழகத்தின் வளர்ச்சிக்கு எதிராகவும் செயல்பட்டு வரும் ஊழல் திமுக அரசைக் கண்டித்து, அத்தியாவசியப் பொருட்களின் விலைவாசி உயர்வைக் கட்டுப்படுத்த வேண்டும், தேர்தல் வாக்குறுதிகளை நிறைவேற்ற வேண்டும், கனிம வளக் கொள்ளையினைத் தடுக்க வேண்டும், பள்ளி கல்லூரிகளில்… pic.twitter.com/0GUGZCkiFA
— K.Annamalai (@annamalai_k) July 23, 2023
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், “விலைவாசி உயர்வு, லஞ்சம், ஊழல், சட்டம் ஒழுங்கு சீர்குலைவு, கனிமவளக் கொள்ளை ஆகியவற்றைக் கட்டுப்படுத்த தமிழக அரசு தவறிவிட்டது. காவிரி நீரை பெறுவதிலும், டாஸ்மாக் மது விற்பனையை கட்டுப்படுத்துவதிலும் தமிழக அரசு தவறி விட்டது. இன்னும் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக இவர்களின் ஆட்சிக் காலம் இருக்கிறது. இனிமேலாவது திமுக, மக்களுக்கு நல்லது செய்யும் என்று நம்புவோம். தமிழகத்தில் திமுக அரசு 3 முறை மின்கட்டணத்தை உயர்த்தி இருக்கிறது. வேறு எந்த மாநிலத்திலும் இதுபோன்ற உயர்வு இல்லை. மத்திய அரசின் நலத்திட்டங்கள் தமிழகத்தில் ஊழலோடுதான் சென்று சேர்கின்றன. மாநில அரசுதான் இதற்குக் காரணம். இவற்றையெல்லாம் கண்டித்துத்தான் தமிழகம் முழுவதும் 15, 000 பஞ்சாயத்துக்கள், 9 ஆயிரம் வார்டுகள் என அடிமட்ட அளவில் இந்த ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டுள்ளது.
மணிப்பூரைச் சேர்ந்த விளையாட்டு வீரர்கள், பயிற்சி பெற தமிழ்நாட்டுக்கு வருமாறு முதல்வர் மு.க. ஸ்டாலின் அழைப்பு விடுத்துள்ளார். மணிப்பூரில் என்ன நடக்கிறது என்பது தெரியாமல் முதல்வர் பேசுகிறார். மணிப்பூர் விளையாட்டு வீரர்கள் பயிற்சி பெற தேவையான நடவடிக்கைகளை எடுக்க மத்திய அரசுக்குத் தெரியும். மணிப்பூரில் மெய்த்தி மக்களுக்கு எஸ்டி அந்தஸ்து கொடுக்க வேண்டும் என்று கடந்த மே மாதம் உயர்நீதிமன்றம் கொடுத்த தீர்ப்பை அடுத்தே அங்கு மைத்தேயி மக்களுக்கும் குக்கி பழங்குடி மக்களுக்கும் இடையே மோதல் ஏற்பட்டுள்ளது. அங்கு அமைதியைக் கொண்டு வருவற்கான முயற்சிகளை மத்திய, மாநில அரசுகள் மேற்கொண்டு வருகின்றன. மே 4ம் தேதி நிகழ்ந்த கொடூர சம்பவத்தில் தொடர்புடைய 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். குற்றவாளிகளுக்கு மரண தண்டனை விதிக்கப்பட வேண்டும் என்றும் அதற்கான நடவடிக்கைகளை தனது அரசு எடுக்கும் என்றும் மணிப்பூர் முதல்வர் தெரிவித்திருக்கிறார்.
தமிழகத்தில் குடிநீர் டேங்க்கின் மீது ஏறி குடிநீரில் மலத்தைக் கலந்த விவகாரத்தில் தமிழக அரசு இதுவரை என்ன நடவடிக்கை எடுத்திருக்கிறது? பெரம்பலூர் மாவட்டத்தில் பாஜகவைச் சேர்ந்த பட்டியல் சமூகத்தைச் சேர்ந்த ஒருவர் தனது வீட்டு விசேஷத்திற்கு பட்டாசு வெடித்ததற்காக, திமுகவினர் அவரை காலில் விழ வைத்துள்ளனர். தமிழகத்தில் சமூக நீதி என்பது இப்படி இருக்கிறது. தமிழக முதல்வர் இது குறித்து கவனம் செலுத்த வேண்டும். மணிப்பூர் குறித்து அவர் பேசி இருப்பது அவர் முழுநேர அரசியல்வாதியாக மாறி இருப்பதையே காட்டுகிறது.
தமிழகத்தில் பல்வேறு இடங்களில் இன்று என்ஐஏ சோதனை நடைபெறுவது குறித்து கேட்கிறீர்கள். தமிழகம் தேச விரோதிகளின் புகலிடமாக மாறி இருக்கிறது. தமிழகத்தில் என்ஐஏ சோதனை என்பது புதிது அல்ல. ஏற்கனவே பலமுறை நடந்திருக்கிறது. இதற்கு தமிழக அரசும் ஒரு காரணம். ஏனெனில், காவல்துறைக்கு சுதந்திரம் கிடையாது. அதன் காரணமாக எல்லா தேச விரோதிகளும் தமிழகத்தில் தஞ்சம் அடைந்திருக்கிறார்கள். தாங்கள் நடத்தி வரும் சோதனை குறித்து என்ஐஏ தரப்பில் அறிக்கை வெளியாகும். பிரதமர் நரேந்திர மோடி நாடாளுமன்றத் தேர்தலின்போது தமிழகத்தில் போட்டியிடுவாரா என கேட்கிறீர்கள். தமிழகத்தில் போட்டியிட வேண்டும் என்ற விருப்பம் தமிழக பாஜக தொண்டர்களுக்கும் மக்களுக்கும் இருக்கிறது. இதேபோல், பல மாநிலங்களிலும் எதிர்பார்ப்பு இருக்கிறது. ஆனால், கட்சி இன்னும் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கவில்லை.
எதிர்க்கட்சிகளின் கூட்டணியான ‘இந்தியா’ வலிமையாக இருக்கிறதே என்கிறீர்கள். உண்மையில் நாட்டு மக்கள் அந்த கூட்டணியை ‘இந்தியா’ என ஏற்றுக்கொள்ள மாட்டார்கள். ஏனெனில், இந்தியா என்ற உணர்வு உள்ளத்தில் இருக்க வேண்டும். திமுக பிரிவினை பேசிய கட்சி. பிரிவினை பேசினால் இனி கட்சியின் அங்கீகாரம் ரத்து செய்யப்படும் என்ற நிலை வந்தபோதுதான் அவர்கள் பிரிவினையை கைவிட்டார்கள். மாநிலங்களுக்கு இடையே பிளவை ஏற்படுத்தும் கட்சி திமுக. இவர்கள் இந்தியா என பேசுவது வேடிக்கையாக இருக்கிறது. ஜம்மு காஷ்மீரை இந்தியாவோடு சேர்க்க விடாமல் செய்த கட்சி பரூக் அப்துல்லாவின் தேசிய மாநாட்டுக் கட்சி. அந்த கட்சி இந்தியா என பேசுகிறது. டெல்லியில் உள்ள ஜவஹர்லால் நேரு பல்கலைக் கழகத்தில் நடைபெற்ற போராட்டத்தின் போது இந்தியாவுக்கு எதிராக வெளிப்படையாகப் பேசிய கட்சி காங்கிரஸ். அந்த கட்சி தற்போது இந்தியா என கூறுகிறது. மக்களைப் பொறுத்தவரை யார் உண்மையில் இந்தியாவை இதயத்தில் வைத்திருக்கிறார்கள் என்றுதான் பார்ப்பார்கள். பாஜகதான் இந்தியாவை இதயத்தில் வைத்திருக்கிறது.
எங்கள் கூட்டணியைப் பொறுத்தவரை நாங்கள் வலிமையாக இருக்கிறோம். பாஜக பல்வேறு மாநிலங்களில் ஆட்சியில் இருக்கிறது. எங்கள் கூட்டணியில் இருக்கும் கட்சிகளை சிறிய கட்சி, பெரிய கட்சி என்று நாங்கள் பாகுபாடு பார்ப்பதில்லை. அவர்கள் எல்லோரும் பாஜகவின் தலைமையை ஏற்றுக்கொண்டவர்கள். பிரதமர் நரேந்திர மோடி, மீண்டும் பிரதமராக வர வேண்டும் என்று இருப்பவர்கள். ஆனால், அந்த கூட்டணியில் எந்த கட்சியின் தலைமையை மற்ற கட்சிகள் ஏற்றுக்கொண்டன. அங்கு யார் பிரதமர் வேட்பாளர்? அடிப்படையில் ஒற்றுமை இல்லாதவர்கள் ஒன்று சேர்ந்து கூட்டணி அமைத்திருக்கிறார்கள்.
எனது நடைபயணம் தமிழகத்தின் அனைத்து சட்டமன்றத் தொகுதிகளுக்கும் செல்லும். கடந்த 9 ஆண்டுகளில் ஒவ்வொரு சட்டமன்றத் தொகுதிக்கும் பிரதமர் நரேந்திர மோடி அரசு என்ன செய்திருக்கிறது என்பதை நாங்கள் மக்களுக்குத் தெரிவிப்போம். வரக்கூடிய நாடாளுமன்றத் தேர்தலின்போது 39 தொகுதிகளிலும் எங்கள் கூட்டணி வெற்றி பெற வேண்டும்; அதோடு, கட்சியை மேலும் வலுப்படுத்த வேண்டும். இந்த இரண்டு நோக்கங்களையும் முன்னிறுத்தி இந்த நடைபயணம் இருக்கும்” என்று தெரிவித்துள்ளார்.
Leave your comments here...