மகளிருக்கு உரிமைத்தொகை திட்டம் : என்னுடைய முழு கவனம் என்பது இதில்தான் இருக்கிறது – முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்..!
இந்திய குடிமைப்பணி தேர்வில் (ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்.) வெற்றி பெற்ற தமிழ்நாட்டை சேர்ந்த 33 பேர்களை முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று சென்னை தலைமைச் செயலகத்திற்கு அழைத்து பாராட்டினார். ஒவ்வொருவர் பெயரையும் அறிமுகப்படுத்த சொல்லி அவர்களது பெயர், ஊர் விவரங்களை கேட்டு தெரிந்து கொண்டார்.
அவர்கள் மத்தியில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் பேசும்போது கூறியதாவது:- இந்தியாவின் மிகுந்த பெருமைக்குரிய குடிமைப் பணி தேர்வில் வெற்றி பெற்று தமிழ்நாட்டுக்கு பெருமை சேர்த்துள்ள உங்கள் அனைவருக்கும் என்னுடைய பாராட்டுக்களையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.
தமிழ்நாட்டின் முதலமைச்சராக மட்டுமல்ல உங்களது தந்தையின் இடத்தில் இருந்து நான் மகிழ்ச்சி அடைகிறேன். அகில இந்திய போட்டித்தேர்வில் நீங்கள் வெற்றி பெற்றது என்பது, உங்களது கடினமான உழைப்பையும், கூர்மையான அறிவையும், விடாமுயற்சியையும் எடுத்துக் காட்டுகிறது. சாதாரணமாக யாருக்கும் இந்த வெற்றி கிடைத்து விடாது என்பதை என்னை விட நீங்கள் நன்றாக அறிவீர்கள். லட்சக்கணக்கானவர்கள் தேர்வில் பங்கேற்றாலும் சிலரால் மட்டுமே வெற்றி பெற முடியும். அந்த விரல்விட்டு எண்ணக் கூடிய சிலரில் நீங்களும் ஒருவர் என்பதுதான் முக்கியத்துவம்.
உங்களது முகங்களை பார்க்கும்போது கிராமப்புற முகங்களும் தென்படுகிறது. உங்கள் குடும்பத்தை சார்ந்த முதல் தலைமுறை பட்டதாரியாகவும் நீங்கள் இருக்கலாம். நடுத்தர குடும்பத்தை சார்ந்தவர்களாகவும் இருக்கலாம். உங்கள் அனைவரையும் நான் கேட்டுக்கொள்வது இந்த இடத்துக்கு உங்களை உயர்த்தியவர்களை வாழ்க்கையில் எந்நாளும் மறக்காதீர்கள் என்று நான் கேட்டுக்கொள்ள விரும்புகிறேன். ஐ.ஏ.எஸ்., ஐ.பி.எஸ்., ஐ.ஆர்.எஸ். பணிகள் என்பது உயர்ந்த அரசுப் பணிகள் என்பதை தாண்டி அதற்கென ஒரு தனி பொறுப்பும் கடமையும் உள்ள பதவி என்பதையும் நீங்கள் கவனத்தில் கொள்ள வேண்டும்.
எப்போதுமே உயர்ந்த பதவி என்பது அதைவிட பன்மடங்கு கடமையும் பொறுப்பும் உள்ளடக்கியது என்பதுதான் உண்மை. இந்த நாட்டின் எளிய மக்கள் குறிப்பாக கிராமப்புற பகுதி மக்களின் வாழ்வானது அரசாங்கத்தின் பல்வேறு திட்டங்களினால்தான் மேம்பட வேண்டும். இந்தியாவை போன்ற மக்கள் தொகை அதிகமான நாட்டில் இது மிக மிக முக்கியமானது. அதற்கு அரசு திட்டங்கள் முறையாக அவர்களை சென்று அடைய வேண்டும். அது நடைபெற வேண்டும் என்றால், நாளைய தினம் முக்கியப் பொறுப்புகளில் அமரப்போகும் உங்களைப் போன்ற சிறந்த அலுவலர்கள் திட்டங்களை கண்காணித்து செயல்படுத்திட வேண்டும்.
தமிழ்நாட்டில் மகளிர் உரிமைத் தொகை என்ற திட்டத்தை செப்டம்பர் 15-ந்தேதி முதல் செயல்படுத்த இருக்கிறோம். உலகளாவிய பாலின இடைவெளி அறிக்கையில் தரவரிசைப்படுத்தப்பட்ட 146 நாடுகளில் இந்தியா 127-வது இடத்தை பெற்றுள்ளது என்பதும் மிகவும் கவலைக்குரிய செய்தியாகும். இதனை நீக்குவதற்கான முயற்சியாகவும், இந்த திட்டத்தை திட்டமிட்டுள்ளோம்.
நமது தமிழ்நாட்டை 5 முறை ஆட்சி செய்த முதலமைச்சர் தலைவர் கலைஞர் பெயர் அந்த திட்டத்துக்கு சூட்டப்பட்டு உள்ளது. அவர்தான் பெண்களுக்கு சொத்தில் சமபங்கு உண்டு என்று 1989-ம் ஆண்டு சட்டம் கொண்டு வந்தவர். இப்படி ஒரு திட்டத்தில் ஒரு கோடி மகளிருக்கு மாதம் தோறும் 1000 ரூபாய் தர இருக்கிறோம். மகளிருக்கு பொருளாதார வலிமை ஏற்படுத்தும் திட்டமாக இதனை வடிவமைத்து உள்ளோம். யாருக்கெல்லாம் இது கிடைக்கும் என்று கேட்டபோது யாருக்கெல்லாம் 1000 ரூபாய் அவசியத் தேவையோ அவர்களுக்கெல்லாம் கிடைக்கும் என்று நான் சொன்னேன். திட்டத்தை இப்போதே அறிவித்து விட்டோம். செப்டம்பர் மாதம் 15-ந்தேதிதான் வழங்கப் போகிறோம்.
இதற்கிடையே வருகின்ற அனைத்து ஆலோசனைகளையும் ஏற்று எந்த சிக்கலும் இல்லாமல், அதனை செயல்படுத்த திட்டமிட்டுள்ளோம். என்னுடைய முழு கவனம் என்பது இதில்தான் இப்போது இருக்கிறது. சில நாட்களுக்கு முன்பு மாவட்ட ஆட்சியர்கள் கூட்டத்தை கூட்டி அவர்களிடம் முழு பொறுப்பையும் ஒப்படைத்துள்ளேன். அனைத்து மாவட்ட ஆட்சியர்களும் மிகுந்த ஆர்வத்தோடு இதில் இறங்கி விட்டார்கள். ஏனென்றால் ஒவ்வொரு மாவட்ட மக்களும் இதில் பயனடைய இருக்கிறார்கள். இத்தகைய துடிப்பும் ஆர்வமும் கொண்டவர்களாக நீங்களும், நீங்கள் பணியாற்றும் இடங்களில் செயல்பட வேண்டும் என்று கேட்டுக்கொள்கிறேன். உங்களை நாடி வரும் ஏழை எளிய மக்களின் தேவைகளை நிறைவேற்றும் பொறுப்பு உங்களுக்கு உள்ளது. மக்களிடம் கனிவாக பழகுங்கள். அவர்கள்தான் நமக்கு உண்மையான மேலதிகாரிகள். அவர்களிடம் தான் முதலில் நீங்கள் நற்பெயர் எடுக்க வேண்டும்.
இதை நீங்கள் எப்போதும் கவனத்தில் கொள்ள வேண்டும். நிறைய படித்து இந்த பதவியை கைப்பற்றி இருக்கிறீர்கள். இத்தோடு போதும் என்று படிப்பை நிறுத்திவிடாதீர்கள். இந்த சமூகத்தைப் பற்றி படியுங்கள். அதுதான் உங்களை மிகச் சரியாக வழி நடத்தும். உங்களது பயிற்சி காலத்தில் சட்டவிதிகள் நடைமுறைகள் அரசுத் திட்டங்கள், அவற்றுக்கான விதிமுறைகள் ஆகியவற்றை பற்றியெல்லாம் முழுமையாக தெரிந்து கொள்ளுங்கள். அதனை எந்த விதத்திலும் எந்த இடத்திலும் விட்டுக்கொடுக்காமல் செயல்படுங்கள். சட்டம் என்ன சொல்கிறது என்றும் பாருங்கள்.
உங்கள் மனசாட்சி என்ன சொல்கிறது என்பதையும் பாருங்கள் அதன் பிறகு செயல்படுங்கள். அகில இந்திய தேர்வை சிறப்பாக எதிர்கொண்ட நீங்கள் அடுத்து வரும் உங்களது பயிற்சி காலத்தையும் மிக சிறப்பாக நிறைவு செய்வீர்கள் என்று நான் நம்புகிறேன். பல்வேறு பணிகளில் பிற்காலங்களில் பொறுப்பேற்க போகும் உங்கள் அனைவருக்கும் என்னுடைய வாழ்த்துக்கள். உங்கள் பணிகளால் நமது தமிழ்நாடும், உங்கள் குடும்பமும் பெருமைப்பட வேண்டும். இவ்வாறு அவர் பேசினார்.
Leave your comments here...