போலி பாஸ்போர்ட் முறைகேடு – ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

தமிழகம்

போலி பாஸ்போர்ட் முறைகேடு – ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம் உத்தரவு.!

போலி பாஸ்போர்ட் முறைகேடு – ஏ.டி.ஜி.பி டேவிட்சன் தேவாசீர்வாதம் மீது நடவடிக்கை எடுக்க மத்திய உள்துறை அமைச்சகம்  உத்தரவு.!

போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் கூடுதல் டிஜிபி டேவிட்சன் தேவாசீர்வாதத்திடம் விசாரணை நடத்தி, தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது. இந்த விவகாரம் குறித்து அமலாக்கத் துறையும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது.

தமிழக காவல் துறையில் மூத்த அதிகாரியான டேவிட்சன் தேவாசீர்வாதம் கடந்த 2018 முதல் 2020-ம்ஆண்டு வரை மதுரை மாநகர காவல் ஆணையராக இருந்தார். அப்போது, வெளிநாட்டினருக்கு பாஸ்போர்ட் வழங்கியதில் முறைகேடு நடந்ததாகவும், போலி ஆவணங்களை பயன்படுத்தி நூற்றுக்கணக்கான போலி பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டதாகவும் புகார் எழுந்தது.

மதுரை போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் காவல் துறை அதிகாரிகளும் சம்பந்தப்பட்டு இருப்பதாக தமிழக பாஜக தலைவர் அண்ணாமலை குற்றம்சாட்டினார். ஒரே காவல் நிலையம் மூலமாக 72 பாஸ்போர்ட்கள் வழங்கப்பட்டுள்ளதாகவும், இதுகுறித்து ஆளுநர், உள்துறை செயலரிடம் புகார் கொடுத்துள்ளதாகவும் அவர் தெரிவித்தார்.

இதில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகளை பணியில் இருந்து நீக்க வலியுறுத்தி, உள்துறை செயலரிடம் தமிழக பாஜக துணை தலைவர் கரு.நாகராஜனும் ஒரு மனு கொடுத்தார்.இதன் தொடர்ச்சியாக, போலி பாஸ்போர்ட் விவகாரத்தில் சம்பந்தப்பட்ட காவல் துறையினர் உட்பட 41 பேர்மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ளதாக தமிழக அரசு கடந்த ஆண்டு அறிவித்தது. இந்த விவகாரம் குறித்து மதுரை க்யூ பிரிவு போலீஸார் விசாரித்து வருகின்றனர்.

மத்திய அரசுக்கு புகார்: இந்நிலையில், மதுரையில் போலி பாஸ்போர்ட் வழங்கப்பட்டது தொடர்பாக டேவிட்சன் மீது, வாராகி என்பவர் கடந்த மே 24-ம் தேதி மத்திய அரசுக்கு ஒரு புகார் அனுப்பி இருந்தார். அதன் அடிப்படையில், டேவிட்சனிடம் விசாரணை நடத்தி, தவறு செய்திருந்தால் நடவடிக்கை எடுக்குமாறு தமிழக தலைமைச் செயலருக்கு மத்திய உள்துறை அமைச்சகம் கடிதம் எழுதியுள்ளது.

இந்த விவகாரம் குறித்து அமலாக்கத் துறையும் விசாரணை நடத்த திட்டமிட்டுள்ளதாக கூறப்படுகிறது. இது காவல் துறை வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தமிழக காவல் துறை உளவுப் பிரிவு கூடுதல் டிஜிபியாக இருந்த டேவிட்சன் தேவாசீர்வாதம், சென்னை காவல் ஆணையராக நியமிக்கப்பட உள்ளதாக தகவல் வெளியான நிலையில், உளவுத்துறை ஏ.டி.ஜி.பி. டேவிட்சன் தேவாசீர்வாதம் பணியிட மாற்றம் செய்யப்பட்டு, காவல் தலைமையக ஏ.டி.ஜி.பி.,யாக நியமிக்கப்பட்டுள்ளார். உளவுத்துறை ஐ.ஜி செந்தில்வேலன் உளவுத்துறை ஏ.டி.ஜி.பி பொறுப்பை கூடுதலாக கவனிப்பார் என்று அரசு அறிவித்துள்ளது.

Leave your comments here...