OPEN AI நிறுவனத்தின் சி.இ.ஓ. சாம் ஆல்ட்மன் பிரதமர் மோடியுடன் சந்திப்பு..!
இந்தியாவில் தொழில்நுட்ப சூழலை மேம்படுத்த செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப்பெரிய பங்களிப்பை அளிக்கும் என்று பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.
செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பத்தில் மிக முக்கிய பங்காற்றி வரும் அமெரிக்க நிறுவனமான OpenAI நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரியான சாம் ஆல்ட்மேன், பிரதமர் நரேந்திர மோடியை இன்று சந்தித்தார்.
சந்திப்பு குறித்து தனது ட்விட்டர் பக்கத்தில் கருத்து தெரிவித்த சாம் ஆல்ட்மேன், “இந்தியாவில் ஏற்பட்டுள்ள தகவல் தொழில்நுட்ப முன்னேற்றம் குறித்தும், செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மூலம் இந்தியா எவ்வாறு பயனடைந்து வருகிறது என்பது குறித்தும் பிரதமர் நரேந்திர மோடியுடன் மேற்கொண்ட உரையாடல் மிகச்சிறப்பாக இருந்தது. பிரதமர் அலுவலக அதிகாரிகளுடனான ஒவ்வொரு சந்திப்பும் மகிழ்ச்சிகரமானதாக இருந்தது” எனத் தெரிவித்திருந்தார்.
சாம் ஆல்ட்மேனின் பதிவுக்கு பதில் அளித்துள்ள பிரதமர் மோடி, “ஆழமான உரையாடலுக்காக உங்களுக்கு நன்றி. இந்தியாவின் தொழில்நுட்பத்தை மேம்படுத்துவதில் செயற்கை நுண்ணறிவு தொழில்நுட்பம் மிகப் பெரிய பங்களிப்பை அளிக்க முடியும். குறிப்பாக இளைஞர்கள் மத்தியில். எங்கள் மக்களுக்கு அதிகாரம் அளிப்பதற்காக, தொழில்நுட்ப மாற்றத்தை விரைவுபடுத்தக்கூடிய அனைத்து ஒத்துழைப்புகளையும் வரவேற்கிறோம்” எனத் தெரிவித்துள்ளார்.
உலகை ஆச்சரியத்தில் ஆழ்த்தி வரும் சேட்ஜிபிடி எனும் செயலியை உருவாக்கிய நிறுவனம் OpenAI. இதோடு, ஜிபிடி-4, டால்-இ, ஓபன்ஏஐ-5, ஓபன்ஏஐ கோடெக்ஸ் போன்ற தொழில்நுட்பங்களையும் இந்நிறுவனம் உருவாக்கி இருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.
Leave your comments here...