ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒரு புகையிலை எதிர்ப்பு வாசகம் – கனடா அரசு புதிய முயற்சி..!

உலகம்

ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒரு புகையிலை எதிர்ப்பு வாசகம் – கனடா அரசு புதிய முயற்சி..!

ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒரு புகையிலை எதிர்ப்பு வாசகம் – கனடா  அரசு புதிய முயற்சி..!

உலக புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு ஒவ்வொரு சிகரெட்டிலும் ஒரு புகையிலை எதிர்ப்பு வாசகத்தை அச்சிட்டு கனடா அரசு புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பின் உறுப்பு நாடுகள் 1987−ம் ஆண்டு உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை உருவாக்கியது. பின் 1988−ம் ஆண்டு தீர்மானம் ஒரு மனதாக நிறைவேற்றப்பட்டு ஆண்டுதோறும் மே 31−ம் தேதி “உலகப் புகையிலை எதிர்ப்பு தினம்” (World No Tobacco Day) அனுசரிக்கப்படுகிறது. புகையிலையால் ஏற்படும் தீமைகள் குறித்து விழிப்புணர்வை ஏற்படுத்தும் வகையில் இத்தினம் அனுசரிக்கப்பட்டு வருகிறது.

இந்த நிலையில் உலகப் புகையிலை எதிர்ப்பு தினத்தை முன்னிட்டு இந்த ஆண்டு கனடா புதிய முயற்சியை முன்னெடுத்துள்ளது. அந்த வகையில் ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சிகரெட்டுகளில் நேரடியாக எச்சரிக்கை லேபிள்களை ஒட்ட கனடா அரசு திட்டமிட்டுள்ளது. புகையிலையால் ஏற்படும் இறப்புகளை குறைக்கவும், புகைப்பிடித்தல் மற்றும் புதிதாக புகை பிடிப்பவர்களை தடுக்கும் நோக்கில் இந்த புதிய முயற்சியை கனடா அரசு முன்னெடுத்துள்ளது. மேலும் சிகரெட்டுகளில் நேரடியாக எச்சரிக்கை லேபிள்களை ஒட்டும் முயற்சியை முன்னெடுத்த முதல் நாடு என்ற பெருமையையும் கனடா பெற்றுள்ளது.

கனடா அரசு சமீபத்தில் நடத்திய ஆய்வில் சில இளைஞர்களிடம் ஒரு சிகரெட்டை கொடுத்தபோது உடனே புகைப்பிடிக்கத் தொடங்கியதாகவும் ஆனால் எச்சரிக்கை லேபிள் ஒட்டப்பட்ட பிறகு சிகரெட்டை கொடுத்தபோது அவர்கள் புகைப்பிடிக்க மறுத்ததாகவும் அந்த ஆய்வில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

புகையிலை பயன்படுத்துவதால் கனடாவில் ஆண்டுதோறும் 48,000 பேர் உயிரிழப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. இதனையடுத்து வருகிற ஆகஸ்ட் ஒன்றாம் தேதி முதல் சிகரெட்களில் “புகையிலை புகை குழந்தைகளுக்கு தீங்கு விளைவிக்கும் மற்றும் சிகரெட் புற்றுநோயை உண்டாக்கும்” போன்ற வாசகங்கள் இடம்பெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதே போல 2000−ஆம் ஆண்டில் சிகரெட் பெட்டிகளில் நோயுற்ற இதயங்கள் மற்றும் பாதிக்கப்பட்ட நுரையீரல்களின் புகைப்படங்கள் போன்ற கிராஃபிக் எச்சரிக்கைகளை செயல்படுத்திய முதல் நாடு கனடா என்பதும் குறிப்பிடத்தக்கது. 2035−ம் ஆண்டுக்குள் 5 சதவிகிதத்திற்கும் குறைவான புகையிலை பயன்பாட்டை அடையும் வகையில் இந்த புதிய முயற்சியை கனடா முன்னெடுத்துள்ளது.

உலக சுகாதார அமைப்பு கூறுகையில், புகையிலை புகை, புகைப் பிடிக்காதவர்களுக்கும் மோசமான விளைவுகளை ஏற்படுத்துவதாக தெரிவித்துள்ளது. மேலும் ஆண்டுதோறும் 1.2 மில்லியன் உயிரிழப்புகள் நிகழ்வாக எச்சரித்துள்ளது. புகையிலை புகையால் கிட்டத்தட்ட 65,000 குழந்தைகள் மாசுபட்ட காற்றை சுவாசிப்பதாகவும் இது குழந்தைகளுக்கு வாழ்நாள் முழுவதும் சுகாதார பிரச்சனைகளுக்கு வழி வகுக்கும் எனவும் உலக சுகாதார அமைப்பு எச்சரித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

Leave your comments here...