கர்நாடகாவில் தனிப்பெரும்பான்மையுடன் வெற்றிப்பெற்ற காங்கிரஸ் – வாழ்த்து தெரிவித்த பிரதமர் மோடி..!
கர்நாடகத்தில் முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை தலைமையில் பா.ஜனதா ஆட்சி நடைபெற்று வருகிறது. இந்த ஆட்சியின் அதாவது 15-வது சட்டசபையின் பதவி காலம் வருகிற 24-ந் தேதி நிறைவடைகிறது. இந்த நிலையில் 16-வது சட்டசபையை தேர்ந்தெடுப்பதற்காக 224 தொகுதிகளை கொண்ட கர்நாடக சட்டசபைக்கு கடந்த 10-ந் தேதி தேர்தல் நடைபெற்றது.
இந்த தேர்தலில் 2 ஆயிரத்து 615 வேட்பாளர்கள் களத்தில் இருந்தனர். ஆளும் பா.ஜனதா 224 தொகுதிகளிலும், காங்கிரஸ் 223 தொகுதிகளிலும், ஜனதா தளம்(எஸ்) கட்சி 207 தொகுதிகளிலும் போட்டியிட்டன. அடுத்த ஆண்டு (2024) நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் இந்த தேர்தல் முக்கியத்துவம் வாய்ந்ததாக கருதப்பட்டது.
இந்த தேர்தலில் முக்கியமாக முதல்-மந்திரி பசவராஜ் பொம்மை சிக்காவி தொகுதியிலும், எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா வருணாவிலும், முன்னாள் முதல்-மந்திரி குமாரசாமி, சென்னபட்டணாவிலும், இன்னொரு முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் உப்பள்ளி-தார்வாரிர் மத்திய தொகுதியிலும், மாநில காங்கிரஸ் தலைவர் கனகபுராவிலும் களத்தில் இருந்தனர்.
இந்த தேர்தலில் மொத்தம் 5 கோடியே 30 லட்சத்து 85 ஆயிரத்து 566 வாக்காளர்கள் வாக்களிக்க தகுதி படைத்தவர்களாக இருந்தனர். இதில் 3 கோடியே 88 லட்சத்து 51 ஆயிரத்து 807 வாக்காளர்கள் வாக்களித்தனர். அதாவது 73.19 சதவீத வாக்குகள் பதிவாகி இருந்தன. தேர்தலுக்கு பிந்தைய கருத்து கணிப்புகளில் பெரும்பாலானவற்றில் காங்கிரஸ் ஆட்சியை பிடிக்கும் என்று கூறப்பட்டது. தேர்தலில் பதிவான ஓட்டுகள் அடங்கிய மின்னணு வாக்குப்பதிவு எந்திரங்கள் வாக்கு எண்ணும் மையங்களில் பத்திரமாக வைக்கப்பட்டு இருந்தன. மொத்தம் 34 மையங்களில் எந்திரங்கள் வைக்கப்பட்டு இருந்தன.
அந்த மையங்களில் ஓட்டு எண்ணிக்கைக்கு தேவையான அனைத்து ஏற்பாடுகளும் செய்யப்பட்டு இருந்தன. இந்த நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் பதிவான ஓட்டுகள் எண்ணிக்கை திட்டமிட்டபடி இன்று நடைபெற்றது. இதில் காங்கிரஸ் கட்சி 136 இடங்களில் வெற்றி முகத்தில் உள்ளது. பாஜக 65 இடங்களிலும் மஜதா 19 இடங்களிலும் வெற்றி பெற்றுள்ளது.
பிரதமர் மோடி மிக தீவிரமான பிரசாரம் மேற்கொண்ட போதிலும் ஆளும் பா.ஜனதா படுதோல்வி அடைந்துள்ளது. பா.ஜனதாவில் டிக்கெட் கிடைக்காததால், கடைசி நேரத்தில் கட்சி மாறி காங்கிரஸ் சார்பில் போட்டியிட்ட முன்னாள் முதல்-மந்திரி ஜெகதீஷ் ஷெட்டர் தோல்வியை தழுவியுள்ளார். அதே நேரத்தில் கட்சி தாவிய இன்னொரு தலைவரான லட்சுமண் சவதி வெற்றி வாகை சூடியுள்ளார். மேலும், குமாரசாமியின் மகன் நிகில் குமாரசாமி, ராமநகரில் படுதோல்வியை சந்தித்துள்ளார்.
ஆனால் இந்த அமோக வெற்றி மூலம் காங்கிரஸ் கட்சி பா.ஜனதாவிடம் இருந்து ஆட்சியை மீண்டும் கைப்பற்றியுள்ளது. இந்த வெற்றியை அடுத்து காங்கிரஸ் கட்சி எம்.எல்.ஏ.க்கள் கூட்டம் நாளை பெங்களூருவில் நடக்கிறது. இந்த கூட்டத்தில் புதிய முதல்-மந்திரி தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்.
இந்த கூட்டத்தை நடத்துவதற்காக அகில இந்திய காங்கிரஸ் பார்வையாளர்கள் வரவுள்ளனர். புதிய முதல்-மந்திரி பதவி ஏற்பு விழா அடுத்த வாரம் 17 அல்லது 18-ந் தேதி நடைபெறும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அடுத்த ஆண்டு நாடாளுமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் கர்நாடக சட்டசபை தேர்தலில் அபாரமான வெற்றி கிடைத்துள்ளதால், கர்நாடகம் மட்டுமின்றி நாடு முழுவதும் உள்ள காங்கிரஸ் தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள் மிகுந்த உற்சாகம் அடைந்துள்ளனர்.
Congratulations to the Congress Party for their victory in the Karnataka Assembly polls. My best wishes to them in fulfilling people’s aspirations.
— Narendra Modi (@narendramodi) May 13, 2023
பிரதமர் மோடி வாழ்த்து: கர்நாடக சட்டசபை தேர்தலில் வெற்றி பெற்ற காங்கிரஸ் கட்சிக்கு வாழ்த்துகள். மக்களின் எதிர்பார்ப்புகளை நிறைவேற்ற அவர்களுக்கு எனது மனமார்ந்த வாழ்த்துகள். கர்நாடக தேர்தலில் எங்களுக்கு ஆதரவளித்த அனைவருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறேன். பா.ஜ., நிர்வாகிகளின் கடின உழைப்பை நான் பாராட்டுகிறேன். இனி வரும் காலங்களில் கர்நாடகாவிற்கு இன்னும் பலத்துடன் சேவை செய்வோம். இவ்வாறு அவர் கூறியுள்ளார்.
Leave your comments here...