ரூ.1000-க்கு மேல் மின் கட்டணத்தை ஆன்லைனில் மட்டுமே செலுத்த முடியும்..!
மின்சாரக் கட்டணம் 1000 ரூபாய்க்கு மேல் வந்தால் இனி ஆன்லைனில் மட்டுமே பணம் கட்ட முடியும் என்கிற புதிய விதி விரைவில் அமலுக்கு வரும் என தமிழ்நாடு மின்சார வாரிய வட்டாரங்கள் தெரிவிக்கின்றன
மின் கட்டணங்கள், அலுவலக கவுண்டர்கள் மற்றும் ஆன்லைனில் வசூல் செய்யப்பட்டு வருகின்றன. இதில் மின் கட்டணம் ரூ.5 ஆயிரத்துக்கும் மேல் இருந்தால் அதை மின்சார வாரிய அலுவலக கவுண்டர்களில் செலுத்த முடியாது. ஆன்லைன் அல்லது காசோலை, வரைவோலை மூலம் மட்டுமே செலுத்த வேண்டும்.
இந்நிலையில் ரூ. 1000-க்கு மேல் உள்ள மின் கட்டணத்தை ஆன்லைனில் செலுத்த நடவடிக்கை எடுக்கப்படுகிறது. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையம் சமீபத்தில் சில மாற்றங்களை முன்மொழிந்துள்ளது. மாற்றங்கள் நடைமுறைக்கு வந்தால் வீட்டு உபயோக நுகர்வோரின் மின் கட்டணம் ரூ.1000-க்கு மேல் இருந்தால் அவர்கள் அதை ஆன்லைன் அல்லது காசோலை, வரைவோலை ஆகியவற்றில் மட்டும்தான் செலுத்த முடியும்.
அதன்படி இருமாத மின் பயன்பாடு 372 யூனிட்டுகளை (ரூ.1003.50) தாண்டிய வீட்டு உபயோக பயனர், மின்சார வாரிய அலுவலக கவுண்டர்களில் பணம் செலுத்த அனுமதிக்கப்படமாட்டார்கள்.
இதுகுறித்து மின்சார வாரிய அதிகாரி ஒருவர் கூறும்போது, “ஆன்லைன் செயல்முறையை எளிதாக்குவதால், மக்கள் வரிசையில் காத்திருக்க வேண்டியதில்லை. தமிழ்நாடு மின்சார ஒழுங்கு முறை ஆணையத்தின் முன்மொழிவு ஏற்றுக் கொள்ளப்பட்டால் உடனடியாக பணம் பெறுவதற்கும், கவுண்டர்களில் தேவையற்ற பணத்தை கையாளுவதை தவிர்க்கவும் உதவும். தமிழ்நாடு மின்சார வாரியம், டிஜிட்டல் முறைகள் மூலம் மொத்த வருவாயில் 74 சதவீதத்தை வசூலித்துள்ளது” என்றார்.
இது தொடர்பாக கோவை நுகர்வோர் செயலாளர் கதிர்மதியோன் கூறும் போது, “கவுண்டர்களில் ரொக்கமாக பில் செலுத்துவதற்கான வரம்பை குறைக்கக் கூடாது. ஆன்லைனில் பணம் செலுத் தக்கூடிய நுகர்வோர் டிஜிட்டலை பயன்படுத்துகின்றனர். ஆன்லைனை பயன்படுத்து முடியாத மக்கள் கவுண்டர்களுக்கு வருகின்றனர் என்றார்.
தமிழ்நாடு மின்சார ஊழியர்களின் மத்திய அமைப்பின் தொழிற்சங்க தலைவர் ஒருவர் கூறும் போது, “ரூ.2 ஆயிரத்துக்கு மேல் கட்டணம் செலுத்து வோரை ஆன்லைனில் செலுத்துமாறு கூற கவுண்டர் ஊழியர்களுக்கு ஏற்கனவே வாய்வழி அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன. கவுண்டர் ஊழியர்களையும், கவுண்டர்களின் எண்ணிக்கையையும் குறைத்து அத்தகைய நடவடிக்கை எடுக்கப்படுகிறது. கடந்த ஆண்டு ஒரே வளாகத்தில் பல பிரிவு அலுவலகங்கள் அமைந்திருந்தாலும் ஒரு கட்டிடத்தில் ஒரு கவுண்டர் மட்டுமே செயல்பட அறிவுறுத்தப்பட்டது” என்றார்.
Leave your comments here...