கொச்சி நீர்வழி மெட்ரோ போக்குவரத்து உலக நாடுகள் விரைவில் செயல்படுத்தும்- பிரதமர் மோடி

இந்தியா

கொச்சி நீர்வழி மெட்ரோ போக்குவரத்து உலக நாடுகள் விரைவில் செயல்படுத்தும்- பிரதமர் மோடி

கொச்சி நீர்வழி மெட்ரோ போக்குவரத்து உலக நாடுகள் விரைவில் செயல்படுத்தும்- பிரதமர் மோடி

கொச்சி வாட்டர் மெட்ரோ திட்டத்தை பார்த்து உலக நாடுகள் விரைவில் செயல்படுத்தும் என பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

பிரதமர் நரேந்திர மோடி கேரளாவில் 2 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ளார். இதற்காக நேற்று மாலை மத்திய பிரதேசத்தில் இருந்து தனி விமானம் மூலம் கொச்சிக்கு வருகை தந்தார். கேரள கலாச்சாரத்தை பிரதிபலிக்கும் வகையில் வேட்டி, சட்டையை பிரதமர் அணிந்திருந்தார். கொச்சி கடற்படை தளத்தில் இருந்து நடைபயணமாக செல்லும் பிரதமர் மோடிக்கு பாஜகவினர் உற்சாக வரவேற்பு அளித்தனர்.

கேரளாவில் முதன் முறையாக திருவனந்தபுரம் -காசர்கோடு ரயில் வழி பாதையில் அதிவேக ரயிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரம் சென்ட்ரல் ரயில் நிலையத்தில் இருந்து கொடியசைத்து துவங்கி வைத்தார்.

819 கோடி ரூபாய் மதிப்பில் 78.2 கி.மீ. தூரம் நீர் வழி பாதைகளில் உள்ள தீவு பகுதிகளை இணைக்கும் இந்தியாவிலேயே முதல் முறையாக அமைக்கப்பட்ட கொச்சி வாட்டர் மெட்ரோ சேவையை சென்ட்ரல் ஸ்டேடியத்தில் வைத்து பிரதமர் நரேந்திர மோடி துவங்கி வைத்தார். அதன் பின் திண்டுக்கல்-பழனி-பாலக்காடு இடையே ரயில் மின் பாதை திட்டம் துவங்கி வைத்தார்.

தொடர்ந்து, திருவனந்தபுரம், கோழிக்கோடு, வர்க்கலா, சிவகிரி ரயில் நிலையங்களை மேம்படுத்த அடிக்கல் நாட்டினார். திருவனந்தபுரத்தில் டிஜிட்டல் அறிவியல் பூங்காவிற்கு அடிக்கல் என மொத்தம் ரூ.3200 கோடி மதிப்பில் எட்டு திட்டங்களில் ஆறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார்.

தொடர்ந்து நிகழ்ச்சியில் பேசிய பிரதமர் மோடி மக்களுக்கு விஷூ வாழ்த்துக்களைத் தெரிவித்தார். இந்த வளர்ச்சித் திட்டங்களுக்காகவும் கேரள மக்களுக்கு அவர் வாழ்த்து கூறினார்.

கேரளாவின் கல்வி மற்றும் விழிப்புணர்வு நிலைகுறித்து கருத்து தெரிவித்த பிரதமர், கேரள மக்களின் கடின உழைப்பும், கட்டுப்பாடும் அவர்களுக்கு தனித்துவ அடையாளத்தைத் தந்துள்ளன என்றார்.

கேரள மக்கள் உலக நிலையை புரிந்துகொள்ளும் திறமையுள்ளவர்கள் என்றும், சிக்கலான தருணங்களில் வளர்ச்சியின் துடிப்புமிக்க இடத்தை இந்தியா எவ்வாறு பெற்றது என்பதை அறிந்து அவர்கள் பாராட்டினார்கள் என்றும் அவர் கூறினார். நாட்டின் நலனுக்காக மத்திய அரசு விரைவாகவும், உறுதியாகவும் முடிவுகள் எடுப்பதால் இந்தியாவின் மீது உலகம் நம்பிக்கை வைத்துள்ளது. என்றும், இதனால் இந்தியாவின் கட்டமைப்பை வலுப்படுத்தவும், நவீனப்படுத்தவும் முன்னெப்போதும் இல்லாத அளவிற்கு முதலீடுகள் கிடைத்துள்ளன என்றும் பிரதமர் கூறினார். ஒத்துழைப்பு கூட்டமைப்பில் அரசு கவனம் செலுத்துகிறது, மாநிலங்களில் முன்னேற்றத்தை நாட்டின் முன்னேற்ற ஆதாரமாகக் கருதுகிறது என்று அவர் தெரிவித்தார். “சேவை சார்ந்த அணுகுமுறையுடன் நாங்கள் பணியாற்றி வருகிறோம். கேரளா முன்னேறினால் தான் வேகமான விகிதத்தில் தேசம் முன்னேற முடியும்” என்று பிரதமர் குறிப்பிட்டார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் போக்குவரத்து கட்டமைப்பு தொடர்பான பணி வேகத்திலும், அளவிலும் முன்னெப்போதும் இல்லாத வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த ஆண்டின் பட்ஜெட்டில் கூட அடிப்படை கட்டமைப்புக்கு 10 லட்சம் கோடிக்கு மேல் செலவிட திட்டமிடப்பட்டுள்ளது என்று அவர் கூறினார்.

கடந்த ஒன்பது ஆண்டுகளில் கேரளாவில் மேற்கொள்ளப்பட்ட ரயில்வே மேம்பாட்டு திட்டங்கள் பற்றி குறிப்பிட்ட பிரதமர், பாதை மாற்றம், இரட்டிப்பாக்குதல், மின்மயமாக்குதல் ஆகிய பணிகள் பற்றியும் எடுத்துரைத்தார். பலவகை போக்குவரத்தை மையமாக கேரளாவை மாற்றும் தொலைநோக்குப் பார்வையுடன் கேரளாவில் 3 பெரிய ரயில் நிலையங்களை மறுசீரமைப்பதற்கான பணிகள் தொடங்கியுள்ளன என்று அவர் தெரிவித்தார்.

இதுவரையிலான அனைத்து வந்தே பாரத் ரயில்களும், கலாச்சார, ஆன்மீக, சுற்றுலா முக்கியத்துவம் வாய்ந்த இடங்களை இணைப்பதாக உள்ளன என்று பிரதமர் தெரிவித்தார். “கேரளாவின் முதலாவது வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் வடக்கு கேரளாவையும், தெற்கு கேரளாவையும் இணைக்கும். இந்த ரயில், கொல்லம், கோட்டயம், எர்ணாகுளம், திரிசூர், கண்ணூர் போன்ற யாத்திரை தலங்களுக்கான பயணத்தை எளிதாக்கும்” என்று அவர் கூறினார். திருவனந்தபுரம்- ஷோரனூர் பிரிவில் சுமாரான அதிவேக ரயில்களை இயக்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன என்று அவர் குறிப்பிட்டார். இது நிறைவடைந்த பின் இதே போன்ற ரயில்களை திருவனந்தபுரத்துக்கும், மங்களூருக்கும் இடையே இயக்கும் வாய்ப்பு உள்ளது என்று அவர் கூறினார்.

கொச்சி நீர்வழி மெட்ரோ போக்குவரத்து என்பது இந்தியாவில் உருவாக்கப்பட்ட திட்டம் என்பதை அடிக்கோடிட்டுக்காட்டிய பிரதமர், இதற்காக கொச்சி கப்பல் கட்டும் தளத்திற்கு பாராட்டுத் தெரிவித்தார். கொச்சிக்கு அருகே உள்ள பகுதிகளில் வாழும் மக்களுக்கு எளிதான, மலிவான போக்குவரத்து சாதனமாகும் என்றும் பேருந்து முனையம் மற்றும் மெட்ரோ வலைப்பின்னலுக்கு இடையே போக்குவரத்து தொடர்பை இது வழங்கும் என்றும் பிரதமர் கூறினார். நகருக்குள் போக்குவரத்து நெரிசலை குறைப்பதற்கு அப்பால் முகத்துவார சுற்றுலாவுக்கும் இது பயனளிக்கும் என்று தெரிவித்தார். கொச்சி நீர்வழி மெட்ரோ போக்குவரத்து நாட்டின், மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக இருக்கும் என்று அவர் நம்பிக்கை தெரிவித்தார்.

போக்குவரத்து தொடர்புக்கான முதலீடுகள் சேவைகளை விரிவுபடுத்துவது மட்டுமின்றி தூரத்தைக் குறைத்து சாதி, மதம், ஏழை, பணக்காரர் என்ற பாகுபாடின்றி பல்வேறு கலாச்சாரங்களை இணைக்கிறது என்பதைப் பிரதமர் சுட்டிக்காட்டினார். உள்ளார்ந்த வளமுள்ள கலாச்சாரம், உணவுப்பழக்கம், பருவநிலையை கேரளா கொண்டுள்ளது என்று அவர் கூறினார். அண்மையில் குமாரகோனில் நடைபெற்ற ஜி20 கூட்டம் பற்றி எடுத்துரைத்த பிரதமர், இதுபோன்ற ஜி20 கூட்டங்களும், நிகழ்வுகளும் கேரளாவிற்கு கூடுதலாக உலகளாவிய முக்கியத்துவத்தை அளிக்கின்றன என்றார்.

மனதின் குரல் நிகழ்ச்சியில் மக்களின் சாதனைகள் பற்றி பேசப்படுவதை எடுத்துரைத்த பிரதமர், உள்ளூர் பொருட்களுக்கு முக்கியத்துவம் அளிப்பதை ஊக்கப்படுத்தும் விதமாக கேரளாவில் சுயஉதவி குழுக்களால் தயாரிக்கப்பட்ட பொருட்கள் பற்றி அவ்வப்போது குறிப்பிட்டதை சுட்டிக்காட்டினார். “மனதின் குரல் நிகழ்வின் 100-வது அத்தியாயம் வரும் ஞாயிறு அன்று நிறைவு பெறுவதை சுட்டிக்காட்டிய அவர், தேசக்கட்டுமானத்திற்கான நாட்டு மக்களின் முயற்சிகளுக்கும், ஒரே இந்தியா உன்னத இந்தியா உணர்வுக்கும் இது அர்ப்பணிக்கப்படுகிறது என்றார். வளர்ச்சியடைந்த இந்தியாவை கட்டமைக்க ஒவ்வொருவரும் தங்களை அர்ப்பணித்துக்கொள்ள வேண்டும் என்று கோரியதுடன் பிரதமர் தமது உரையை நிறைவு செய்தார்.

கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’ சேவை: 5 தகவல்கள்

1. கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’ சேவை மூலம் கொச்சி மற்றும் அதனைச் சுற்றியுள்ள பகுதிகளில் வாழும் மக்கள் பயனடைவார்கள். சுற்றுலா பயணிகளை இது ஈர்க்கும்.

2. கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’ , அத்துறைமுக நகரைச் சுற்றியுள்ள 10 தீவுகளை இணைக்கும். உயர் நீதிமன்றம் – விபின் மற்றும் விட்டிலா – கக்கநாட் இடையே என இரண்டு முனையங்கள் இயங்கும். இந்த சேவையை பயன்படுத்தி பயணிகள் விபினில் இருந்து உயர் நீதிமன்றத்திற்கு 20 நிமிடங்களில் செல்லலாம். விட்டிலாவில் இருந்து கக்கநாடு பகுதிக்கு 25 நிமிடங்களில் செல்லலாம். அன்றாடம் காலை 7 மணி முதல் மாலை 8 மணி வரை சேவை தொடரும். பீக் அவர்களில் உயர் நீதிமன்றம் – விபின் இடையே 15 நிமிடங்களுக்கு ஒருமுறை கொச்சி வாட்டர் மெட்ரோ இயக்கப்படும்.

3. பயணிகளின் சவுகரியத்தைக் கருதி கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. ரூ.20 முதல் ரூ.40 வரை டிக்கட் கட்டணம் நிர்ணயிக்கப்பட்டுள்ளது. வழக்கமாகச் செல்லக்கூடிய பயணிகள் ட்ராவல் பாஸ் பெற்றுக் கொள்ளலாம். மாதாந்திர சந்தா ரூ.600, அரையாண்டு சந்தா ரூ.1500 என்று நிர்ணயிக்கப்பட்டுள்ளது. டிக்கெட் மற்றும் பாஸ்களை முனையங்களில் உள்ள கவுன்ட்டர்களில் க்யூ ஆர் கோட் பயன்படுத்தி வாங்கிக் கொள்ளலாம்.

4. கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’ திட்டமானது ரூ.1,137 கோடி முதலீட்டில் தொடங்கப்பட்டுள்ளது. ஜெர்மன் வங்கி, KFW நிதி வழங்கியுள்ளது. கொச்சி கப்பல்கட்டுமான லிமிடட் தான் வாட்டர் மெட்ரோ படகுகளை கட்டமைத்துள்ளது.

5. முதற்கட்டமாக 8 எலக்ட்ரிக் ஹைப்ரிட் படகுகள் கொச்சி ‘வாட்டர் மெட்ரோ’ சேவையில் இணைக்கப்படுகின்றன.

Leave your comments here...