சென்னை புதிய சர்வதேச விமான நிலையத்தின் சோதனை ஓட்டம் வரும் 25-ம் தேதி தொடக்கம்.!
- April 19, 2023
- jananesan
- : 318
- Chennai, NewAirport
சென்னை : மீனம்பாக்கத்தில் உள்ள புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் வரும் 25ம் தேதி பயணிகளின் பயன்பாட்டுக்கு வருகிறது. இதைத் தொடர்ந்து, அன்று முதல் புதிதாக டாக்கா-சென்னை-டாக்கா விமானசேவை துவக்கி வைக்கப்படுகிறது. புதிய முனையத்தில் அனைத்து வசதிகளையும் கண்டு விமானப் பயணிகள் மகிழ்ச்சி தெரிவித்தனர்.
சென்னை விமானநிலையத்தின் புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையத்தை கடந்த சில நாட்களுக்கு முன் பிரதமர் நரேந்திர மோடி துவக்கி வைத்தார். இந்த புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம், 108 குடியுரிமை கவுன்டர்கள், 100 பயணிகள் பாதுகாப்பு கவுன்டர்கள், 17 லிப்ட்கள், 17 எஸ்கலேட்டர்கள், 6 வாக்கலேட்டர்கள் மற்றும் பயணிகளின் உடைமைகளை கொண்டு செல்லும் 6 கன்வேயர் பெல்ட்டுகள், பயணிகளின் உடைமைகளை பரிசோதிக்கும் 3 அதிநவீன கருவிகள் என பல்வேறு அதிநவீன தொழில்நுட்ப வசதிகளுடன் தயார்நிலையில் உள்ளது.
இதைத் தொடர்ந்து, இந்த புதிய ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையம் வரும் 25ம் தேதி முதல் பயணிகளின் பயன்பாட்டுக்காக சோதனை ஓட்டம் நடைபெறுகிறது. முதல் கட்டமாக, இங்கிருந்து புதிதாக டாக்கா-சென்னை-டாக்கா விமான சேவை துவக்கி வைக்கப்படுகிறது. சென்னையில் புதிதாக கட்டப்பட்ட ஒருங்கிணைந்த சர்வதேச விமான முனையம் 1,36,295 சதுர மீட்டர் பரப்பில் அமைந்துள்ளது.
இந்திய, தமிழ்நாட்டு கலாசாரம், புராதன நினைவு சின்னங்கள், பிரசித்தி பெற்ற கோயில்களின் ஓவியங்களுடன், கலைநயத்துடன் அமைக்கப்பட்டுள்ளது. தற்போது பழைய பன்னாட்டு முனையத்தில் ஆண்டுக்கு 2 கோடியே 30 லட்சம் பயணிகள் பயணிக்கின்றனர். இனி புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் முழுமையாக செயல்பாட்டுக்கு வரும்போது 3 கோடிக்கும் மேற்பட்ட பயணிகள் வந்து செல்வதற்கான வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. இதில், பயணிகளின் பாதுகாப்புக்கு என பல்வேறு அதிநவீன புதிய தொழில்நுட்ப வசதிகள் செய்யப்பட்டு உள்ளன.
முதல் கட்டமாக, டாக்கா விமானம் உள்பட சில விமானங்கள் சோதனை அடிப்படையில் இயக்கப்படும். சோதனை ஓட்டத்தின்போது சிறிய விமானங்கள் மட்டுமே வந்து செல்லும். சோதனை ஓட்டம் வெற்றி பெற்றதும், வரும் மே மாதத்தில் இருந்து, புதிய முனையத்தில் பெரிய மற்றும் நடுத்தர ரக விமானங்களும் இயக்கப்படும். இதனால் புதிய முனையத்தில் ஏர்லைன்ஸ், காவல், பாதுகாப்பு மற்றும் உளவுத்துறை நிறுவனங்களின் அலுவலகங்கள் இடமாற்றம் செய்யும் பணிகள் நிறைவு பெற்றுள்ளன.
புதிய ஒருங்கிணைந்த சர்வதேச முனையம் செயல்பட துவங்கியதும், சில மாதங்களுக்கு பழைய மற்றும் புதிய விமான முனையங்கள் ஒரே நேரத்தில் செயல்படும். பின்னர், தற்போது சர்வதேச முனையமாக உள்ள டி4, உள்நாட்டு முனையமாக மாற்றப்படும். அதோடு டி3 எனும் தற்போதைய சர்வதேச முனையத்தின் வருகை பகுதி கட்டிடங்கள் உடைக்கப்பட்டு, புதிதாக ஃபேஸ் 2 கட்டிடப் பணிகள் துவங்கும் என்று சென்னை விமான நிலைய அதிகாரிகள் தெரிவித்தனர்.
Leave your comments here...