சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் – ஏப்.16 வரை டிக்கெட் முன்பதிவு முடிந்தது..!
சென்னை-கோவை வந்தே பாரத் ரயில் மார்க்கத்தின் இரு மார்க்கத்திலும் ஏப்.16ம் தேதி வரை டிக்கெட் ரிசர்வேஷன் முடிந்துள்ளது. வெயிட்டிங் லிஸ்ட்டில் மட்டுமே அதிகம் பேர் உள்ளனர். சென்னை-கோவை இடையே நேற்று முன்தினம் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் இயக்கப்படுகிறது. இதற்கான முன்பதிவு கடந்த 2 நாட்களுக்கு முன்பு தொடங்கியது.
சென்னை-கோவை இடையிலான ‘வந்தே பாரத்’ ரயில் சேவையை பிரதமர் மோடி நேற்று முன்தினம் தொடங்கி வைத்தார். இந்தியாவில், ஒரு மாநிலத்துக்குள்ளேயே இயக்கப்படும் முதல் ‘வந்தே பாரத்’ ரயில் இதுவாகும். இது, சென்னையிலிருந்து கோவைக்கு 5 மணி நேரம் 50 நிமிடத்தில் சென்று சேர்வதால், ரயில் பயணிகள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளது.
வாரத்தில், புதன்கிழமை தவிர வாரத்தின் மற்ற 6 நாட்களும் இயக்கப்படும். இந்த ரயில் கோவையில் இருந்து காலை 6 மணிக்கு புறப்பட்டு, காலை 11.50 மணிக்கு சென்னை சென்ட்ரல் ரயில் நிலையம் வந்தடையும். மறுமார்க்கத்தில், மதியம் 2.25 மணிக்கு சென்னை சென்ட்ரலில் இருந்து புறப்பட்டு, இரவு 8.15 மணிக்கு கோவை ரயில்நிலையம் சென்றடையும். இந்நிலையில், இந்த ரயிலுக்கான முன்பதிவு தொடங்கப்பட்டுள்ளது. இதன்படி ஏசி சேர் கார் வகுப்பில் சென்னையில் இருந்து கோவை செல்ல 1,215 ரூபாய் கட்டணமாக நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
ஏசி எக்சிகியூட்டிவ் சேர் கார் வகுப்பில் சென்னையில் இருந்து கோவை செல்ல 2,310 ரூபாய் கட்டணம். ஆனால், காலியாக இருக்கும் பயணச்சீட்டுகளின் எண்ணிக்கையை பொறுத்து கட்டணம் மாறுபடும். இந்நிலையில் நேற்று தொடங்கப்பட்ட சென்னை-கோவை வரையிலான வந்தே பாரத் ரயிலின் டிக்கெட்கள் 16ம் தேதி வரை டிக்கெட் முழுமையாக விற்கப்பட்டுள்ளது. இதனால் முன்பதிவு செய்ய காத்திருந்த பலர் ஏமாற்றம் அடைந்தனர்.
Leave your comments here...