பேரூராட்சிகளில் போலி வவுச்சர் பில்… நடவடிக்கை எடுப்பாரா நேர்மையான இயக்குனர்..?
முன்னாள் முதலமைச்சர் எம்ஜிஆர் அவர்கள் 1981-ல் முதல்வராக இருந்தபோது ஊராட்சிகளில் அதிக வருமானம் மற்றும் மக்கள் தொகை அதிகம் உள்ள ஊராட்சிகளை பேரூராட்சிகளாக தர உயர்த்தினார். அப்போது 648 பேரூராட்சிகள் உருவாக்கப்பட்டு பேரூராட்சி இயக்குனரமாக துவங்கப்பட்டது.
தற்போது தமிழகத்தில் மொத்தம் உள்ள 17 பேரூராட்சி மண்டலங்கள் 490 பேரூராட்சிகளை உள்ளடக்கியதாகும்.இதில் காஞ்சிபுரம்,திருவள்ளூர், கோயம்புத்தூர், கன்னியாகுமரி மண்டலங்களில் உள்ள பல பேரூராட்சிகள் போலி வவுச்சர் பில் போடுவதற்காகவே நேர்ந்து விட்ட பேரூராட்சிகள் ஆகும். பேரூராட்சிகளில் முறையாக டெண்டர் விடப்பட்டுதான் பணிகள் நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. ஆனால் தேவையே இல்லாமல் பேரூராட்சி செயல் அலுவலர்கள் போலியான வவுச்சர் பில்களை போட்டு கொள்ளையடித்து தங்கள் வயிற்றை நிரப்புகின்றனர்.
இவர்கள் கொள்ளையடிக்கும் பணத்தை பேரூராட்சிகளின் நிலைகளுக்கு ஏற்றவாறு அந்த மாவட்டங்களின் பேரூராட்சி உதவி இயக்குனருக்கு கப்பம் கட்டுவதால் அவர்களும் பணத்தை வாங்கிக் கொண்டு நடக்கும் கொள்ளைகளை கண்டும் காணாமல் இருக்கின்றனர். இவர்களுக்கு மக்களின் வாழ்வாதாரத்தை பற்றியோ அவர்களின் அடிப்படை தேவைகளை பற்றியோ எந்த கவலையும் இல்லை.இந்த அதிகாரிகாள் “ஓம் வவுச்சர் பில்லே நமஹ” “ஓம் கொள்ளையடிப்பதே நமஹ” “ஓம் ஊழலே நமக” என்ற தாரக மந்திரத்தின் அடிப்படையில் செயல்படுகின்றனர்.
இதிலும் குறிப்பிட்ட பேரூராட்சிகள் அனைத்திற்கும் முன்னுதாரணமாக விளங்குவது கன்னியாகுமரி மாவட்ட பேரூராட்சிகள் ஆகும். தமிழகத்தில் அதிக பேரூராட்சிகளை அதாவது 51 பேரூராட்சிகளை கொண்ட மாவட்டமாகும். இதில் சில செயல் அலுவலர்களின் வேலையே போலி வவுச்சர் பில் போடுவதாகும். இவர்கள் மீது பல ஊழல் வழக்குகள் லஞ்ச ஒழிப்புத் துறையில் நிலுவையில் உள்ளது.பல லட்சங்களை மேல் இடத்தில் கொடுத்து தப்பித்து வருகின்றனர். ஆனால் வெளியில் தங்களை மிகவும் ஹானஸ்ட் எனவும் தங்களைப் போன்ற நேர்மையானவர்கள் யாரும் இல்லை எனவும் காட்டிக் கொள்வார்கள்.இவர்கள் கொள்ளையடிப்பது மக்கள் பிரதிநிதியான பேரூராட்சி தலைவர்களுக்கு கூட தெரியாது.
இவர்கள் கடந்த 10 வருட அதிமுக ஆட்சியில் 5 ஆண்டுகள் உள்ளாட்சித் தேர்தல் நடைபெறாததால் கேட்பதற்கு மக்கள் பிரதிநிதி இல்லாததால் தனியாக கொள்ளையடித்து ருசி கண்டவர்கள். அதனால் தற்பொழுதும் இதே பாணியை பின்பற்றுகிறார்கள். இவர்கள் கொள்ளையடிப்பதில் தணிக்கை துறை அதிகாரிகளுக்கு தனியாக 10% கமிஷன் கொடுப்பதால் அவர்களும் கண்டு கொள்வதில்லை. எனவே இவர்கள் கடந்த இரண்டு வருடங்கள் கையெழுத்திட்ட கோப்புகளை சிறப்பு தணிக்கை துறை அதிகாரிகளைக் கொண்டு பேரூராட்சி இயக்குனர் கிரண் குராலா அவர்கள் ஆய்வு செய்தால் பல கோடிகளில் முறைகேடுகள் நடந்திருப்பது வெளிச்சத்திற்கு வரும்….! நேர்மையான இயக்குனர் ஆய்வு செய்ய உத்தரவிடுவாரா…?
Leave your comments here...