ராமலிங்கம் கொலை வழக்கு – சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி இறப்பு..!
- February 20, 2023
- jananesan
- : 524
தஞ்சாவூர் மாவட்டம் திருப்புவனத்தில் ராமலிங்கம் கொலை செய்யப்பட்ட வழக்கில் கைது செய்யப்பட்டு, பூந்தமல்லி சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த கைதி சார்புதீன் (62), உடல்நலக் குறைவு காரணமாக மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இறந்தார்.
இதுகுறித்து போலீஸ் தரப்பில் கூறப்பட்டதாவது:தஞ்சாவூர் மாவட்டம், திருபுவனம் மேலதூண்டில் விநாயகம்பேட்டையைச் சேர்ந்தவர் பாமக முன்னாள் நகரச் செயலர் வ.ராமலிங்கம். இவர், அந்தப் பகுதியில் சிலர் மதமாற்றத்தில் ஈடுபட்டதை கண்டித்தார்.இந்நிலையில், ராமலிங்கம், கடந்த 2019 ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 5 ஆம் தேதி தனது கடையில் இருந்து வீட்டுக்கு செல்லும்போது வெட்டிக் கொலை செய்யப்பட்டார்.
இது குறித்து திருவிடைமருதூர் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். இந்த வழக்குத் தொடர்பாக போலீஸார், குறிச்சிமலை பகுதியைச் சேர்ந்த எச். முகமது ரியாஸ், திருபுவனத்தைச் சேர்ந்த எஸ். நிஸாம் அலி, யா.சர்புதீன், என். முகமது ரிஸ்வான், திருவிடைமருதூரைச் சேர்ந்த ஏ. அசாருதீன், திருமங்கலக்குடியைச் சேர்ந்த முகமது தவ்பீக், முகமது பர்வீஸ், ஆவணியாபுரத்தைச் சேர்ந்த தவ்ஹித் பாட்சா,பாப்புலர் பிரன்ட் ஆப் இந்தியா அமைப்பின் காரைக்கால் மாவட்டச் செயலரும், காரைக்கால் பெருமாள் கோயில் தெருவைச் சேர்ந்தவருமான ஏ. முகமது ஹசன் குத்தூஸ் உள்பட பலர் கைது செய்யப்பட்டனர்.
இந்த கொலை வழக்கு குறித்து தேசிய புலனாய்வுத்துறை விசாரணை விசாரிக்க வேண்டும் என அரசியல் கட்சிகளும், இந்து இயக்கங்களும் வலியுறுத்தி வந்தன. இதையடுத்து இந்த வழக்கின் விசாரணையை தேசிய புலனாய்வுத்துறைக்கு மாற்றி மத்திய உள்துறை உத்தரவிட்டது.இந்த உத்தரவின்படி, தமிழக காவல்துறை வழக்கின் ஆவணங்களை தேசிய புலனாய்வுத்துறையிடம் ஒப்படைத்தது. இதையடுத்து தேசிய புலனாய்வுத்துறை அதிகாரிகள், ராமலிங்கம் கொலை குறித்து புதிதாக ஒரு வழக்கை பதிவு செய்து, விசாரணை செய்து வருகின்றனர்.
இந்நிலையில், இந்த வழக்கில் கைது செய்யப்பட்டு, சென்னை பூந்தமல்லி சிறப்பு சிறையில் அடைக்கப்பட்டிருந்த யா.சார்புதீன் (62), சிறுநீரக பாதிப்பின் காரணமாக கடந்த 15 ஆம் தேதி ஸ்டான்லி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். அங்கு தீவிர சிகிச்சை பெற்று வந்த சர்புதீன், சிகிச்சை பலனின்றி ஞாயிற்றுக்கிழமை நள்ளிரவு இறந்தார்.இது குறித்து பூந்தமல்லி போலீஸார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
Leave your comments here...