டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை..!

இந்தியா

டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை..!

டெல்லி, மும்பையில் உள்ள பிபிசி அலுவலகங்களில் வருமானவரித்துறை அதிரடி சோதனை..!

குஜராத்தில் 2002-ம் ஆண்டு கோத்ரா ரெயில் எரிப்பு சம்பவத்தை தொடர்ந்து மதக்கலவரம் வெடித்தது. இந்த கலவரத்தில் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர். இந்த கலவரம் நடைபெற்றபோது குஜராத்தின் முதல்-மந்திரியாக நரேந்திரமோடி செயல்பட்டு வந்தார். இதனிடையே, நரேந்திரமோடி தற்போது இந்தியாவின் பிரதமராக உள்ள நிலையில் குஜராத் கலவரம் தொடர்பாக இங்கிலாந்து செய்தி நிறுவனமான பிபிசி ஆவணப்படம் எடுத்துள்ளது.

இந்தியா: மோடி கேள்விகள் என்ற தலைப்பில் 2 பகுதிகளாக பிபிசி செய்தி நிறுவனம் வெளியிட்ட அந்த ஆவணப்படத்தின் முதல் பகுதியில் குஜராத் வன்முறைக்கு நேரடி பொறுப்பு அப்போதைய முதல்-மந்திரியும் இப்போதைய பிரதமருமான நரேந்திர மோடி என்று குறிப்பிட்டுள்ளது. மேலும், பிபிசி ஆவணப்படத்தின் 2-ம் பகுதியில் காஷ்மீருக்கு சிறப்பு அந்தஸ்த்து ரத்து, டெல்லி வன்முறை, குடியுரிமை திருத்தச்சட்டம் உள்பட மத்திய அரசு மேற்கொண்ட பல்வேறு நடவடிக்கைகளை விமர்சனம் செய்துள்ளது.

இந்த ஆவணப்படம் இந்தியாவுக்கு எதிரான பிரசாரத்திற்காக உருவாக்கப்பட்டதாகவும், காலனி ஆதிக்க மனப்பான்மையை காட்டுவதாகவும் பிபிசி ஆவணப்படத்திற்கு மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகம் தெரிவித்தது. தொடர்ந்து இந்த ஆவணப்படத்தை இந்தியாவில் வெளியிடவும் மத்திய அரசு கடந்த மாதம் 21-ம் தேதி தடை விதித்தது. இங்கிலாந்து உள்பட பல்வேறு வெளிநாடுகளில் பிபிசி இந்த ஆவணப்படத்தை வெளியிட்டுள்ள நிலையில் இந்தியாவில் தடையை மீறி பல அமைப்புகள் இந்த ஆவணப்படத்தை சட்டவிரோதமாக வெளியிட்டு வருகின்றன. டெல்லி ஜவகர்லால் நேரு பல்கலைக்கழகம், அலிகார் முஸ்லிம் பல்கலைக்கழகம், டெல்லி பல்கலைக்கழகம், டெல்லி அம்பேத்கார் பல்கலைக்கழகம் உள்பட பல்வேறு பல்கலைக்கழங்களில் தடையை மீறி பிரதமர் மோடி குறித்த பிபிசியின் ஆவணப்படம் வெளியிடப்பட்டது. மேலும், இந்தியா: மோடி கேள்விகள் என்ற இந்த பிபிசியின் ஆவணப்படம் இந்தியாவில் சமூகவலைதளங்கள் மூலம் பகிர்வதை தடுக்கவும் தேவையான நடவடிக்கைகளை எடுக்கும்படி டுவிட்டர், பேஸ்புக் போன்ற சமூகவலைதள நிறுவனங்களுக்கு மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது.

இந்த நிலையில் டில்லியில் உள்ள பிபிசி செய்தி நிறுவன அலுவலகத்தில் வருமான வரித்துறை அதிகாரிகள் சோதனை நடத்தி வருகின்றனர். காலை 11:30 மணி முதல் சோதனை நடப்பதாக கூறப்படுகிறது.இதனால், ஊழியர்கள் அனைவரின் செல்போன்களை பறிமுதல் செய்த அதிகாரிகள் அனைவருக்கும் விடுப்பு அளித்தனர். இதனைத் தொடர்ந்து மும்பையில் உள்ள பிபிசி அலுவலகத்திலும் சோதனை நடப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

Leave your comments here...