16 ஆண்டுகளுக்கு பிறகு கோலாகலமாக நடந்த பழனி முருகன் கோவில் கும்பாபிஷேகம் விழா..!
உலக பிரசித்தி பெற்ற பழனி முருகன் கோவிலில் கடந்த 2006-ம் ஆண்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது. அதையடுத்து 2019-ல் பாலாலய பூஜையுடன் கும்பாபிஷேக திருப்பணிகள் தொடங்கின.
இந்நிலையில் கடந்த டிசம்பர் மாதம் நடந்த அறங்காவலர் குழு, அலுவலர்கள் கூட்டத்தில் ஜனவரி 27-ல் (இன்று) கும்பாபிஷேகம் நடத்த முடிவு செய்யப்பட்டு பணிகள் முழுவீச்சில் நடைபெற்றது. இதையொட்டி கடந்த 18-ந்தேதி கும்பாபிஷேகத்துக்கான பூர்வாங்க பூஜைகள் தொடங்கிய கலசஸ்தாபனம் நடந்தது. 23-ந்தேதி மூலவர் தண்டாயுதபாணி சுவாமி மற்றும் அனைத்து உபசன்னதி தெய்வங்களின் சக்தி கலசத்தில் கொணரப்பட்டது.
பின்னர் சக்திகலசங்கள் யாகசாலைக்கு கொண்டு வரப்பட்டு முதற்கால யாகம் நடந்தது. 90 குண்டங்கள் அமைக்கப்பட்ட யாகசாலையில் பிள்ளையார்பட்டி பிச்சை சிவாச்சாரியார் தலைமையில் தினமும் 2 கால யாகபூஜை நடைபெற்றது. அதன்படி நேற்றுமுன்தினம் 5 கால யாகங்கள் முடிவு பெற்றன. 6-ம் கால யாகபூஜை தொடங்கியது. அப்போது ஐந்திருக்கை ஐந்து சுற்று பூஜை, விதை, தண்டு, வேர் மற்றும் மூலிகை பொருட்கள், வாசனை திரவியங்களை கொண்டு சிறப்புயாகம் நடந்தது. தொடர்ந்து சிறப்பு தீபாராதனை நடந்தது. பின்னர் ஓதுவார்கள் கட்டியம், கந்தபுராணம் பாடினர்.
தொடர்ந்து யாகம் நிறைவு பூஜை, திருமுறை விண்ணப்பம், முருகன் பிள்ளைத்தமிழ் பாடப்பட்டது. பின்னர் நேற்று மாலை 5.30 மணிக்கு 7-ம் கால யாக பூஜை நடைபெற்றது. இன்று (வெள்ளிக்கிழமை) காலை 4.30 மணிக்கு 8-ம் கால யாகபூஜை நடைபெற்றது. அப்போது பல்வேறு வகை பொருட்கள், மூலிகைகளால் சிறப்பு யாகம், தீபாராதனை காட்டப்பட்டது. தொடர்ந்து திருமுறை, கந்தபுராணம், கட்டியம், திருப்புகழ் பாடப்பட்டது. பின்னர் யாகசாலையில் இருந்து சக்தி கலசங்கள் புறப்பாடு நடைபெற்றது. தொடர்ந்து வாத்திய இசை முழங்க ராஜகோபுரம், தங்கவிமானத்தில் உள்ள கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு கும்பாபிஷேகம் நடைபெற்றது.
அப்போது ராஜகோபுரம், தங்கவிமானம் மற்றும் பக்தர்கள் மீது ஹெலிகாப்டரில் இருந்து மலர் தூவப்பட்டது. கும்பாபிஷேகம் விழாவை காண பல்லாயிரக்கணக்கான பக்தர்கள் பழனியில் குவிந்தனர். ஆனால் 4 ஆயிரம் விஐபிகள், 2 ஆயிரம் பக்தர்களுக்கு மட்டுமே கும்பாபிஷேகத்தை நேரில் பார்க்க அனுமதி அளிக்கப்பட்டது. குடமுழுக்கு நிகழ்ச்சி தொடர்ந்து நிகழ்ச்சி நிரல்களை மலை அடிவாரத்தில் வைக்கப்பட்டுள்ள எல்இடி திரையில் பக்தர்கள் கண்டு ரசித்து வருகின்றனர்.
கும்பாபிஷேக விழாவில் இந்து அறநிலையத் துறை அமைச்சர் சேகர்பாபு, உணவுத்துறை அமைச்சர் சக்கரபாணி, அறங்காவலர் குழுத் தலைவர் சந்திரமோகன், இணை ஆணையர் நடராஜன், தலைமையிடத்து இணை ஆணையர் சுதர்சன், இணை ஆணையர் மேனகா, கந்தவிலாஸ் செல்வக்குமார் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரமுகர்கள் கலந்துகொண்டனர். கும்பாபிஷேகத்தையொட்டி , திண்டுக்கல் மாவட்டத்துக்கு வெள்ளிக்கிழமை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.
மேலும், கும்பாபிஷேக விழாவில் கலந்து கொள்ள வரும் பக்தர்களுக்கு தேவையான குடிநீர் மற்றும் கழிப்பறை வசதிகள் செய்யப்பட்டுள்ளன. தென்மண்டல ஐஜி அஸ்ரா கார்க் தலைமையில் 3 ஆயிரம் போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
Leave your comments here...