அரசு மருத்துவர்களை தங்கள் ஊதியத்திற்காக தொடர்ந்து போராட வைப்பது நியாயமா? – மருத்துவர் பெருமாள் பிள்ளை கேள்வி
சமூக நீதியை காப்பதில் தமிழகம் முன்மாதிரியாக இருப்பதாக பெருமையாக சொல்லும் அரசு, அரசு மருத்துவர்களை தங்கள் ஊதியத்திற்காக தொடர்ந்து போராட வைப்பது நியாயமா? என அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை கேள்வி எழுப்பியுள்ளார்.
இது குறித்து அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை தமிழ்நாடு அரசு உடனடியாக நிறைவேற்றித்தர வேண்டுமென விடுத்துள்ள கோரிக்கையில்:-
1) தமிழக அரசு மருத்துவர்கள் கடந்த 13 ஆண்டு காலமாக காலம் சார்ந்த ஊதிய உயர்வு தரப்பட வேண்டி தொடர்ந்து அரசை வலியுறுத்தி வருகிறோம்.
2) கோரிக்கை: 23.10.2009 தேதி அரசாணை 354- ன் எதிர்கால சரத்துக்களை(Prospective Clause) அமுல்படுத்தி தற்போது உள்ள 8,15,17,20 ஆண்டுகள் முடித்து கொடுக்கப்படும் காலம் சார்ந்த ஊதிய உயர்வை 5,9,11,12 ஆண்டுகள் முடிந்தவுடன் கொடுக்குமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம். முக்கியமாக 20 ஆண்டுகள் முடிந்து கொடுக்கப்படும் ஊதியப்பட்டை நான்கை 12 ஆண்டுகள் முடிந்து 13-ம் ஆண்டு துவக்கத்தில் தந்து உதவுமாறு பணிவுடன் கேட்டுக்கொள்கிறோம்.
3) எல்லா ஊதிய குழுக்களிலும் மத்திய அரசு எம்.பி.பி.எஸ்., படித்த மருத்துவரும், மாநில அரசின் எம்.பி.பி.எஸ்., மருத்துவரும், ஒரே அடிப்படை சம்பளத்தில் தான் பணியில் இணைகிறோம்.
4) 7வது ஊதியக்குழுவில் மத்திய அரசு எம்.பி.பி.எஸ்., மருத்துவரும், மாநில அரசு எம்.பி.பி.எஸ் மருத்துவரும் ரூ.56,100/- எனும் அடிப்படை ஊதியத்திலேயே பணியில் சேருகிறோம்.
5) 4,9,13,20, ஆண்டுகள் கழித்து மத்திய அரசு எம்.பி.பி.எஸ்., மருத்துவர் காலம் சார்ந்த ஊதிய உயர்வும், பதவி உயர்வும் பெறுகின்றனர். இதன் விளைவாக 7வது ஊதியக் குழுவில் 13 ஆண்டுகள் முடித்து 14 வது ஆண்டில் ரூ.1,23,000/- ஒரு மத்திய அரசு மருத்துவர் அடிப்படை ஊதியமாக பெறுகிறார். அவர்கள் தனியாரில் தொழில் செய்யாத காரணத்தினால் 20% அடிப்படை ஊதியத்தை கூடுதலாக பெறுகின்றனர்.
6) ஒரு மத்திய அரசு எம்.பி.பி.எஸ் மருத்துவர் 4 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் 15 ஆண்டுகள் கழித்தும், 9 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் 17 ஆண்டுகள் கழித்தும் 13 ஆண்டுகளில் பெறுகின்ற ஊதிய உயர்வை மாநில அரசு மருத்துவர் 20 ஆண்டுகள் கழித்தும் பெறுகின்ற நிலை நிலவுகிறது.
7) இதன் விளைவாக மத்திய அரசு மருத்துவர் 13 ஆண்டுகள் பெறுகின்ற ஊதியமான ரூ.1,23,000 /- த்திற்கு பதிலாக மாநில அரசு மருத்துவர் ரூ.86,000/- ஐ அடிப்படை ஊதியமாக பெறுகின்றர்,
8) 14-வது ஆண்டு முதல் பணி மூப்பு அடையும் வரை மாதம்தோறும் ரூ.40,000 முதல் ரூ.45,000 வரை மாநில அரசு மருத்துவர் குறைவான அடிப்படை ஊதியம் பெற வேண்டிய நிலை உள்ளது.
9) 2017ஆம் ஆண்டு முதல் 23.10.2009 தேதியிட்ட அரசாணை 354- ன் எதிர்கால சரத்துகளை அமுல்படுத்தி 13- ம் ஆண்டு முதல் ரூ.1,23,000 /- ஐ அடிப்படை ஊதிய மாநில அரசு மருத்துவருக்கு வழங்குமாறு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறோம்.
10) இக் கோரிக்கை குறித்து பலமுறை அரசிடம் பலகட்ட பேச்சுவார்த்தைகள் நடந்துள்ளது. 2018 ஆண்டு நடத்தப்பட்ட தொடர் போராட்டத்தின் இறுதியில் அரசு மருத்துவர் காலம் சார்ந்த ஊதிய உயர்வு குறித்து ஆய்வு செய்ய துறைசார்ந்த கமிட்டி அமைக்கப்பட்டது. கூடுதல் சுகாதாரத் துறை செயலர் தலைமையில் துறை தலைவர்களை உள்ளடக்கிய அந்த குழு அரசு மருத்துவர் காலம் சார்ந்த ஊதிய உயர்வு கோரிக்கையை அரசாங்கம் அரசாணை 354-ன் எதிர்கால சரத்துக்களை கவனத்தில் கொண்டு 5,9,11,12 ஆண்டுகளில் காலம் சார்ந்த ஊதிய உயர்வை தரவேண்டும் என பரிந்துரைத்தது. அதே ஆண்டில் சென்னை உயர்நீதிமன்ற மதுரை கிளை இது சம்பந்தமாக ஒரு பொது நல வழக்கில் சுகாதாரத் துறையை மேம்பட்ட துறையாக வைத்திருக்க காரணமான அரசு மருத்துவர்கள் காலம் சார்ந்த சம்பள உயர்வை அரசு அமைத்த கமிட்டியின் பரிந்துரைகளை கவனத்தில் எடுத்து கொண்டு சாதகமாக முடிவை விரைவில் எடுக்குமாறு ஆணை பிறப்பித்தது.
11) 27.08.2019 அன்று சாகும் வரை உண்ணாவிரதத்தின் முடிவிலும் ,ஒரு நாள் வேலை நிறுத்தத்தின் இறுதியிலும் சுகாதாரத்துறை அமைச்சர் அவர்கள் முன்னிலையில் நடந்த பேச்சுவார்த்தையில் 6 வார காலத்தில் எங்கள் கோரிக்கையை பரிசீலித்து சாதகமான முடிவை தருவதாக சுகாதாரத் துறை சார்பாக எழுத்துப்பூர்வமாக உறுதியளிக்கப்பட்டது.
12) மேற்கண்ட உறுதிமொழி நிறைவேற்றப்படாத காரணத்தால் முதல் 25.10.2019 காலவரையற்ற வேலை நிறுத்தத்திற்கு அரசு மருத்துவர்கள் தள்ளப்பபட்டோம் அதே தேதியில் எங்கள் கோரிக்கைகளை நிறைவேற்றுவது குறித்து மாண்புமிகு தமிழக முதல்வர் தலையிடக் கோரி 5 மருத்துவர்கள், 2 பெண் மருத்துவர்கள் உட்பட சாகும்வரை உண்ணாவிரதத்தை மேற்கொண்டனர். இந்த வேலை நிறுத்தத்தின் போது கையெழுத்திடாமல் அரசு மருத்துவர்கள் எந்தவித தங்கு தடையும் இன்றி உயிர்காக்கும் அனைத்து சிகிச்சைகளையும் மேற்கொண்டு வந்தோம் என்பது குறிப்பிடதக்கது.
13) 31.10.2019 அன்று மாண்புமிகு தமிழக முதல்வர் அரசு மருத்துவர்கள் வேலை நிறுத்தத்தை கைவிட்டு பணிக்கு திரும்ப வேண்டும் என கொடுத்த வேண்டுகோளின் அடிப்படையில் 01.11.2019 காலை 7 மணிக்கு எந்தவித நிபந்தனையுமின்றி அரசு மருத்துவர்கள் காலவரையற்ற வேலைநிறுத்தத்தையும், சாகும்வரை உண்ணாவிரதத்தையும் விலக்கிக் கொண்டோம்.
14) அதன்பிறகு அரசு எங்களை அழைத்து பேச வேண்டும் என்று நாங்கள் விடுத்த வேண்டுகோளுக்கு அரசு செவிசாய்க்கவில்லை மாறாக பெண் மருத்துவர்கள் உட்பட 118 அரசு மருத்துவர்கள் நீண்ட தூரத்திற்கு பணியிட மாற்றம் செய்யப்பட்டனர். இதுதொடர்பான வழக்கில் கடந்த 2020 ம் ஆண்டு பிப்ரவரி 28-ஆம் தேதி சென்னை உயர் நீதிமன்றம், தண்டனையை ரத்து செய்ததோடு, கோரிக்கையை நிறைவேற்ற அரசு வலியுறுத்தியது இருப்பினும் ஓராண்டுக்கு பிறகு, அதுவும் நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடர்ந்த பிறகு தான் மருத்துவர்களுக்கு தரப்பட்ட தண்டனைகள் அனைத்தையும் அரசு முழுமையாக ரத்து செய்துள்ளது.
15) சுகாதாரத் துறையில் மிக சிறப்பான செயல்பாட்டிற்கு காரணமான அரசு மருத்துவர்களின் அடிப்படை ஊதியம், மத்திய அரசு மருத்துவர்களை ஒப்பிடும்போது மிகவும் பின்தங்கியுள்ளது. அருகில் உள்ள கேரளா, கர்நாடகா, பாண்டிச்சேரி போன்ற மாநிலங்களை காட்டிலும் தமிழக அரசு மருத்துவர்களின் அடிப்படை ஊதியம் குறிப்பாக 13 ஆண்டுகள் தொடங்கி மிகவும் பின் தங்கியுள்ளது.
16) கடந்த அதிமுக ஆட்சியில், 2019 ம் ஆண்டு அக்டோபர் மாத இறுதியில், ராஜீவ் காந்தி அரசு மருத்துவமனையில் மருத்துவர்கள் உண்ணாவிரதப் போராட்டம் நடத்திய போது, அடுத்து அமையும் திமுக ஆட்சியில் கோரிக்கை நிறைவேற்றப்படும் என நம் முதல்வர் நேரில் வந்து, பக்கத்தில் அமர்ந்து உறுதியளித்தார்கள்.
17) ஆனால் திமுக ஆட்சி அமைந்து ஒன்றரை வருடங்கள் ஆகியும், இன்னமும் அரசு மருத்துவர்களின் நியாயமான ஊதியக் கோரிக்கை நிறைவேற்றப்படவில்லை. தமிழக சுகாதாரத் துறை அமைச்சர் மற்றும் செயலாளர்களை நாம் ஏராளமான முறை சந்தித்து வேண்டுகோள் வைத்த பிறகும் மருத்துவர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளவில்லை.
18) அதுவும் திமுக ஆட்சி அமைந்த போது கொரோனா தொற்று உச்சத்தில் இருந்ததால் அசாதாரண சூழ்நிலை நிலவியது. அப்போது அரசுக்கு உறுதுணையாக இருந்ததோடு, தங்கள் உயிரையே பணயம் வைத்து பணியாற்றிய அரசு மருத்துவர்களின் எந்த ஒரு கோரிக்கையையும் இதுவரை அரசு நிறைவேற்றவில்லை என்பது மிகுந்த வருத்தமளிக்கிறது.
19) மேலும் சட்டப்போராட்டக் குழு (LCC) அரசின் கவனத்தை ஈர்க்கும் வகையில், சென்னை மற்றும் மதுரையில் தர்ணா போராட்டம், கண்ணில் கறுப்புத் துணி கட்டி ஆர்ப்பாட்டம், ஒருநாள் அடையாள உண்ணாவிரதம், கலைஞரின் பிறந்த நாளையொட்டி மருத்துவர்கள் கூட்டாக தமிழக முதல்வருக்கு வேண்டுகோள் என பல்வேறு போராட்டங்களை நடத்தியது. மேலும் மேட்டூரில் மருத்துவர் லட்சுமி நரசிம்மன் கல்லறையில் சாகும் வரை உண்ணாவிரதமும் இருந்த பிறகும் இந்த அரசாங்கத்தின் மனச்சாட்சியை தட்டி எழுப்ப முடியவில்லை.
20) இதையடுத்து சென்னை வள்ளுவர் கோட்டத்தில் குடும்பத்துடன் அரசு மருத்துவர்கள் உண்ணாவிரதம் மேற்கொண்டோம். கோரிக்கையை நிறைவேற்றியே தீர வேண்டும் என்ற இலக்கோடு, தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வருவது அரசுக்கு தர்மசங்கடம் ஏற்படும் என கருதி, தற்போது மருத்துவர்களை பழி வாங்கும் வகையில் அரசு செயல்படுகிறது.
21) அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழுவின் (LCC) தலைவர் டாக்டர் பெருமாள் பிள்ளை, செயலாளர் டாக்டர் தாஹிர் மற்றும் மகளிர் அணி செயலாளர் டாக்டர் லதா பாலகிருஷ்ணன் ஆகியோருக்கு 17b குற்ற குறிப்பாணையை அரசு வழங்கி உள்ளது. அதாவது கலந்தாய்வில் நடந்த பல்வேறு முறைகேடுகளுக்கு சம்பந்தப்பட்ட அதிகாரிகள் மீது தானே அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும்?
22) அதைவிடுத்து பாதிக்கப்பட்ட மருத்துவர்களுக்கு நியாயம் கேட்ட பிரதிநிதிகளையே தண்டிப்பார்களா? அதுவும் வெந்த புண்ணிலே வேல் பாய்ச்சுவதா? இதுதான் தற்போது தமிழகத்தில் உயிர்காக்கும் மருத்துவர்களுக்கு இருக்கும் ஜனநாயக உரிமையா?
23) கடந்த அதிமுக ஆட்சியில் அரசு மருத்துவர்கள் வேலைநிறுத்தம் செய்ததற்காக தண்டிக்கப்பட்ட போது, அரசை கண்டித்து முதலில் குரல் எழுப்பியது நம் முதல்வரே. ஆனால் இப்போது பதவி உயர்வு மற்றும் பணியிட மாறுதலுக்கான கலந்தாய்வில் நடந்த முறைகேடுகளை சுட்டி காட்டியதற்கே தண்டனை என்பதை, சுதந்திர இந்தியாவில் தமிழகத்தை தவிர வேறு எங்குமே பார்க்க முடியாது?
24) கொரோனா பேரிடரில் தமிழகத்தின் பலமாக இருந்த 19 ஆயிரம் அரசு மருத்துவர்களின் சேவையை அங்கீகரிக்கவோ, கோரிக்கையை நிறைவேற்றவோ அரசு முன் வராததால், மருத்துவர்கள் கனத்த இதயத்துடன் பணி செய்கின்றனர்.அதுவும் கொரோனாவுக்கு பிறகும் மருத்துவர்களை தண்டிப்பது என்பதை தமிழகத்தை தவிர வேறு எங்குமே பார்க்க முடியாது.
25) தொடர்ந்து போராட்டம் நடத்துவதன் நோக்கம் என்னவென்றால், தமிழக முதல்வரின் கவனத்தை ஈர்க்க வேண்டும் என்பது தான். ஆகவே ஏற்கனவே அறிவித்தபடியே, கடந்த நவம்பர் 30 ம் தேதி கலைஞரின் நினைவிடத்தில் கோரிக்கை மனுவை சமர்ப்பித்து விட்டு, மௌனப் போராட்டம் நடத்த தயாரானோம். ஆனால் கலைஞர் சமாதியை நோக்கி சென்ற 50 க்கும் மேற்பட்ட அரசு மருத்துவர்களை, காவல் துறையினர் தடுத்து நிறுத்தி கைது செய்தனர். பின்னர் திருவல்லிக்கேணி சமுதாயக் கூடத்திற்கு அழைத்து செல்லப்பட்டு அமர வைக்கப்பட்டனர். பின்னர் மாலை 7 மணியளவில் மருத்துவர்கள் விடுதலை செய்யப்பட்டனர்.
26) சுகாதாரத் துறையில் தொடர்ந்து முன்னணி மாநிலமாக திகழும் தமிழகத்தில், அரசு மருத்துவர்களுக்கு நாட்டிலேயே மிகவும் குறைவான ஊதியம் தரப்படுகிறது. அதுவும் புதிதாக ஊதிய உயர்வு எதையும் மருத்துவர்கள் கேட்கவில்லை. இருக்கின்ற அரசாணையை (GO 354) நடைமுறைப்படுத்த வேண்டி தான் அரசு மருத்துவர்கள் போராடி வருகிறார்கள்.
27) மற்ற மாநிலங்களில் எம்பிபிஎஸ் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியத்தை விட 40 ஆயிரம் ரூபாய் குறைவாக இங்குள்ள எம்பிபிஎஸ், சிறப்பு மற்றும் உயர் சிறப்பு மருத்துவர்களுக்கு ஊதியம் தரப்படுகிறது. இதிலிருந்து தமிழகத்தில் அரசு மருத்துவர்களுக்கு எந்த அளவுக்கு அநீதி இழைக்கப்படுகிறது என்பது தெரிகிறது.
28) அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை நிறைவேற்ற அரசுக்கு ஆண்டுக்கு கூடுதலாக 300 கோடி ரூபாய் மட்டுமே தேவைப்படுகிறது. மேலும் மருத்துவர்களுக்கு தரப்படும் ஊதியம் என்பது மக்களின் சுகாதாரத்திற்கான முதலீடு தானே தவிர செலவினம் அல்ல.
29) அதுவும் கொரோனா பரவலின் போது, பொது சுகாதாரத் துறையின் தேவை மற்றும் அதன் முக்கியத்துவம் குறித்து அனைவருக்கும் நன்றாகவே தெரியும். எனவே அரசுக்கு சுகாதாரத் துறை மீது உண்மையில் அக்கறை இருந்தால், அரசு மருத்துவர்களின் ஊதியக் கோரிக்கையை உடனே நிறைவேற்ற வேண்டும்.
30) அதுவும் தமிழகம் சமூக நீதியை காப்பதில் மற்ற மாநிலங்களுக்கு முன்மாதிரியாக உள்ளதாக அரசு பெருமையாக சொல்கிறது. அதேநேரத்தில் இந்த சமூகத்தை உயிரோட்டமாக வைத்திருக்க, வருடம் முழுக்க தங்கள் பங்களிப்பை தரும் அரசு மருத்துவர்களை, தங்கள் ஊதியத்திற்காக தொடர்ந்து போராட வைப்பது நியாயமா?
31) எனவே தமிழக முதல்வர் அவர்கள் உடனடியாக தலையிட்டு மூன்று மருத்துவர்களின் தண்டனையை ரத்து செய்ய வேண்டுகிறோம். மேலும் கலைஞரின் அரசாணை 354 உள்ளிட்ட கோரிக்கைகளை உடனடியாக நிறைவேற்றி, அரசு மருத்துவர்கள் மன நிம்மதியுடன் பணி செய்யும் சூழலை இங்கு உருவாக்க வேண்டும் என வேண்டிக் கேட்டுக் கொள்கிறோம்.
32) அதேநேரத்தில் கைது, தண்டனை, மற்றும் அச்சுறுத்தல் மூலம் கலைஞரின் அரசாணை 354 ஐ தொடர்ந்து கிடப்பில் போடலாம் என மட்டும் அரசு நினைக்க வேண்டாம். 19 ஆயிரம் அரசு மருத்துவர்களின் வாழ்வாதாரத்திற்காக எத்தகைய தியாகத்திற்கும் தயாராக இருக்கிறோம் என்பதை அரசுக்கு நாங்கள் உறுதிபடத் தெரிவித்துக் கொள்கிறோம்.
இவ்வாறு அரசு மருத்துவர்களுக்கான சட்டப்போராட்டக் குழு தலைவர் டாக்டர் எஸ். பெருமாள் பிள்ளை கோரிக்கை விடுத்துள்ளனர்.
Leave your comments here...