பெண்களும், அறிவியலும் நமது தேசத்தில் முன்னேறி வருவது பெண்களின் பங்களிப்புக்குச் சான்றாகும் – பிரதமர் மோடி
பெண்களும், அறிவியலும் நமது தேசத்தில் முன்னேறி வருவது அதிகரித்து வரும் பெண்களின் பங்களிப்புக்குச் சான்றாகும் என 108-வது இந்திய அறிவியல் மாநாட்டில் பிரதமர் மோடி கூறியுள்ளார்
பிரதமர் மோடி, 108-வது இந்திய அறிவியல் மாநாட்டை இன்று (03.01.2023) காணொலி காட்சி மூலம் தொடங்கிவைத்து உரையாற்றினார். இந்த ஆண்டின் இந்திய அறிவியல் மாநாட்டின் கருப்பொருளானது, “அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம் பெண்கள் மேம்பாட்டுடன் கூடிய நிலையான வளர்ச்சி” ஆகும். இந்த மாநாட்டில் அறிவியல் மற்றும் தொழில்நுட்பம் மூலம், நிலையான வளர்ச்சி, பெண்கள் மேம்பாடு அடைவது சம்பந்தமாக விவாதங்கள் நடைபெறும்.
மாநாட்டில் பிரதமர் மோடி காணொலிக் காட்சி வாயிலாக பேசும் போது, அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியாவின் வளர்ச்சிப் பயணத்திற்கு நம் நாட்டின் அறிவியல் திறனின் முக்கியத்துவத்தை முன்னிலைப்படுத்தினார். “நாட்டிற்காக சேவையாற்றும் உணர்வோடு அறிவியலின் ஆற்றல் இணையும் போது, நன்மைகள் முன் எப்போதும் இல்லாத அளவிற்கு அமையும். நம் நாட்டின் அறிவியல் துறையினருக்கு பொருத்தமான இடத்தை அடைவதை உறுதிப்படுத்தும் விதமாக செயல்பாடுகள் அமையும் என்பதை நான் முழுமையான நம்பிக்கைக் கொண்டிருக்கிறேன்.
உன்னிப்பாக கவனிப்பதே அறிவியலின் அடிப்படையாகும். விஞ்ஞானிகள் கூர்மையாக உற்று நோக்குவதன் மூலமாகவே தேவைப்பட்ட முடிவுகளை எடுப்பதற்கு வழிவகை செய்கிறது. இதற்கு தகவல் சேகரிப்பு மற்றும் முடிவுகளை ஆய்வு செய்வது மிக முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்த 21-ஆம் நூற்றாண்டு இந்தியாவில் தகவல் மற்றும் தொழில்நுட்பம் வளர்ச்சி பிரமிக்கத் தக்க வகையில் உள்ளது.
தரவுகள் பகுபாய்வுத் துறை அபரிமிதமான வளர்ச்சி அடைந்து வருவதன் விளைவாக, தகவல்கள் ஞானம் பெறும் வகையிலும், நடவடிக்கைகள் மேற்கொள்ளும் வகையிலும் அமைகிறது. பாரம்பரிய அறிவாற்றல் திறனாக இருந்தாலும் நவீன தொழில்நுட்பம் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு முக்கியப் பங்காற்றும். ஆராய்ச்சி தொடர்பான மேம்பாடு மூலம் பல்வேறு புதுமைகளைப் புகுத்தி அறிவியல் சார்ந்த நடவடிக்கைகளை வலுப்பெறும் விதமாக மாற்றுவது அவசியமாகும்.
அறிவியல் பூர்வமான அணுகுமுறையில் இந்தியாவின் ஆற்றல் என்பது உலகளாவியப் புத்தாக்க குறியீட்டின்படி, கடந்த 2015-ம் ஆண்டில் இந்தியா 81-வது இடத்திலிருந்து தற்போது 40-வது இடத்திற்கு முன்னேறியுள்ளது. டாக்டர் பட்டம் பெற்றவர்களின் எண்ணிக்கை, ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் வளர்ச்சி போன்றவற்றைக் கருத்தில் எடுத்துக் கொள்வதில் உலகளவில் முதல் மூன்று நாடுகளில் இந்தியாவும் ஒன்றாக உள்ளது.
இந்த ஆண்டு அறிவியல் மாநாட்டின் கருப்பொருள், பெண்கள் மேம்பாட்டுடன் கூடிய நிலையான வளர்ச்சி குறித்து மகிழ்ச்சிக் கொள்கிறேன். அறிவியல் மூலம் பெண்களுக்கு மேன்மை ஏற்படுவதோடு மட்டுமல்லாமல் அவர்களின் பங்களிப்பின் மூலம் அவற்றை மேம்படுத்துவதே நமது நோக்கமாகும். சமீபத்தில் ஜி-20 தலைமைத்துவத்தை இந்தியா பெற்றிருப்பதை சுட்டிக் காட்டிய பிரதமர், பெண்கள் தலைமையிலான வளர்ச்சிக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுகிறது என்றார்.
கடந்த 8 ஆண்டுகளில் ஆட்சி அமைப்பிலிருந்து சமூகம் சார்ந்த பொருளாதார மேம்பாடுகளை முனைப்புடன் முன்னெடுத்துச் செல்கின்றோம். அத்தகைய நடவடிக்கைகள் உலகளவில் இன்று விவாதப் பொருளாக மாறியுள்ளது. சிறு மற்றும் குறு தொழில் துறையாக இருந்தாலும், பெரிய ஸ்டார்ட்-அப் நிறுவனங்களின் தலைமைப் பொறுப்பாக இருந்தாலும், பெண்களின் ஆளுமைத் திறன் சிறந்து வெளிப்படுகிறது. இந்தியாவில் பெண்கள் மேம்பாட்டிற்காக முத்ரா கடன் உதவித் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. பெண்களும், அறிவியலும் நமது தேசத்தில் முன்னேறி வருவது, அதிகரித்து வரும் பெண்களின் பங்களிப்புக்குச் சான்றாகும்.
அறிவாற்றல் மூலம் நடவடிக்கைகள் மேற்கொள்ளும் விதமாக செயல்படுவது, விஞ்ஞானிகளுக்கு எப்பொழுதுமே சவால் நிறைந்ததாகும். அறிவியல் கண்டுபிடிப்புகள் ஆய்வகத்திலிருந்து வெளிவந்து, உலக அளவிலிருந்து உள்ளூர் அளவிலும், பெயரளவிற்கு இல்லாமல் பயன்பாட்டு அளவிலும், அதன் தாக்கங்கள் ஆய்வு நடவடிக்கைகளிலிருந்து அன்றாட வாழ்க்கை முறைக்கு வருவதுமே அறிவியலின் சிறந்த சாதனையாகும்.
ஆய்வக சோதனைகளுக்கும், மக்கள் அனுபவங்களுக்கும் இடையேயான தூரத்தை அறிவியலின் சாதனைகள் முழுமை பெறச் செய்கிறது. மேலும், இளைய தலைமுறையினருக்கு அறிவியலின் முக்கியத் தகவலை அளிக்கிறது. இளைஞர்களுக்கு உதவ அமைப்பு ரீதியிலான நடவடிக்கை மேற்கொள்ளப்பட வேண்டியதன் அவசியத்தை பிரதமர் சுட்டிக்காட்டினார். இதற்கு திறன் தேடல் மற்றும் ஹேக்கத்தான் போன்ற நிகழ்வுகள் குழந்தைகளிடம் உள்ள அறிவியல் அறிவாற்றலை வெளிக்கொணர்வதற்கு உதவி செய்கிறது. விளையாட்டுத்துறையில் முன்னேறுவதற்கு அமைப்பு ரீதியிலான நடவடிக்கைகள் மற்றும் குரு-சீடர் அணுகுமுறை முக்கியத்துவம் வாய்ந்ததாகும். இந்தக் கலாச்சாரமே அறிவியல் துறையின் வெற்றிக்கும் அடித்தளமாகும்.
நம் நாட்டின் அறிவியல் துறையின் வளர்ச்சி குறித்துப் பேசிய பிரதமர், இந்தியாவின் தேவைகள் நிறைவேற்றப்படுவதன் மூலம் ஒட்டுமொத்த அறிவியல் துறையினரின் ஊக்கத்திற்கு அடித்தளமாக அமைந்துவிடுகிறது. நாட்டில் அறிவியல் துறை தற்சார்பு தன்மை பெறவேண்டும். அறிவியல் ஆற்றல் மிக்க 17-18 சதவீதம் பேரைக் கொண்ட இந்தியாவில், அவர்களின் பயனுள்ள நடவடிக்கைகள் ஒட்டுமொத்த மக்களுக்கும் பயன் அளிக்கும் வகையில் அமைய வேண்டும். ஒட்டு மொத்த மனித இனத்திற்குப் பயன் அளிக்கும் வகையில் அமையப் பெற்றிருக்கும் துறைகள் வளர்ச்சி அடையவேண்டும்.
தேசிய ஹைட்ரஜன் இயக்கம் தொடர்பான நடவடிக்கைகளில் இந்தியா ஈடுபட்டு வருகிறது. அதன் விளைவாக மிக நுட்பமான உபகரணங்களை இந்தியாவிலேயே உற்பத்தி செய்வதை சாத்தியமாக்க வேண்டும். புதிய நோய்களைத் தீர்க்கும் வகையிலான நடவடிக்கைகளை அறிவியல் துறையினர் கண்டு உணர வேண்டும். மேலும், புதிய தடுப்பூசிகள் குறித்த ஆராய்ச்சியும் முக்கியமானதாகும். நோய்களைக் குறித்த காலத்தில் கண்டறிவதற்கு ஒருங்கிணைந்த நோய் கண்காணிப்பு அவசியமாகும். இதற்கு அனைத்து அமைச்சகங்களும் ஒருங்கிணைந்து செயல்பட வேண்டும். சுற்றுச்சூழலுக்கு தகுந்த வாழ்க்கை முறை இயக்கம் விஞ்ஞானிகளுக்கு பேருதவி புரிந்துள்ளது.
2023-ஆம் ஆண்டை சர்வதேச சிறுதானியங்கள் ஆண்டாக ஐநா அறிவித்துள்ளதையடுத்து, இந்தியாவில் உள்ள அனைத்து மக்களும் பெருமை கொள்ளும் நேரமாகும். இதனையடுத்து சிறுதானியங்களை பயிர் செய்வது தொடர்பான நடவடிக்கைகளில் இந்தியா முன்னேற்றம் கண்டு வருகிறது. உயிரி தொழில்நுட்பவியலின் உதவியுடன் சிறுதானியங்கள் அறுவடைக்குப் பிந்தைய செலவினங்களைக் குறைப்பதற்கு அறிவியல் துறை சார்ந்தவர்கள் முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும். கழிவு மேலாண்மையில் அறிவியலின் பங்கு குறித்துப் பேசிய பிரதமர், திடக்கழிவு, மின்னணுக் கழிவு, மருத்துவக் கழிவு மற்றும் விவசாயக் கழிவு போன்றவற்றை திறன்படக் கையாள வேண்டும் என்றார்.
விண்வெளித்துறையில் தற்போது இந்தியா மிகப் பெரிய வளர்ச்சி அடைந்து வருவதை சுட்டிக்காட்டிய பிரதமர், குறைந்த விலையில், செயற்கைக் கோள்களை உருவாக்குவதன் மூலம் நமது சேவையை பல்வேறு உலக நாடுகள் தேடி வரும் நிலை ஏற்படும். ஆராய்ச்சி மற்றும் வளர்ச்சி ஆய்வகங்களையும் கல்வி நிறுவனங்களையும் இணைக்கும் நடவடிக்கைகளை தனியார் துறையினரும், ஸ்டார்ட்- அப் நிறுவனங்களும் மேற்கொள்ள வேண்டும். கணினி, ரசாயனம், தகவல் தொடர்பு, சென்சார்கள், க்ரிப்டாகிராஃபி போன்ற துறைகளில் இந்தியா வேகமாக வளர்ச்சி அடைந்து வருகிறது. இந்தத் துறைகளில் இளம் ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும், தேவைப்படும் அறிவாற்றல்களைப் பெற்று அந்தந்த துறைகளில், நிபுணத்துவம் பெறவேண்டும் என்றார்.
புதிய துறைகளில் கவனம் செலுத்தப்பட வேண்டும் என்றார். குறிப்பாக செயற்கை நுண்ணறிவு, நேரடியாக காண்பவற்றுடன் மேலதிக வரைபட, ஒலி, உணர்வு தகவல்களை முப்பரிணாமத்தில், இணைக்கும் தொழில்நுட்பம், போன்றவைகளுக்கு முன்னுரிமை அளிக்கப்பட வேண்டும். செமிகண்டக்டர் சிப்-கள் துறையில் புத்தாக்க நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட வேண்டும் என்பதை பிரதமர் வலியுறுத்தினார். எதிர்காலத்தில் முக்கியத்துவம் பெறும் புதிய அம்சங்கள் குறித்த முன்முயற்சிகளை நம் நாடு மேற்கொள்ளும் போது தான் தொழில்துறை 4.0-க்கு வழி நடத்தும் என்றார்.
பல்வேறு ஆக்கப்பூர்வமான நடவடிக்கைகள் மேற்கொள்வது சம்பந்தமாக இந்திய அறிவியல் மாநாட்டில் விவாதித்த முக்கிய விஷயங்கள் எதிர்காலத் திட்டங்களை உருவாக்கப் பயனுள்ளதாக அமையும் என்று நம்புவதாக பிரதமர் கூறினார். சுதந்திர இந்தியாவின் அமிர்தகாலப் பெருவிழாக் கொண்டாட்டங்களின் ஒரு பகுதியாக, நவீன அறிவியல் துறையில் இந்தியா மேன்மை அடைய முயற்சிகள் மேற்கொள்ளப்படும் என்றார்.
இந்திய அறிவியல் மாநாடு
இந்திய அறிவியல் மாநாட்டின் இந்த ஆண்டிற்கான கருப்பொருள் “பெண்கள் மேம்பாட்டுடன் கூடிய நிலையான வளர்ச்சிக்கு அறிவியல் மற்றும் தொழல்நுட்பத்தின் பங்கு” ஆகும். இந்த மாநாட்டில் இடம் பெறும் முழுமையான அமர்வுகளில், விண்வெளி, பாதுகாப்பு, தகவல் தொழில்நுட்பம் மற்றும் மருத்துவ ஆராய்ச்சி உள்ளிட்ட பல்வேறு துறைகளைச் சேர்ந்த நோபல் பரிசு பெற்றவர்கள், முன்னணி இந்திய மற்றும் வெளிநாட்டு ஆராய்ச்சியாளர்கள், பல்துறை நிபுணர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள் ஆகியோர் கலந்து கொள்கிறார். தொழில்நுட்ப அமர்வுகள் விவசாயம் மற்றும் வனவியல் அறிவியல், விலங்குகள், கால்நடை மற்றும் மீன்வள அறிவியல், மானுடவியல் மற்றும் வாழ்வியல் அறிவியல், ரசாயன அறிவியல், புவி அமைப்பு அறிவியல், பொறியியல் அறிவியல், சுற்றுச்சூழல் அறிவியல், தகவல் மற்றும் தொடர்பு அறிவியல் மற்றும் தொழில்நுட்பம், கணித அறிவியல், மருத்துவ அறிவியல், புதிய உயிரியல், இயற்பியல் மற்றும் தாவரவியல் அறிவியல் ஆகியவற்றில் பயன்பாட்டு ஆராய்ச்சியைப் பறைசாற்றுவதாக இருக்கும்.
நாடு முழுவதும் உள்ள அரசு, தனியார், பொதுத்துறை நிறுவனங்கள், கல்வி மற்றும் ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனங்கள், கண்டுபிடிப்பாளர்கள் மற்றும் தொழில்முனைவோரின் பலம் மற்றும் சாதனைகளை வெளிப்படுத்தும்‘’ இந்தியாவின் பெருமை’’ என்னும் மெகா கண்காட்சி மாநாட்டில் முக்கிய ஈர்ப்பாக இருக்கும். இந்தியாவின் முக்கிய முன்னேற்றங்கள், முக்கிய சாதனைகள் மற்றும் சமூகத்திற்கு இந்திய அறிவியல் மற்றும் இந்திதொழில்நுட்பத்தின் குறிப்பிடத்தக்க பங்களிப்புகள் ஆகியவை கண்காட்சியில் காட்சிப்படுத்தப்படும்.
இந்திய அறிவியல் மாநாடு முதல் அமர்வு 1914-ஆம் ஆண்டு நடைபெற்றது. அதன் 108-வது ஆண்டு மாநாடு தற்போது நூற்றாண்டு கொண்டாடி வரும் ராஷ்டிரசந்த் துகடோஜி மகராஜ் நாக்பூர் பல்கலைக்கழகத்தில் நடைபெறுகிறது.
Leave your comments here...