மக்களாட்சி வந்த பிறகு கோயிலை பராமரிக்கும் உரிமைகள் அரசுக்குதான் உள்ளது – அமைச்சர் சேகர் பாபு..!
சென்னை மாநகராட்சி, திரு.வி.க. நகர் மண்டல அலுவலத்தில் இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு, திரு.வி.க. மண்டலத்தில் நீர்நிலைகளின் அருகிலும், தாழ்வான பகுதிகளிலும் வசிக்கின்ற மக்களுக்கு விலையில்லா கொசுவலைகளை வழங்கினார்.
இந்த நிகழ்ச்சியில் மேயர் ஆர்.பிரியா, தாயகம் கவி எம்.எல்.ஏ., மண்டலக்குழு தலைவர் சரிதா மகேஷ் குமார் உள்பட பலர் கலந்து கொண்டனர்.
பின்னர் பேசியஇந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் பி.கே.சேகர் பாபு புதிதாக தி.மு.க. ஆட்சி அமைந்த பிறகு முதலில் வடபழனி பரத்வாஜ் சுவாமி கோயிலில் மாதிரி பாதுகாப்பறை ஒன்றை ஏற்படுத்தினோம். அந்த மாதிரி பாதுகாப்பறையானது மிகவும் பயனுள்ளதாகவும், உறுதித்தன்மை உள்ளதாகவும் கண்டறியப்பட்டது.
அதனைத் தொடர்ந்து 1200 பாதுகாப்பு அறைகள் அமைப்பதற்கு டெண்டர் கோரப்பட்டு இருக்கின்றது. இந்து அமைப்புகளிடம் இருக்கின்ற பொழுது கோயில்கள் எவ்வளவு பராமரிக்கப்படுமோ அதைவிட கூடுதலாக அக்கறை கொண்டு இந்த அரசு கோவில்கள் பராமரிப்பதில், பக்தர்களுக்கான அடிப்படை தேவைகளை நிறைவேற்றுவதில் இந்திய துணைக் கண்டத்திலேயே தமிழகத்தில்தான் முதல்-அமைச்சர் தலைமையிலே செயல்படுகின்ற இந்த அரசின் சிறப்பான செயல்பாட்டினால் இருந்து கொண்டிருக்கின்றது. அவர்கள் கூறியது போல் இந்து அமைப்பிடம் ஒப்படைக்க வேண்டும் என்றால் எந்த இந்து அமைப்புடன் எந்த திருக்கோயிலை டெண்டர் கோரியா ஒப்படைக்க முடியும்.
ஆகவே அது சாத்தியமில்லாதது. மன்னர்களால் உருவாக்கப்பட்ட கோயில்கள் என்றாலும் மக்களாட்சி வந்த பிறகு மக்களாட்சி செய்கின்ற அரசுக்குதான் கோயிலை பராமரிக்கும் உரிமைகள். அதில் சிறப்பாக செயல்பட்டு கொண்டிருக்கின்றோம். குறைகள் எது இருந்தாலும் யார் வேண்டுமானாலும் சுட்டிக்காட்டலாம். அதனை நிறைவு செய்கின்ற பணிகளை மேற்கொள்ளச் சொல்லி முதல்-அமைச்சர் உத்தரவிட்டிருக்கின்றார். முதல்-அமைச்சர் தாழ்வான பகுதிகளில் தற்போது எங்கெல்லாம் தண்ணீர் தேங்கி நிற்கிறதோ அவற்றை எல்லாம் கணக்கெடுத்து, அடுத்த பருவமழைக்குள் இந்த பகுதிகளில் தண்ணீர் தேங்காத சூழலை உருவாக்குவதற்கு பணிகளை மேற்கொண்டுள்ளார்கள். போர்க்கால அடிப்படையில் மழைநீரை வெளியேற்றுகின்ற பணியாகட்டும், சாலையோரம் மற்றும் கால்வாய் ஓரம் வசிக்கின்ற மக்களுக்கு தேவையான அடிப்படை வசதிகளை செய்து கொடுப்பதற்கும் அரசும், சென்னை மாநகராட்சியும் கண்காணித்துக் கொண்டே இருக்கின்றது. எந்த பாதிப்பு வந்தாலும் சமாளிப்பதற்குண்டான அனைத்து பணிகளையும் இந்த அரசு தயாராக செய்து கொண்டிருக்கின்றது. இவ்வாறு அவர் கூறினார்.
Leave your comments here...