மைசூரு – சென்னை வழித்தடத்தில் வந்தே பாரத் ரயில் சேவை :பெங்களூருவில் தொடங்கி வைத்தார் பிரதமர் மோடி.!
பெங்களூரு: மைசூர் – சென்னை இடையிலான வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். நாட்டின் முக்கிய நகரங்களை அதிவேகத்தில் இணைக்கும் வகையில் ‘வந்தே பாரத்’ எக்ஸ்பிரஸ் என்ற பெயரில் உள்நாட்டிலேயே தயாரிக்கப்பட்ட நவீன வசதிகளுடன் கூடிய அதிவேக ரயில்களை ரயில்வே அமைச்சகம் கடந்த 2019ல் அறிமுகப்படுத்தியது. டெல்லி – வாரணாசி வழித்தடத்தில் முதல் சேவை தொடங்கப்பட்ட நிலையில், தற்போது நான்கு வழித்தடங்களில் வந்தே பாரத் ரயில்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் மைசூர் – சென்னை இடையிலான 5வது வந்தே பாரத் ரயில் சேவையை பிரதமர் மோடி தொடங்கி வைத்தார். இது தென்னிந்தியாவின் முதல் வந்தே பாரத் ரயில் சேவை ஆகும்.
நாட்டின் அதிவேகமான வந்தே பாரத் ரயிலை 180 கிலோ மீட்டர் வேகத்தில் இயக்க முடியும். சென்னையில் இருந்து மைசூருவிற்கு ஏற்கெனவே சதாப்தி ரயில் இயக்கப்பட்டு வருகிறது. இந்த ரயில் சென்னையில் இருந்து மைசூரு செல்ல chair car வகுப்பில் ரூ.1000, executive car வகுப்பில் ரூ.1980 கட்டணமாக வசூலிக்கப்படுகிறது. தற்போது சதாப்தி ரயிலை விட 20 நிமிடம் மட்டுமே சீக்கிரமாக வந்தே பாரத் ரயில் மைசூரு சென்றடைகிறது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னை சென்ட்ரல் – மைசூரு – சென்ட்ரல் வந்தே பாரத் எக்ஸ்பிரஸ் ரயில்கள் வாரத்தில் 6 நாட்கள் (புதன்கிழமை தவிர) 2 முனைகளிலிருந்தும் இயக்கப்படும்.
இரண்டு சேவைகளுக்கும் காட்பாடி மற்றும் கேஎஸ்ஆர் பெங்களூருவில் மட்டுமே நிறுத்தப்படும். அதன்படி, சென்னை சென்ட்ரல்-மைசூரு இடையே காலை 5.50 மணிக்கு புறப்படும். காட்பாடியில் காலை 7.21 முதல் 7.25 வரை நிற்கும் மற்றும் காலை 10.20 முதல் 10.25 வரை பெங்களுருசென்றடையும். பின்னர் மதியம் 12.25 மணிக்கு மைசூரு சென்றடையும். மைசூரு- சென்னை இடையே மதியம் 1.05 மணிக்கு புறப்பட்டு பெங்களுருவுக்கு மதியம் 2.55 முதல் 3 மணிக்கு சென்றடையும். காட்பாடிக்கு மாலை 5.36 முதல் 5.40 மணிக்கு சென்றடையும். இறுதியாக, சென்னைக்கு இரவு 7.30 மணிக்கு வந்தடையும்.
Leave your comments here...