வடகிழக்கு பருவமழை : சேதமடைந்த நெற்பயிருக்கு அரசு இழப்பீடு வழங்க வேண்டும்: ராமதாஸ் வலியுறுத்தல்..!
- November 4, 2022
- jananesan
- : 266
டெல்டா மாவட்டங்களில் வடகிழக்கு பருவமழையால் பாதிக்கப்பட்ட நெல்பயிருக்கு உரிய இழப்பீடு வழங்க அரசு முன்வர வேண்டும் என பாமக நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.
பாமக நிறுவனர் ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில், தமிழ்நாட்டின் பெரும்பான்மையான மாவட்டங்களில் கடந்த சில நாட்களாக பெய்து வரும் மழையால் காவிரி பாசன மாவட்டங்களில் 60 ஆயிரத்திற்கும் கூடுதலான ஏக்கர் பரப்பளவில் நெற்பயிர்கள் நீரில் மூழ்கி சேதமடைந்திருக்கின்றன. மழை தொடர்ந்து பெய்து வரும் நிலையில் வெள்ள நீர் வடிவதற்கு வாய்ப்பில்லை என்பதால் சம்பா பயிர்கள் என்னவாகுமோ? என்ற கவலையில் விவசாயிகள் ஆழ்ந்துள்ளனர்.
தமிழ்நாட்டில் வடகிழக்கு பருவமழை 20-க்கும் கூடுதலான மாவட்டங்களில் பெய்து வருகிறது என்றாலும் கூட, காவிரி பாசன மாவட்டங்களில் தான் அதிக மழை பொழிந்து வருகிறது. இதனால் மயிலாடுதுறை மாவட்டத்தில் மட்டும் 30,000 கூடுதலான ஏக்கர்களில் நெற்பயிர்கள் வெள்ளத்தில் மூழ்கியுள்ளன. தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் ஆகிய மாவட்டங்களிலும் தலா 10,000 ஏக்கருக்கும் கூடுதலான பரப்பில் நெற்பயிர்கள் சேதமடைந்திருக்கின்றன. கடலூர், அரியலூர் மாவட்டங்களிலும் சம்பா பருவ நெற்பயிர்கள் பெருமளவில் பாதிக்கப்பட்டுள்ளன.
மழை நீரில் மூழ்கியுள்ள சம்பா பயிர்களில் பெரும்பாலானவை கடந்த 20 நாட்களில் நடவு செய்யப்பட்டவை. வயல்களில் தேங்கியுள்ள மழை நீர் உடனடியாக வடியவில்லை என்றால், பயிர்கள் முழுமையாக அழிந்து விடும். அதன்பின் சம்பா நெற்பயிரை புதிதாகத் தான் நட வேண்டும். அதற்கு விதை, உரம், மனித உழைப்பு ஆகியவற்றுக்காக ஏக்கருக்கு ரூ.15,000 வரை செலவாகும். கடந்த ஆண்டு வடகிழக்கு பருவ மழையில் பாதிக்கப்பட்ட பயிர்களுக்கு காப்பீட்டு நிறுவனங்கள் உரிய இழப்பீடு வழங்கவில்லை. எனவே, சம்பா நெற்பயிர்கள் மழையில் நனைந்து சேதமடைந்ததால் பாதிக்கப்பட்ட விவசாயிகளின் துயரத்தை துடைக்க வேண்டியது தமிழக அரசின் கடமை ஆகும்.
சேதமடைந்த பயிர்களுக்கு இழப்பீடு வழங்கப்பட்டால் தான் உழவர்களின் நெருக்கடி ஓரளவாவது குறையும். காப்பீட்டு நிறுவனங்கள் உழவர்களை சுரண்டுவதையே நோக்கமாக கொண்டிருப்பதால் அவற்றிடமிருந்து நீதியையோ, இழப்பீட்டையோ எதிர்பார்க்க முடியாது. எனவே, தமிழக அரசே முன்வந்து காவிரி பாசன மாவட்டங்கள் உட்பட அனைத்து பகுதிகளிலும் வட கிழக்கு பருவமழையால் சேதமடைந்த நெற்பயிருக்கு போதிய இழப்பீடு வழங்க வேண்டும் என ராமதாஸ் தெரிவித்துள்ளார்.
Leave your comments here...