காரில் திடீரென சிலிண்டர் வெடித்த சம்பவம் – ஓட்டுனர் உடல் கருகி பலி- டிஜிபி, ஏடிஜிபி நேரில் ஆய்வு.!

தமிழகம்

காரில் திடீரென சிலிண்டர் வெடித்த சம்பவம் – ஓட்டுனர் உடல் கருகி பலி- டிஜிபி, ஏடிஜிபி நேரில் ஆய்வு.!

காரில் திடீரென  சிலிண்டர் வெடித்த சம்பவம் – ஓட்டுனர் உடல் கருகி பலி- டிஜிபி, ஏடிஜிபி நேரில் ஆய்வு.!

கோவை அருகே காரில் இருந்த சிலிண்டர் வெடித்து ஒருவர் மரணம் அடைந்த சம்பவம் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இது தொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

கோவை மாநகராட்சி அலுவலகம் அருகே உள்ள தெருவில் பிரசித்தி பெற்ற கோட்டை ஈஸ்வரன் கோவில் உள்ளது. இந்த கோவிலை மையமாக வைத்து இந்த தெருவும் ஈஸ்வரன் கோவில் வீதி என்றே அழைக்கப்படுகிறது. இன்று அதிகாலை 4.10 மணிக்கு இந்த வீதியில் நுழைந்த ஒரு கார் கோவில் வழியாக சென்றது. கோவில் முன்புள்ள வேகத்தடையில் ஏறி இறங்கியபோது திடீரென கார் பயங்கர சத்தத்துடன் வெடித்து சிதறியது. சத்தம் கேட்டு அக்கம்பக்கத்தினர் ஓடி வந்தனர். அப்போது கார் 2 துண்டாக உடைந்து கிடந்தது. மேலும் காரில் தீ மளமளவென பற்றி எரிந்தது. அருகில் செல்ல முடியாதவாறு தீப்பற்றி எரிந்ததால் பொதுமக்கள் உடனடியாக தீயணைப்பு வீரர்களுக்கு தகவல் தெரிவித்தனர்.

வீரர்கள் விரைந்து வந்து தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர். அப்போது காருக்குள் ஒருவர் உடல் கருகி இறந்து கிடந்தார். அங்கு உக்கடம் போலீசாரும் விரைந்து வந்தனர். அவர்கள் அங்கு மீட்பு பணியில் ஈடுபட்டனர். உடல் கருகி இறந்து கிடந்தவரின் பிணத்தை மீட்டு கோவை அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். தீப்பிடித்து எரிந்த காரில் 2 சிலிண்டர்கள் இருந்தது. அந்த 2 சிலிண்டர்களும் கருகிய நிலையில் காணப்பட்டன. பலியான நபர் காரில் சிலிண்டர்களை எடுத்துச் சென்று இருக்கலாம் என கூறப்படுகிறது. 2 சிலிண்டர்களும் ஒன்றோடு ஒன்று உரசியதில் கியாஸ் கசிவு ஏற்பட்டு கார் தீப்பிடித்து விபத்து ஏற்பட்டு இருக்கலாம் என போலீசார் கருதுகிறார்கள். கார் பற்றி விசாரித்தபோது அந்த கார் சென்னை பதிவெண்ணை கொண்டு இருந்தது. கார் யாருக்கு சொந்தமானது என்பது பற்றி விசாரித்தபோது அது பொள்ளாச்சியைச் சேர்ந்த ஒருவருக்கு சொந்தமானது என தெரியவந்துள்ளது.

இதுதொடர்பாக போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகிறார்கள். விசாரணையில்தான் இறந்தவர் யார்? என்ற விவரம் தெரியவரும். விபத்து ஏற்பட்ட இடம் முக்கியமான சாலை கிடையாது. அப்படி இருக்கும்போது கார் அந்த வழியாகச் சென்றது ஏன் என்பது மர்மமாகவே உள்ளது. மேலும் கோவில் முன்பு கார் வெடித்தது பற்றி இந்து அமைப்பினர் பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளனர். இது விபத்தா? அல்லது சதி செயலா? எனவும் அவர்கள் கேள்வி எழுப்பி உள்ளனர்.

இதனால் கோவையில் கார் வெடித்த சம்பவம் பதட்டத்தை ஏற்படுத்தி உள்ளது. இதையடுத்து விபத்து நடந்த கோவில் பகுதிக்கு யாரும் செல்லாதவாறு போலீசார் அங்கு குவிக்கப்பட்டு உள்ளனர். அவர்கள் சாலையின் இருபுறமும் தடுப்புகள் அமைத்து கண்காணிப்பு பணியில் ஈடுபட்டுள்ளனர். மேலும் மாவட்டம் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டு உள்ளனர். ஈரோடு மாவட்டத்தில் இருந்தும் ஏராளமான போலீசார் இங்கு வரவழைக்கப்பட்டு இருக்கிறார்கள். கோவில் முன்பு கார் வெடித்து கோவையில் பதட்டமான நிலை ஏற்பட்டதால் டி.ஜி.பி. சைலேந்திரபாபு, கோவை போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணனை போனில் தொடர்பு கொண்டு விவரங்களை கேட்டறிந்தார். தொடர்ந்து கோவைக்கு தமிழக டிஜிபி சைலேந்திரபாபு, சட்ட ஒழுங்கு கூடுதல் டிஜிபி தாமரைக்கண்ணன், உளவுத்துறை டிஜிபி டேவிட்சன் ஆகியோர் விரைந்துள்ளனர்.

இவர்கள் நேரில் ஆய்வு செய்து வருகின்றனர். இதையடுத்து, சம்பவ இடத்தை கோவை மாநகர போலீஸ் கமிஷனர் பாலகிருஷ்ணன் பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இந்த சம்பவம் பற்றி கேட்டபோது அவர் கூறியதாவது:- சிலிண்டர் வெடித்ததால் தான் கார் தீப்பிடித்து எரிந்துள்ளது என்பதை உறுதி செய்துள்ளோம். காரில் கொண்டு செல்லப்பட்ட சிலிண்டர்கள் எப்படி வெடித்தது? என்பது பற்றி தீவிர விசாரணை மேற்கொண்டு வருகிறோம். உயிரிழந்த நபர் யார்? என்பது தெரியவில்லை. அவரை அடையாளம் காணும் பணி நடந்து வருகிறது. அவர் எதற்காக இந்த சாலைக்கு வந்தார்? என்பது பற்றியும் விசாரணை நடக்கிறது. உயிரிழந்த நபர் அடையாளம் காணப்பட்டால் அதற்கான விடைகள் கிடைக்கும். இவ்வாறு அவர் கூறினார்.

Leave your comments here...