பிரதமர் மோடியை டெல்லியில் மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் பிரவிந்த் ஜுக்னாவுத் சந்தித்து ஆலோசனை நடத்தினார்..!
இந்திய வந்துள்ள மொரிஷியஸ் நாட்டின் பிரதமர் மாட்சிமை தங்கிய திரு.பிரவிந்த் ஜூகுநாத்தை பிரதமர் திரு.நரேந்திர மோடி இன்று சந்தித்தார். பிரதமர் ஜூகுநாத்துடன் அவரது மனைவி திருமதி.கோபிதா ஜூகுநாத்தும், தனிப்பட்ட பயணமாக இந்தியா வந்துள்ளார்.
மொரிஷியஸில் நடைபெற்ற தேர்தலில் பேராதரவுடன் மீண்டும் தேர்வு செய்யப்பட்டுள்ள மொரிஷியஸ் பிரதமர் ஜூகுநாத்திற்கு பிரதமர் திரு.மோடி தனது உளப்பூர்வமான வாழ்த்துகளை தெரிவித்துக் கொண்டார். அதற்கு நன்றி தெரிவித்த பிரதமர் ஜூகுநாத், இரு நாடுகளின் சகோதரத்துவ மற்றும் இருதரப்பு உறவுகளை மேலும் வலுப்படுத்த தாம் உறுதிபூண்டிருப்பதாகக் கூறினார்.
மொரிஷியசில் இந்தியாவின் ஆதரவுடன் செயல்படுத்தப்பட்டுள்ள வளர்ச்சிக்கான ஒத்துழைப்புத் திட்டங்கள், குறிப்பாக மெட்ரோ விரைவுத் திட்டம், காது, மூக்கு, தொண்டை சிகிச்சைக்கான மருத்துவமனை, சமூக வீட்டுவசதித் திட்டம் உள்ளிட்டவற்றுக்கு தமது உள்ளார்ந்த பாராட்டுதல்களை தெரிவித்துக் கொண்ட பிரதமர் ஜூகுநாத், அவை மக்களுக்கு உண்மையில் பலனளித்திருப்பதாக தெரிவித்தார். மொரிஷியசின் அனைத்துப் பகுதிகளிலும் வளர்ச்சியின் வேகத்தை ஊக்குவிப்பதும், இந்தியாவுடனான ஒத்துழைப்பை விரிவுபடுத்துவதுமே, மீண்டும் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள தமது ஆட்சியின் முன்னுரிமைகளாக இருக்கும் என்று குறிப்பிட்டார். இந்த முயற்சியில் இந்தியா முக்கிய பங்காற்றுமென்று தாம் எதிர்பார்ப்பதாகவும் அவர் கூறினார்.
பிரதமர் திரு.மோடி கூறுகையில்:- அரசும், மொரிஷியஸ் மக்களும் இந்தியாவின் உளப்பூர்வமான ஆதரவை எப்போதும் எதிர்பார்க்கலாம் என்றும், அவர்களது பேரார்வத்திற்கு ஏற்ற வகையில், பாதுகாப்பான, நிலையான மற்றும் வளமான மொரிஷியஸ் நாட்டை உருவாக்குவதில் இந்தியா தொடர்ந்து அந்நாட்டுடன் ஒன்றுபட்டு நிற்கும் என்றும் தெரிவித்தார். இரு தலைவர்களும் நெருங்கிய பன்முகத்தன்மையிலான இருதரப்பு உறவை நெருக்கமாக உருவாக்கவும், புதிய துறைகளை ஆய்வு செய்து, பரஸ்பர ஆர்வம் மற்றும் முன்னுரிமைகள் அடிப்படையில் பங்காற்றவும் ஒப்புக் கொண்டனர்.
Leave your comments here...