ஈஷாவின் வழிகாட்டுதலில் 14 டன் ஜாதிக்காயை ரூ.76 லட்சத்திற்கு விற்ற விவசாயிகள்!
ஈஷா அவுட்ரீச்சின் வழிகாட்டுதலின் கீழ் இயங்கும் அருள்மிகு சோமேஸ்வரர் உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் இடைத்தரகர்கள் இன்றி 14 டன் ஜாதிக்காயை ரூ.76 லட்சத்திற்கு நேரடியாக விற்பனை செய்து சாதனை படைத்துள்ளது.
இது தொடர்பாக இந்நிறுவனத்தின் இயக்குநரும், விவசாயியுமான இரஞ்சித் அவர்கள் கூறுகையில், “ஜாதிக்காய் விவசாயிகளான நாங்கள் இதுவரை 4 அல்லது 5 இடைத்தரகர்களுக்கு எங்களுடைய விளைப்பொருட்களை விற்று வந்தோம். அவர்கள் அனைவரும் எவ்வித பேரமும் பேசாமல் ஒரே விலை கூறி வாங்கி வந்தனர். ஆனால், இப்போது முதல் முறையாக எங்களுடைய உழவன் உற்பத்தியாளர் நிறுவனம் மூலம் வர்த்தகரை நேரடியாக தொடர்பு கொண்டு அதிக லாபத்திற்கு விற்பனை செய்துள்ளோம். FPO-வினால் எங்களுக்கு கிடைத்த இந்த வெற்றி வாய்ப்பை எண்ணி மகிழ்ச்சி கொள்கிறோம். இனி இதேபோல் நேரடி விற்பனை செய்ய திட்டமிட்டுள்ளோம்” என்றார்.
கோவை மாவட்டம் ஆனைமலை பகுதியில் கடந்தாண்டு தொடங்கப்பட்ட இந்த உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தில் மொத்தம் 306 விவசாயிகள் உறுப்பினர்களாக உள்ளனர். தென்னை மற்றும் ஜாதிக்காய் ஆகிய இரண்டும் அப்பகுதியில் விளையும் பிரதான பயிர்கள் ஆகும். இதில் ஜாதிக்காய் சித்தா மற்றும் ஆயுர்வேதம் ஆகிய மருத்துவ சிகிச்சைகளில் அதிகம் பயன்படுத்தப்படுகிறது. ஏற்றுமதி சந்தையில் நல்ல வரவேற்பை உடையது.
இந்நிலையில், இந்த உழவன் உற்பத்தியாளர் நிறுவனத்தில் இருக்கும் 40 விவசாயிகள் ஒன்றிணைந்து முதல்முறையாக ஏற்றுமதி வர்த்தகரிடம் நேரடியாக பேசி சிறந்த விலைக்கு விற்பனை செய்துள்ளனர். முன்னதாக, இந்நிறுவனத்தின் விவசாயிகள் ஆக.3 மற்றும் செப்.28 ஆகிய தேதிகளில் கோழிக்கோட்டில் உள்ள இந்திய நறுமணப் பொருட்கள் ஆராய்ச்சி நிறுவனத்திற்கு சென்று அங்கு நடந்த பயிற்சியில் கலந்து கொண்டனர். இதன்மூலம், ஜாதிக்காயை மொத்தமாக விற்பனை செய்வதற்கு தரம் பிரிப்பது மற்றும் விற்பனைக்கு அனுப்புதற்கு மேற்கொள்ள வேண்டிய வழிமுறைகள் போன்றவற்றை கற்றுக்கொண்டனர்.
Leave your comments here...