தமிழ்நாட்டில் தமிழ்வழி மருத்துவக் கல்வி திட்டத்தை விரைவாக கொண்டு வர வேண்டும் – மத்திய அரசு திட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு..!

தமிழகம்

தமிழ்நாட்டில் தமிழ்வழி மருத்துவக் கல்வி திட்டத்தை விரைவாக கொண்டு வர வேண்டும் – மத்திய அரசு திட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு..!

தமிழ்நாட்டில் தமிழ்வழி மருத்துவக் கல்வி திட்டத்தை விரைவாக கொண்டு வர வேண்டும் – மத்திய அரசு திட்டத்துக்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு..!

மருத்துவப் படிப்பை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ் தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மருத்துவப் பாடநூல்கள் வெளியிடப்படவுள்ளதாக மத்திய அரசு தெரிவித்துள்ளதற்கு அன்புமணி ராமதாஸ் வரவேற்பு தெரிவித்துள்ளார்.

பா.ம.க. தலைவர் டாக்டர் அன்புமணி ராமதாஸ் வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது:- மருத்துவப் படிப்பை மாநில மொழிகளில் பயிற்றுவிக்கும் திட்டத்தின் கீழ், மருத்துவப் பாட நூல்கள் இந்தியில் வெளியிடப்பட்டுள்ள நிலையில், அடுத்தக்கட்டமாக தமிழ் உள்ளிட்ட மாநில மொழிகளிலும் மருத்துவப் பாடநூல்கள் வெளியிடப்படவிருப்பதாக மத்திய அரசு தெரிவித்திருக்கிறது.

இந்த விஷயத்தில் மத்திய அரசின் நோக்கம் நேர்மையானதாக இருந்தால் அது நிச்சயமாக வர வேற்கத்தக்கது ஆகும். தமிழ் மொழியில் மருத்துவப் பாடநூல்களை மொழிபெயர்ப்பதற்கு வசதியாக மருத்துவப் பதங்களுக்கான தமிழ் சொற்கள் அடங்கிய சொற்களஞ்சியத்தை உருவாக்கும் பணியை டாக்டர் எம்.ஜி.ஆர். மருத்துவப் பல்கலைக்கழகம் ஏற்கனவே தொடங்கியிருப்பதாகவும் அவர் தெரிவித்துள்ளார். மருத்துவம் உள்ளிட்ட அனைத்து தொழில்நுட்ப படிப்புகளும் தமிழ்நாட்டில் தமிழில் கற்பிக்கப்பட வேண்டும் என்பது தான் பாட்டாளி மக்கள் கட்சியின் உறுதியான கொள்கை ஆகும்.

ஆனால், மாநில மொழிகளில் மருத்துவம் பயிற்றுவிக்கும் முறை நடைமுறைக்கு வரும் போது ஒரு மாநிலத்தைச் சேர்ந்த மாணவர்கள், வேறு மொழி பேசும் மாநிலத்திற்கு சென்று மருத்துவப் படிப்பை படிப்பதில் சிக்கல் ஏற்படும். எடுத்துக்காட்டாக தமிழ்நாட்டை சேர்ந்த மாணவர்கள், கர்நாடக மருத்துவக் கல்லூரிகளில் சேர்ந்து கன்னட மொழியில் மருத்துவம் பயில்வதோ, இந்தி பேசும் மாநில மாணவர்கள், தமிழ்நாட்டு கல்லூரிகளில் சேர்ந்து தமிழில் மருத்துவப் படிப்பை படிப்பதோ நடைமுறை சாத்தியமல்ல. 2022-23-ம் ஆண்டில் அகில இந்திய ஒதுக்கீட்டில் சுமார் 7,200 இடங்கள் நிரப்பப்படவிருக்கின்றன.

ஒவ்வொரு மாநிலத்திலும் நோயாளிகளுக்கு புரியும் மொழியில் மருத்துவம் பயிற்றுவிக்கப்பட வேண்டும் என்பது தான் மத்திய அரசின் நோக்கம் என்பதால், ஒவ்வொரு மாநிலத்திலும், அம்மாநில மொழியில் அம்மாநில மாணவர்களுக்கு மட்டும் மருத்துவம் பயிற்று விக்கப்படுவது தான் சரியானதாக இருக்கும். இச்சிக்கலுக்கு ஒரே தீர்வு மருத்துவப் படிப்பில் அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்வதும், அந்தந்த மாநிலத்தில், அந்தந்த மாநில மாணவர்களுக்கு மட்டும் வாய்ப்பளிப்பதும் தான்.

அகில இந்திய ஒதுக்கீடு 36 ஆண்டுகளுக்கு முன் அறிமுகப்படுத்தப்பட்ட போது வேண்டுமானால், அதற்கான தேவை இருந்திருக்கலாம். அதன்பின் 36 ஆண்டுகளில் மருத்துவக் கல்வி பரவலாக்கப்பட்டுள்ளது; அனைத்து மாநிலங்களிலும் போதிய எண்ணிக்கையில் மருத்துவக் கல்வி இடங்கள் உள்ளன. அதனால், அகில இந்திய ஒதுக்கீடு என்ற கொள்கைக்கு இன்றைய சூழலில் எந்தவிதத் தேவையும் இல்லை. எனவே, தாய்மொழிவழி மருத்துவக் கல்வி கற்பித்தல் திட்டத்திற்கு முன்னோட்டமாக அகில இந்திய ஒதுக்கீட்டு முறையை ரத்து செய்ய வேண்டும். தமிழ்நாட்டில் தமிழ்வழி மருத்துவக் கல்வி திட்டத்தை விரைவாக கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும். அத்துடன் பள்ளிக்கல்வியில் தமிழை கட்டாய பயிற்றுமொழியாக்க சட்டம் கொண்டு வந்து நிறைவேற்றி செயல்படுத்த தமிழக அரசு முன்வர வேண்டும். இவ்வாறு அவர் கூறியுள்ளார்

Leave your comments here...