பேருந்தில் இலவச டிக்கெட் விவகாரம் – மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை- கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம்..!

அரசியல்

பேருந்தில் இலவச டிக்கெட் விவகாரம் – மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை- கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம்..!

பேருந்தில் இலவச டிக்கெட் விவகாரம் –  மூதாட்டி மீது வழக்குப்பதிவு செய்யவில்லை- கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் விளக்கம்..!

கோவை காந்திபுரத்தில் இருந்து பாலத்துறைக்கு அரசு டவுன் பஸ் இயக்கப்பட்டு வருகிறது. சம்பவத்தன்று காலை அந்த பஸ் காந்திபுரத்தில் இருந்து பாலத்துறையை நோக்கி புறப்பட்டது. பஸ்சில் வால்பாறையை சேர்ந்த வினித் என்பவர் கண்டக்டராக இருந்தார். பஸ் மதுக்கரை மார்க்கெட் அருகே வந்தபோது பாலத்துறைக்கு செல்வதற்காக காத்திருந்த துளசியம்மாள்(68) என்ற மூதாட்டி ஏறினார். டவுன் பஸ்சில் பயணிக்க பெண்களுக்கு டிக்கெட் இலவசம் என்பதால், கண்டக்டர் பஸ்சில் ஏறியதும் மூதாட்டிக்கு இலவச டிக்கெட்டை கிழித்து கொடுத்தார். அப்போது அந்த மூதாட்டி பணத்தை எடுத்து கண்டக்டரிடம் நீட்டினார்.

உடனே கண்டக்டர் பாட்டிமா இதில் பயணிக்க உங்களுக்கு டிக்கெட் இலவசம். காசு வேண்டாம். நீங்கள் வைத்து கொள்ளுங்கள் என்றார். ஆனால் அந்த மூதாட்டி நீ பணத்தை பெற்று கொண்டு டிக்கெட் கொடு. இல்லையென்றால் எனக்கு டிக்கெட் வேண்டாம் என தெரிவித்தார். இருப்பினும் கண்டக்டர் டிக்கெட்டை மூதாட்டியிடம் கொடுக்க முயன்றார். ஆனால் மூதாட்டியோ அதனை வாங்க மறுத்ததுடன், நான் ஓசியில் பயணம் செய்ய மாட்டேன். நான் டிக்கெட்டுக்கு பணம் தருவேன். காசு இல்லாம தரும் டிக்கெட் எனக்கு வேண்டவே வேண்டாம். பணத்தை பெற்று கொண்டு டிக்கெட் கொடு என அடம் பிடித்தார்.

அதற்கு கண்டக்டர் அதான் பிரீயா விட்டுட்டாங்களா போங்கம்மா என்றார். ஆனால் மூதாட்டி வலுக்கட்டாயமாக கண்டக்டரின் கையில் பணத்தை திணித்தார். இதையடுத்து கண்டக்டரும் வேறுவழியில்லாமல் மூதாட்டியிடம் பணத்தை பெற்று கொண்டு டிக்கெட் மற்றும் மீதி சில்லரையை கொடுத்து சென்றார். இந்த காட்சிகளை அங்கிருந்த சிலர் வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் பகிர்ந்தனர். தற்போது அந்த வீடியோ காட்சிகள் மிகவும் வைரலாகி வருகிறது. இந்தநிலையில் மூதாட்டியை வேண்டும் என்றே அரசு டவுன் பஸ்சில் டிக்கெட் கேட்டு தகராறு செய்யுமாறு சிலர் வற்புறுத்தி வீடியோ எடுத்ததாக தி.மு.க.வினர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அலுவலகத்தில் புகார் அளித்துள்ளனர்.

இது தொடர்பாக மதுக்கரை நகர தி.மு.க. செயலாளரான ராமு என்பவர் மதுக்கரை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்ததாக தகவல் வெளியானது. அதில், மதுக்கரை குரும்பபாளையம் பகுதியை சேர்ந்த அ.தி.மு.கவினர் பிருத்விராஜ்(40), அவ்வையார் வீதி மதிவாணன் (33), விஜய் ஆனந்த் ஆகியோர் வேண்டுமென்றே தங்களது கட்சியை சேர்ந்த துளசியம்மாள் என்ற மூதாட்டியை பஸ்சில் வரவழைத்து பெண்களுக்கு இலவச டிக்கெட் என்றும் தெரிந்தும், டிக்கெட் கேட்குமாறு கூறி சண்டை போட வைத்துள்ளனர். தற்போதைய தி.மு.க. அரசுக்கு களங்கம் ஏற்படுத்தும் வகையில் திட்டமிட்டு வீடியோ எடுத்து, அதை சமூக வலைதளத்திலும் பதிவிட்டு தி.மு.க. அரசுக்கு எதிராக அவதூறு பரப்பி வருகின்றனர். எனவே அவர்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று மனுவில் கூறப்பட்டுள்ளது.

அவரது புகாரின் பேரில் போலீசார் அ.தி.மு.க.வை சேர்ந்த பிரித்திவிராஜ், மதிவாணன், விஜய் ஆனந்த் மற்றும் பஸ்சில் பயணம் செய்த துளசியம்மாள் ஆகியோர் மீது பொதுமக்களுக்கு இடையூறு ஏற்படுத்துதல், பொது அமைதிக்கு குந்தகம் விளைவித்தல் உள்பட 4 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்துள்ளதாகவும், தற்போது அவர்களை போலீசார் தேடி வருவதாகவும் தகவல் வெளியானது. இந்நிலையில், இலவச டிக்கெட் தொடர்பாக வைரலான மூதாட்டி மீது வழக்குப்பதிவு எதுவும் செய்யப்படவில்லை என்று கோவை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பத்ரி நாராயணன் விளக்கம் அளித்துள்ளார்.

Leave your comments here...