ஓய்வூதியம் அளிக்கும் விவகாரம் – தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம்..!
தேவையில்லாத மேல்முறையீட்டு வழக்கை தாக்கல் செய்ததற்காக தமிழக அரசுக்கு, உச்ச நீதிமன்றம் 5 லட்சம் ரூபாய் அபராதம் விதித்தது.
தமிழக அரசு ஊழியர்கள் சிலருக்கு ஓய்வூதியம் வழங்குவது தொடர்பான வழக்கில், சென்னை உயர் நீதிமன்றம் பிறப்பித்த உத்தரவை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் தமிழக அரசு மேல்முறையீடு செய்தது. இந்த மேல்முறையீட்டு மனு மீதான விசாரணை, உச்ச நீதிமன்ற நீதிபதிகள் எம்.ஆர்.ஷா, கிருஷ்ண முராரி ஆகியோர் அடங்கிய அமர்வு முன் விசாரணைக்கு வந்தது.
அப்போது நீதிபதிகள் பிறப்பித்த உத்தரவு:ஏற்கனவே முடித்து வைக்கப்பட்ட விவகாரத்தில், இத்தகைய மனுவை தமிழக அரசு தாக்கல் செய்திருக்கக் கூடாது. ஓய்வூதியம் தொடர்பான பிரச்னையில் நீதிமன்றம் வரை விவகாரம் வந்து அது தீர்த்து வைக்கப்பட்ட பிறகும், மீண்டும் சம்பந்தப்பட்ட மனுதாரர் ஓய்வூதியத்திற்கு தகுதியற்றவர் என அரசு வாதிடுகிறது.
இது ஏற்றுக்கொள்ளக் கூடியது அல்ல. இது போன்ற தேவையற்ற மேல்முறையீட்டு மனுக்கள் தாக்கல் செய்யப்படுவதை தவிர்க்க வேண்டும். எனவே, இந்த மனு தள்ளுபடி செய்யப்படுகிறது. மனுவை தாக்கல் செய்த தமிழக அரசுக்கு, 5 லட்சம் ரூபாய் அபராதம் விதிக்கப்படுகிறது. இந்த தொகையை நான்கு வாரத்தில் உச்ச நீதிமன்ற பதிவாளர் அலுவலகத்தில் செலுத்த வேண்டும்.
இவ்வாறு நீதிபதிகள் உத்தரவிட்டனர்.
Leave your comments here...