மதுரை சர்வதேச விமான நிலையத்திற்கு தேவையான இடத்தை தமிழக அரசு கொடுக்கவில்லை – பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா பேச்சு..!
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற போதுமான இடத்தை தமிழ்நாடு அரசு கொடுக்கவில்லை என பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா தெரிவித்துள்ளார்.
காரைக்குடி, சிவகங்கை மாவட்டங்களில் கட்சி மற்றும் தனியார் நிகழ்ச்சியில் பங்கேற்பதற்கு இரண்டு நாள் சுற்றுப்பயணமாக பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா டெல்லியில் இருந்து தனி விமானம் மூலம் மதுரை வந்தார். அங்கு அவருக்கு பாஜக சார்பில் பூரண கும்ப மரியாதை வழங்கப்பட்டது.
பின்னர் மதுரை அவனியாபுரத்தில் உள்ள தனியார் விடுதியில் பாஜக நிர்வாகிகளுடன் அவர் ஆலோசனை மேற்கொண்டார். இந்த கூட்டத்தில், மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ரவி, மாநில தலைவர் அண்ணாமலை உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
பாரதிய ஜனதா கட்சியின் தேசிய தலைவர் திரு @JPNadda அவர்கள் மதுரையில் பல்வேறு துறைகளை சார்ந்த தொழிலதிபர்கள் மற்றும் பல்துறை வல்லுனர்களை சந்தித்து கலந்துரையாடினார்.#WelcomeNaddaJi pic.twitter.com/jW5Nh6JMT0
— BJP Tamilnadu (@BJP4TamilNadu) September 22, 2022
இதைத்தொடர்ந்து ஆலோசனை கூட்டத்தில் பேசிய பாஜக தேசிய தலைவர் ஜே.பி.நட்டா, இந்தியா கடந்த 8 ஆண்டுகளில் அதிவேகமாக வளர்ந்து வருகிறது என்றும் இந்திய நாட்டை சரியான அரசு ஆட்சி செய்கிறது என்றும் கூறினார். தொழிற் துறையில் முதலீடுகளை செய்வதால் நாட்டின் வளர்ச்சி அதிகரித்துள்ளது. இந்த வளர்ச்சி தமிழ்நாட்டிலும் அதன் வளர்ச்சியை காணமுடிகிறது.
மேக்கிங் இந்திய திட்டத்தில் 85% மக்கள் பலனடைத்துள்ளனர். பல்வேறு வளர்ச்சிக்கும், தொழிற்சாலை அமைப்பதற்கும் தமிழ்நாடு அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே வழங்கி உள்ளது. 164 கோடி கூடுதலாக மத்திய சுகதாரத்துறைக்கு வழங்கியுள்ளது. 392 கோடி ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்கும், மதுரை மல்லிக்கு புவிசார் குறியீடு கொடுத்து மதுரையின் வளர்ச்சிக்கும், கைவினை பொருட்கள் உள்ளிட்ட பல்வேறு வளர்ச்சிக்கும் மத்திய அரசு உதவி உள்ளது என கூறினார்.
மதுரை விமான நிலையத்தை சர்வதேச விமான நிலையமாக மாற்ற 550 கோடி ரூபாயை மத்திய அரசு ஒதுக்கியுள்ளது. அதற்காக 633.17 ஏக்கர் நிலத்தை மத்திய அரசு கேட்ட நிலையில், தமிழக அரசு 543 ஏக்கர் நிலத்தை மட்டுமே கொடுத்துள்ளது. இருந்தும் சர்வதேச விமான நிலையத்திற்கான பணிகளை மத்திய அரசு தொடர்ந்து மேற்கொண்டு வருகிறது என்றார். மதுரை எய்ம்ஸ் மருத்துவமனை கட்டுமானத்திற்கான பணிகள் 95% நிறைவடைந்து உள்ளன.
எய்ம்ஸ் மருத்துவமனைக்கு மொத்தம் 1,264 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது. கூடுதலாக தொற்று நோய் பிரிவுக்காக 134 கோடி ரூபாயும் ஒதுக்கப்பட்டுள்ளது. 750 படுக்கைகள் மற்றும் ஐ.சி.யூ. வசதியுடன் கூடிய 250 படுக்கைகள் அமைக்கப்பட உள்ளன. மாணவர் சேர்க்கை இடங்களும் 100-ல் இருந்து 250-ஆக அதிகரிக்கப்பட்டுள்ளது. விரைவில் கட்டுமானம் நடைபெற்று அதை பிரதமர் மோடி திறந்து வைப்பார் என மத்திய உள்துறை அமைச்சர் ஜே.பி நட்டா தெரிவித்தார்.
Leave your comments here...