மதுரை அருகே 500 ஆண்டு பழமையான வளரி வீரன் நடுகல் கண்டுபிடிப்பு..!
மதுரை மாவட்டம் தே.கல்லுப்பட்டி அருகே தி.குன்னத்தூரில் 500 ஆண்டு பழமையான வளரி வீரன் சிற்பம் கண்டறியப்பட்டது.
மதுரை சரசுவதி நாராயணன் கல்லூரி முதுகலை வரலாற்றுத் துறை தலைவரும், பாண்டியநாடு பண்பாட்டு மைய தொல்லியல் கள ஆய்வாளர் து.முனீஸ்வரன் தலைமையில் பேராசிரியர் லட்சுமண மூர்த்தி, ஆய்வாளர் அனந்தகுமரன் ஆகியோர் தி.குன்னத்தூர் பகுதியில் கள ஆய்வு செய்தனர்.
அப்போது, கிபி.16-ம் நூற்றாண்டைச் சேர்ந்த வளரி வீரன் கற்சிற்பம் கண்டறியப்பட்டது. இதுகுறித்து உதவிப் பேராசிரியர் முனீஸ்வரன் கூறும்போது, ”பிற்கால பாண்டிய மன்னர்கள் ஆட்சிக் காலத்தில் இவ்வூர் சிறு குன்றத்தூர் என்றழைக்கப்பட்டது. தற்போது குன்னத்தூர் என அழைக்கப்படுகிறது. வளரி என்பது பண்டைய காலத்தில் தமிழர்கள் பயன்படுத்திய ஒருவகை ஆயுதம். குறிப்பாக கால் நடைகளை திருடும் திருடர்களை பிடிக்கவும், போர்க்களத்தில் பயந்து தப்புவோரை உயிருடன் பிடிக்கவும் வளரியைப் பயன்படுத்தினர்.
வளரியை வளைதடி, திகிரி, பாறாவளை, சுழல்படை, கள்ளர்தடி, படை வட்டம் என்றும் அழைத்தனர். இங்கு 41 இஞ்ச் உயரம், 27 இஞ்ச் அகலமுடைய நடுகல்லில் ஆண், 2 பெண் சிற்பங்கள் உள்ளன. வீரன் வலது கையில் ஈட்டி, இடது கையில் வளரி பிடித்த நிலையில் உள்ளது. வீரனின் வலது, இடதுபுறம் பெண் சிற்பம் உள்ளதால், வளரி வீரன் இறந்தபின் இருவரும் உடன்கட்டை ஏறியதற்கான சான்றாக அறியமுடிகிறது.
Leave your comments here...