16 வயது இளம் பெண் கூட்டு பாலியல் : குற்றவாளிகளின் வீடுகளை புல்டோசர் வைத்து இடித்து அரசு..!
மத்தியப் பிரதேச மாநிலத்தில் 16 வயது இளம் பெண்ணை கூட்டு பாலியல் வன்புணர்வு செய்த குற்றவாளிகளின் வீடுகளை புல்டோசர் வைத்து இடித்து அரசு நடவடிக்கை எடுத்துள்ளது.
மத்திய பிரதேச மாநிலம் ரேவா மாவட்டத்தில் உள்ள நைகாரி என்ற பகுதியில் வசிக்கும் 16 வயது இளம்பெண் கடந்த சனிக்கிழமை மாலை ஆண் நண்பருடன் அருகே இருந்த கோயிலுக்கு வந்துள்ளார். கோயிலுக்கு அருகே உள்ள இடத்தில் இருவரும் பேசிக்கொண்டிருந்தபோது அப்பகுதிக்கு இரண்டு சிறார்கள் உள்ளிட்ட ஆறு பேர் வந்துள்ளனர். 16 வயது இளம்பெண் மற்றும் அவரது ஆண் நண்பரை தாக்கிய அந்த ஆறு பேரும், ஆண் நண்பரின் கண்முன்னே பெண்ணை கடத்தி சென்று அருகே உள்ள காட்டுப் பகுதியில் வைத்து கூட்டு பாலியல் வன்புணர்வு செய்துள்ளனர்.
அத்துடன் கடுமையாக தாக்கி அவரது நகை மற்றும் செல்போனை பறித்துக்கொண்டுள்ளனர். இந்த சம்பவத்தை வெளியே தெரிவித்தால் கொன்றுவிடுவோம் என எச்சரித்து அங்கிருந்து தப்பிச் சென்றுள்ளனர். கூட்டு பாலியல் வன்புணர்வுக்கு ஆளான பெண் மோசமான உடல்நிலையுடன் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார். இந்த சம்பவம் தொடர்பாக காவல்துறையிடம் புகார் அளித்த நிலையில், அப்பகுதியின் காவல்துறை கூடுதல் கண்காணிப்பாளர் அணில் சோன்கர் குற்றவாளிகளை விரைந்து கைது செய்ய தனிப்படை ஒன்றை அமைத்து உத்தரவிட்டுள்ளார். இதுவரை மூன்று பேர் கைது செய்யப்பட்டுள்ள நிலையில், மீதமுள்ள நபர்களை தேடும் பணியில் காவல்துறை ஈடுபட்டுள்ளது.
அத்துடன் கைதான மூன்று பேரின் வீடுகளை மற்றும் சொந்தமான இடங்களை மாவட்ட நிர்வாகம் மற்றும் காவல்துறை புல்டோசர் வைத்து இடித்துள்ளது. மீதமுள்ள மூன்று பேரை கைது செய்தவுடன் அவர்கள் உடமைகள் மீது புல்டோசர் நடவடிக்கை எடுக்கப்படும் என நிர்வாகம் தெரிவித்துள்ளது.உத்தரப் பிரதேசத்தில் முதலமைச்சர் யோகி ஆதித்யநாத் பாலியல் குற்றங்களில் ஈடுபடுவோரின் உடமைகள் மீது இது போன்ற புல்டோசர் நடவடிக்கைகளை மேற்கொண்டு கவனம் பெற்ற நிலையில், இதே தண்டனை யுக்தியை தற்போது மத்தியப் பிரதேச அரசும் கையில் எடுத்துள்ளது.
Leave your comments here...