அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்ய விரைவில் புதிய விதிமுறை..!
மத்திய அரசு ஊழியர்கள் சொத்து விவரங்களை தாக்கல் செய்வதற்கான புதிய விதிகள் விரைவில் பரிந்துரைக்கப்பட இருப்பதாக மத்திய அரசு பணியாளர் மற்றும் பயிற்சி துறை தெரிவித்துள்ளது.
கடந்த 2013ம் ஆண்டில் கொண்டு வரப்பட்ட லோக்பால், லோக் ஆயுக்தா சட்டப் பிரிவு 44ன் படி, அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து விவரங்களை ஒவ்வொரு ஆண்டும் மார்ச் 31ம் தேதி அல்லது ஜூலை 31ம் தேதிக்குள் அறிவிக்க வேண்டும். முதலில், 2014ம் ஆண்டு செப்டம்பர் 15ம் தேதி வரை சொத்து விவரங்களை தெரிவிக்கலாம் என்று அறிவிக்கப்பட்ட நிலையில், பிறகு அது டிசம்பர் 1, 2016ம் ஆண்டு வரை நீட்டிக்கப்பட்டது. அதே நேரம், 2016ம் ஆண்டு வெளியிட்ட உத்தரவில், அரசு ஊழியர்கள் தங்களின் சொத்து விவரங்களை தற்போது தெரிவிக்க வேண்டியதில்லை என்று கூறப்பட்டுள்ளது.
இந்நிலையில், தகவல் அறியும் உரிமை சட்டத்தின் கீழ் இது குறித்த தகவல்களை கேட்டு பிடிஐ செய்தி நிறுவனம் விண்ணப்பித்தது. இதற்கு பதிலளித்த மத்திய தகவல் ஆணையம், ‘இது தொடர்பான புதிய விதிகளை ஒன்றிய அரசு பணியாளர் மற்றும் பயிற்சி துறை விரைவில் உருவாக்க உள்ளது.
மேலும், இந்த புதிய விதிகள் திருத்தப்பட்ட லோக்பால் சட்டத்தின் அடிப்படையில் உருவாக்கப்பட்ட இருக்கிறது,’ என தெரிவித்துள்ளது. 6 ஆண்டுகளாகியும், அரசு ஊழியர்களின் சொத்து விவரங்களை அறிவிப்பதற்கான விதிமுறைகளை மத்திய அரசு பணியாளர் துறை இன்னமும் உருவாக்காமல் இருப்பது சர்ச்சையாகி இருக்கிறது.
லோக்பால் குழுவின் முதல் தலைவராக பினாகி சந்திர கோஷ் 2019ம் ஆண்டு நீதிபதி நியமிக்கப்பட்டார். கடந்த மே மாதம் அவர் ஓய்வு பெற்ற பிறகு, 4 மாதங்களாக அப்பணியிடம் நிரப்பப்படாமல் உள்ளது. அதேபோல், 8 உறுப்பினர்கள் வரை அனுமதிக்கப்பட்ட நிலையில், தற்போது 6 பேர் மட்டுமே உள்ளனர். 2 பணியிடங்கள் 2 ஆண்டுகளுக்கு மேலாக காலியாக உள்ளன.
Leave your comments here...